பாரம்பரிய மீன்பிடித் தொழிலை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவு; உடனடியாக திரும்பப் பெறுக: வைகோ வலியுறுத்தல்
பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தைப் பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் 'கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)' சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: ''பாஜக அரசு 'கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)' சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது. மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன்பிடித் தொழிலுக்கு இச்சட்ட முன்வரைவு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றது. இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்து, நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200...