கோயில்கள் - தல வரலாறு

சித்த புருஷர் நெரூர் சதாசிவ  ப்ரம்மேந்திராள்  அவர்கள்.

839views
ம்முடைய பாரதநாடு ஆதிகாலம் தொட்டு, ஆன்மீகத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இப்புண்ணிய பூமியில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மண்ணுக்கும் ஆன்மீகக் கதைகள் நிறைய உண்டு. இக்கதைகளில் எவ்வளவோ எழுத்து வடிவில், ஓலைச்சுவடிவடிவில் இருக்கின்றன. இத்தனை இருந்தாலும் இன்றும் ஆன்மீக அனுபவத்தை கொடுத்துக்கொண்டு இருப்பவர்கள் சித்தர்களே. அவர்களில் பலபேர் ஸ்தூல சரீரத்தில் இல்லாவிட்டாலும், சூக்‌ஷூமமாக இன்று பலபேருக்கு அனுக்கிரஹம் செய்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.அப்படிப்பட்ட மஹான்,சித்த புருஷர் ஆகிய சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்களைப்பற்றி தான் நாம் தெரிந்துக் கொள்ளப் போகின்றோம்.
இவர்களுக்குள் அப்படி ஒரு ஆன்மீக  சக்தி எப்படி வந்தது  என்று யோசித்துப் பார்த்தால், ஒன்று மட்டும் மனதிற்கு தோன்றுகின்றது.இவர்கள் அனைவரும் தனக்காக ஆன்மீக வரத்தைக் கேட்காமல்தன்னை சுற்றி உள்ள மக்கள் மன நிம்மதியுடன் வாழவேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய தவ வலிமையினால், இறைவனிடம் பல சூக்‌ஷூம ரகசியங்களை கற்றுத் தெரிந்துக்கொண்டார்கள்.அப்படிப்பட்ட மஹான் தான் சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்களும்.
ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் அவர்கள் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான்.  அதாவது கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, சோமசுந்தரஅவதானியாருக்கும்,  பார்வதி அம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். அவருடைய இயற்பெயர் சிவராமகிருஷ்ணன். அவருக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் இருந்தது. அதனால் ஒரு ஞானக் குழந்தையாக வளர்ந்தவர்.அவருடைய  15வது வயதில் மீனாட்சி என்ற 7 வயது பெண்ணை, அவருடைய பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றார்கள்.  அது ஒரு  பால்ய விவாகம். அந்தப் பெண் குறிப்பிட வயது வந்தவுடன் பருவமடைகின்றாள்.
அப்பொழுது அவர் அம்மா வீட்டில் விருந்துக்குத் தயார் செய்துக்கொண்டு இருந்தாராம்.  அன்று அவர் அம்மாவிடம் ரொம்பப் பசிக்கின்றது என்று கேட்ட போது,  அவருடைய அம்மா கோபத்துடன், அப்படி என்ன பசி உனக்கு,  சிறிது பொறுமையாக இரு என்று கூறினாராம். உடனே சதாசிவர் மனதில்  இந்த சம்சார சாஹரத்தில் நுழைந்தால் வெளியவே வரமுடியாது என்று அவருக்கு தோன்றுகின்றது. உடனே அதனை வெறுத்து  வீட்டை விட்டு வெளியேறி துறவுக்கோலம் பூண்டு ஆன்மீகத்தைத் தேடி அலைகின்றார்.
சதாசிவர், திருவிசை நல்லூரில் பிறந்தவர். அவர்  அங்கு உள்ள  மஹா வித்வானிடம் கல்வி கற்றார்.  சதாசிவரின் ஞான குரு ஸ்ரீ ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 57 வது பீடாதிபதி ஆவார். அவரிடமும் சகல வேத சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். பீடாதிபதியின் சமாதி ஸ்தலம் திருவெண்காட்டில்  உள்ள  மணிகர்ணிகை நதிக்கரையோரம் அமைந்துள்ளது. சதாசிவ பிரம்மேந்த்ரர் காமகோடி பீடத்தின் குருபரம்பரை பற்றி குருரத்னமாலிகா என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
சதாசிவரின் பிறந்த வீடு திருவிசைநல்லூரில் காமகோடி பீடத்தின் பராமரிப்பில் உள்ளது. அவர் பலகீர்த்தனைகளை இயற்றி உள்ளார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மானஸ சஞ்சரரே,  காயதி வனமாலி, பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி ரஸனே, க்ரீடதி வனமாலி கோஷ்டே,ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே   என, பல ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் இன்றளவும் கர்நாடக இசைக் கச்சேரிகளிலும், சம்ப்ரதாய பஜனைகளிலும்  இடம்பெறுகின்றன.
மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்றவித்வான்களை எல்லாம் வாத திறமையால் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.
உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து  மவுனத்தைக்கடைப்பிடித்து  வந்தார். யாராவது அன்னம் பிஷை  அளித்தால், தன் கைகளால் ஏந்தி பெற்று உட்கொள்வார். அதையும் காலப்போக்கில் குறைத்துக் கொண்டு அவதூதராக காவிரிக்கரையோரத்தில், மணல் திட்டுக்களில், பெரிய மரங்களுக்கு அடியிலும், செடிப்புதர்களிலும் மக்கள் கண்களுக்கு புலப்படாதவாரு வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம் புதுக்கோட்டைக்கு அருகில் திருவரங்குளம்  காட்டுப் பகுதியில் ப்ரம்மேந்திராள் சஞ்சாரம் செய்தபோது, அந்நாட்டு மன்னர்  திரு.விஜயரகுநாதத் தொண்டைமான் அவரைக் கண்டதாகவும், தனக்கு உபதேசம் அருளும்படி கேட்டுக்கொண்டார்.. நின்ற இடத்திலேயே  உள்ள மணலில் தக்‌ஷி‌ணாமூர்த்தி ஸ்லோகத்தை எழுதி உபதேசம் செய்தாராம். இன்றளவும் புதுக்கோட்டை  அருகில் உள்ள  ப்ரகதாம்பாள் கோவிலில், அம்பாள் சன்னிதிக்கு நேர் எதிரே அம் மணலை வைத்துள்ளார்கள்.
அனுதினமும் எல்லாத்தெய்வங்களுக்கு ஆராதனை நடைபெறும் பொழுது,அந்த உபதேசம்செய்த மணலுக்கும் தீபராதனை நடைபெறுகின்றது.  அவருடைய லீலைகள்  எண்ணற்றவை நிகழ்ந்திருக்கின்றன.அதில் இதுவும் ஒன்று.காவிரியாறு ஈரோட்டைத் தாண்டி கொடுமுடி எனும்  தலத்துக்கு வருகின்றஇடத்தில், ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் அகத்தியம்பாறை என்றொரு இடம் அமைந்துள்ளது.
அந்த ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்தப் பாறையின் மீது காவிரி வெள்ளம் மோதி, கிழித்துக் கொண்டு இருபுறமாக விரைவாகச் செல்லும். அந்த பாறையின் மீது தான்,சதாசிவ பிரம்மேந்திராள் வந்து அமர்ந்து தியானத்தில் இருப்பாராம்.  அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தான் த்யானத்தில் இருப்பார்.. அப்படி அவர்  தன்னை மறந்து, இவ்வுலகின் புறவாழ்வை,  மறந்து, தியான நிலையில்  ஈடுபட்டிருக்கும்போது சுற்றுப் புறத்திலோ, தன் உடலுக்கோ எது நேரினும் அதனை உணரமுடியாத ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்று விடுவார்.அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் சதாசிவர்.
அப்பொழுது  ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, ஒவ்வொரு நொடியும்  அதிகரித்து கடைசியில் பாறையின் மீது  தியானத்தில் இருந்த சதாசிவரை அடித்துக் கொண்டு போய்விட்டது. அவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா, அவர் உடல் எங்கு அடித்துச் செல்லப்பட்டது  என ஒருவருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ஆற்று வெள்ளம் வற்றத் தொடங்கியது. பாறையில் அமர்ந்திருந்த அந்த மஹான்  எங்கேஎன்று சிலர் தேடத் தொடங்கினார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் எங்கு சென்றாரோ என மக்கள் தேடத்தொடங்கினார்கள். எங்கு தேடியும் அவரோ, அவர் உடலோ கிடைக்கவில்லை. கடைசியில் மக்கள் தேடுவதை  நிறுத்திக்கொண்டனர்.
