விளையாட்டு

ஒலிம்பிக் இந்திய அணிக்கு ரூ.18 கோடி ஸ்பான்சர்… பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

43views

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்தாண்டில் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை) நடைபெற்றது. முன்னதாக, ஜூன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (IOA) ஆதரவளிக்க அளிப்பதாக தெரிவித்தது. அதன்படி, பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற ஒவ்வொரு வடிவத்திலும், விதத்திலும் ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த உணர்வில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திடம் (IOA/ MYAS) இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், பிசிசிஐயின் அபெக்ஸ் கவுன்சில், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்து, 10 கோடி ரூபாய் பணமாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.” கூறியிருந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோய்க்கு பின் முதன்முதலாக கூடும் பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ அதன் கிரிக்கெட் அல்லாத செலவினங்கள் ரூ 22 கோடி வரை என்று குறிப்பிட்டது. அந்த செலவினங்களில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சுமார் 18 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்ட விளம்பர நிறுவனத்துக்கு ரூ.7 கோடி, ஒலிம்பிக் பிரசார டி-ஷர்ட்டுகளுக்கு ரூ.98 லட்சம், “இலக்கு உங்கள் முன்னால் உள்ளது, வெற்றியாளராகத் திரும்புங்கள்” என்ற உத்வேகக் கீதத்தை இசையமைத்து பாடிய பாடகர் மோஹித் சவுகானுக்கு ரூ.70 லட்சம், ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு ரூ.68 லட்சம், பதக்கம் வென்றவர்களுக்கான ரொக்க விருதுகளுக்கு ரூ.4 கோடி, விளையாட்டு வீரர்களுக்கு ‘பிஎம் கேர்ஸ்’ நினைவு பரிசுகள் வாங்க ரூ.5 கோடி உட்பட மொத்தம் ரூ.18 கோடிக்கும் அதிகமான ஒலிம்பிக் செலவுகளை வாரியம் பட்டியலிட்டுள்ளது.

இவை தவிர, கொரோனா தொற்றுநோய்களின் உச்சத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு நிதியளிப்பதற்காக பிசிசிஐ ரூ 3.8 கோடியையும் பட்டியலிட்டுள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில், செயலர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமல், இணைச் செயலர் ஜெயேஷ் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அபெக்ஸ் கவுன்சில் கூட்டம், இந்த செலவுகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது.

“மற்ற விளையாட்டுகளுக்கு உதவுவது எங்கள் பொறுப்பு. அனைத்து உறுப்பினர்களும் இந்த செலவிற்கு ஒப்புக்கொண்டனர், ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட லோதா கமிட்டியால் உருவாக்கப்பட்ட இந்திய வாரியத்தின் புதிய அரசியலமைப்பு, கிரிக்கெட் வாரியம் மற்ற விளையாட்டுகளை ஆதரிக்குமாறு அறிவுறுத்துகிறது.

இந்த கூட்டத்தில், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை உயர்த்தவும் அபெக்ஸ் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​​நாட்டின் முதன்மையான உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 கோடி வழங்கப்படுகிறது. புதிய பரிசுத் தொகை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

“திருத்தப்பட்ட பரிசுத் தொகையை முடிவு செய்யும் அதிகாரத்தை அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு வழங்க அபெக்ஸ் கவுன்சில் முடிவு செய்துள்ளது” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஊடக உரிமை விற்பனை மூலம் ரூ.48,390 கோடி வருவாய் ஈட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் உள்நாட்டு விளையாட்டுகளில் டிசிஷன் ரிவியூ சிஸ்டத்தை (டிஆர்எஸ்) அறிமுகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!