கவிதை

குழந்தை மனது

200views
கூரை வீட்டுக்குள்
கொட்டும் மழை;
குழந்தை மனதிற்குள்
குடைக்குள் மழை!
சாலையில் நேற்றய
மழைநீர் வெள்ளம்;
குழந்தை மனதிற்குள்
காகிதக் கப்பல்!
நிரந்தர வேலையில்லை
அப்பாவின் நடைமுறை;
குழந்தை மனதிற்குள்
ஞாயிறு விடுமுறை!
வேளைக்கு உணவில்லை
அம்மாவின் வேதனை;
குழந்தை மனதிற்குள்
சாம்பலில் பூனை!
கொடுக்கப் பாலில்லை
அம்மாவின் ஏக்கம்;
குழந்தை மனதிற்குள்
விரல்சூப்ப விருப்பம்!
தெருவிளக்கில் படிப்பு
அண்ணனின் அவதி;
குழந்தை மனதிற்குள்
ஞானத்தின் ஜோதி!
அக்காவின் உடைந்த
வளையல் குவியல்;
குழந்தை மனதிற்குள்
வானவில் சிதறல்!
ரயிலில் காசில்லா
முன்னகரும் பயணம்;
குழந்தை மனதிற்குள்
பின்னகரும் மரங்கள்!
மனித நேயமில்லா
மாநகர மக்கள்;
குழந்தை மனதிற்குள்
நகரும் பொம்மைகள்!
துயரங்கள் யாவும்
உட்புகா பிம்பமாய்;
குழந்தை மனதிற்குள்
மாயாக் கண்ணாடி!
  • சு. அனந்த பத்மநாபன்

 

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!