அந்த நாட்களில் வீடு கட்ட,  மணலை ஆற்றிலிருந்து வண்டிகளில் எடுத்துக்கொண்டு போவார்கள்.ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் நிறைய வந்துக்கொண்டு இருந்தன. ஆற்றின் ஒரு புறத்தில்  தோண்டினர். மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோஒரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதைஉணர்ந்தான்.உடனே அந்த இடத்தை ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான். அங்கு உள்ளே அமர்ந்த நிலையில் அவர் தவம் செய்திக் கொண்டிருப்பது தெரிந்தது..  அவர் தலையில் மண்வெட்டியின் வெட்டுப் பட்டு ரத்தம் கசிந்தது.அவரைச் சுற்றி இருந்த மணலை விலக்கி, அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திராள்  அவர்கள்.
இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்.பரப்பிரம்மமான ஞானி ஒருவர்  மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிகின்றது, அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் காட்டுத் தீ போல் பரவியது.சுற்றி உள்ள கிராமத்து மக்கள் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர். கொஞ்ச நாளைக்கு முன்னாடி,கொடுமுடிக்கு அருகில் ஆற்றுக்கிடையே இருந்த பாறையில் ஒரு ஞானி தவத்தில் இருந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றார்கள். இவர் அவராகத்தான் இருக்க வேண்டும்.
இவர்தான்சதாசிவபிரம்மேந்திரர். ஞானி அல்லவா, உணவு, நீர் இன்றி உயிர்வாழும் சக்தி வேறு யாருக்கு உண்டு. அவரை மணலுக்குள்ளிருந்துவெளியே கொணர்ந்து, உடலுக்கு சூடேற்றி, உண்ண ஆகாரம் கொடுத்து அவரை மக்கள் சுயநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.சுய நினைவு திரும்பி சுற்றிலும் நிற்கும் மக்களை ஒருமுறை சுற்று முற்றும் பார்த்து தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்பதைக் கூட உணராமல், உடனே புறப்பட்டு யாரிடமும் எதையும் கேட்காமல் மெளனமாக  கால்போன போக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டார் இந்த ஞானி சதாசிவ பிரம்மேந்திரர்.சதாசிவர் அவர்கள் ஒரே காலத்தில் பல இடங்களில் பல பேருக்கு அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார்.
ஒரு நாள் தன்  சீடர்களை அழைத்து,காசியிலிருந்து ஒரு ப்ரம்மச்சாரி ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வருவான். அப்படி வரும் நாளே  எனக்கு நிர்யாண(மரண) திதி நிகழும். அப்பொழுது இந்த உடலை, அகண்ட காவிரியின் தென்கரையில் அமர்ந்துள்ள நெரூரில் சமாதி வைத்து, அதன் மீது வில்வ மரச் செடியை வைக்கச் சொன்னாராம். அந்த ப்ராமணர் கொண்டு வரும் லிங்கத்தைப் பக்கத்தில் ப்ரதிஷ்ட்டை செய்யச் சொன்னாராம். அவர் சொன்னபடியே காசியிலிருந்து வந்த ப்ராமணர் லிங்கம் கொண்டுவந்தார். ப்ரம்மேந்திராள் கூறியபடி அவர் பூத உடலை நெரூரில் வைத்தனர்.. சிவலிங்கத்தைப்ப்ரதிஷ்டை செய்தார்கள்..அதே போல் சித்திரை மாத தசமி நாளில் ஜீவசமாதி அடைந்த இடத்தில் வில்வமரம் முளைத்து, அப்பகுதி மக்களை  அதிசயப்படுத்தியது. சிவராமன் என்கிற சதாசிவர் கடவுளோடு ஐக்கியமானார்.
அவரது சிந்தனை, சொல், செயல் யாவும்பிரம்மத்தை நோக்கியத் தேடலாக மாறியது. இவரது நிலை கண்டு சிலிர்த்த, காஞ்சி மஹாகுரு இவரை’பிரமேந்திரர்’ என்று அழைத்தார். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் ஜீவசமாதி அடைந்த பெருமை நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்களுக்கு மட்டுமே சேரும்.நெரூரில் தன் ஸ்தூல தேகத்தையும், மானமதுரையில் தன் சூக்‌ஷூம தேகத்தையும், கராச்சியில் காரண தேகத்தையும் விட்டுவிட்டு தனிப் பெரும் ஜீவ சமாதி அடைந்தவர். இவர் மறைந்து 120 வருடங்கள் கழித்து ஒரு அதிசயம் நடந்தது. சிருங்கேரியில் பரமாச்சாரியாராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு பிரம்ம ஞானத்தில் ஒரு சந்தேகம் உண்டானது. அதை கேட்டுக்கொள்ள அவர் நெரூர் வந்தார்.மூன்று நாள் கடும் தியானத்துக்குப் பிறகு, அவரது சந்தேகங்களை ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் தீர்த்து அனுப்பி வைத்தார். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர்இந்த சதாசிவ பிரம்மேந்திரர் என்கிறார்கள்.
இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் ஒரு முறை பட்டுப் போனது. அவருடைய கருணையினால் இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். நெரூர்காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும்,தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகுடன் கூடிய இடத்தில் அமைந்திருக்கிறது இவருடைய ஜீவ சமாதி.நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள் கோவில், கரூர் மாவட்டத்தில் இருந்து 13 கிலோ  மீட்டர் தொலைவில் திருமுக்கூடலூர் ரோட்டில் அமைந்துள்ளது.. மிகவும் ரம்யமான சூழ்நிலையில் காவிரிக்கை அருகில் இருக்கின்றது…இக்கோவிலின் உள் ப்ரகாரத்தில் முதலில் ஒரு மண்
பிள்ளையார் உள்ளது.அது எத்தனையோ வருடங்களுக்கு முன் தானாக தோன்றியதாக அங்குள்ள மக்கள் சொல்கின்றனர்.  சிவன் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் தனித்தனியே இருக்கின்றது. அதன் பின்புறம் தான் நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராளுடைய ஜீவசமாதி உள்ளது.இன்றுவரை அவருடைய அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எண்ணற்ற பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருளாசி செய்து வருகிறார் மகான் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர்.ஒவ்வொரு மே மாதமும் அவருடைய ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது.
என் அம்மாவின் பிறந்த ஊர் நெரூர். என் தாத்தா அதாவது என் அம்மாவின் அப்பா பெயர் திரு. கோபால க்ருஷ்ண மூர்த்தி என்ற டிண்டோ தாத்தா. நெரூர் கோவிலுக்காக பல கைங்கர்யமும், பஜனையும் பண்ணியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாங்களும் நிறைய முறை அவருடைய ஆராதனையில் கலந்துக்கொண்டு இருக்கின்றோம். கிராமத்து மக்கள் பலர் தங்கள் வயக்காட்டில் விளைந்த நெல்லை முதலில் அவருக்கு கொடுக்கின்றனர். சிலர் முளைப்பாரி எடுத்து வந்து தங்கள் ப்ரார்த்தனைய  நிறைவேற்றுகின்றனர்.  சுற்றியுள்ள கிராமத்து மக்கள் சன்னாசி சாமி என்றும்  அழைக்கின்றனர்..ஒவ்வொரு வருட ஆராதனையின் போது அன்னதானம் பத்து நாளும் வழங்கப்படும். கடைசிநாளன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அப்பொழுது எல்லாரும் சாப்பிட்டு முடித்தவுடன், அந்த இலையை எடுக்காமல் மக்கள் தங்கள்  கோரிக்கைகளையும், ஆசைகளையும், சதாசிவ ப்ரம்மேந்திராள் நிறைவேற்றியதற்காக அந்த இலையில் அங்கப் ப்ரதட்ஷிணம் பண்ணுகின்றார்கள்.
இந்தத் தமிழ் வருடமான பிலவ வருடம்  வைகாசி 7ம் தேதி  அதாவது மே  மாதம் 21ம் தேதி  நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை வருகின்றது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அவரவர் நம்பிக்கையில் யாரும் குறைசொல்லமுடியாது.
நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள் கோவிலில் எண்ணற்ற சினிமா கலைஞர்கள்,பாடகர்கள், ஆன்மீகச் சான்றோர்கள் வந்துதிருக்கின்றார்கள்.
தென்னாடுடைய
சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி போற்றி..
  • சுபஸ்ரீ ஸ்ரீராம்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!