இலக்கியம்சிறுகதை

புதுசா ஒரு பிறந்த நாள்…

67views
கார் பொறுமையாக சென்று கொண்டிருந்தது .
காரை ஓட்டிக் கொண்டிருந்த முருகேசன் திரும்பி மனைவியை பார்த்தார் ..அவளது முகத்தில் ஏகப்பட்ட சலணம். வழக்கத்திற்கு மாறாக வாய்மூடி வரும் கௌசல்யாவின் மௌனம் அவர் அவரை கலவரப்படுத்த
“என்ன கௌசல்யா !என்ன ஆச்சு ?உடம்பு சரியில்லையா ?” அவரது கேள்வியில் சற்று நிதானப்பட்டவள்,
 “இன்று கோர்ட்ல ஒரு கேசுங்க… ரெண்டு பேரும்  காதல் திருமணம் செய்து இரண்டு வருஷம் ஆகுது .அதுக்குள்ள டைவர்ஸ் வேணும்ன்னு வந்து நிக்கிறாங்க..
இதுதான் இப்போ சகஜமாய் இருக்கே.. காதல் இப்ப வெறும் உடம்பு சம்மந்தப்பட்ட விஷயமா தான் இருக்கு ! அந்த மோகம் குறைந்த உடனே பிரிஞ்சிடுவது நல்லதுன்னு முடிவு செய்கிறார்கள். “

“இதுக்கு போயா நீ இத்தனை கஷ்டப்படுற?”
“இல்லிங்க இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உசுரையே வச்சுக்கிட்டு இருக்காங்க…”
“என்ன சொல்ற நீ! பிறகு ஏன் ?”
“அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு..”
“என்ன தான் ஆச்சு?”
“இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலித்து பெத்தவங்க கிட்ட போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் செய்திருக்காங்க. உடனே தனிக்குடித்தனம். ரெண்டுபேரும் சாஃப்ட் வேர் இன்ஜினியர்ங்கிறதால கை நிறைய சம்பளம். ஆடம்பர பங்களா.. சந்தோஷமா போய் கிட்டு இருக்கிறப்ப ஒரு நாள் இவ காபி போட்டு எடுத்து வரும்போது பைல் பார்த்து கிட்டு இருந்த சித்தார்த் கையை உயர்த்தி நெட்டி முறிக்க காபி பைலுல ஊற்றி ஏக களேபரம். ரொம்ப முக்கியமான பைல்ங்கிறதால  சித்தார்த் உணர்ச்சி வசப்பட்டு ஓங்கி அறைஞ்சிட்டான்.”
“ஐயோ.. அப்புறம்….?”
“வாழ்க்கையில முதல் அடி ..இதுவரை யாரும் அடித்ததே இல்லை ! வீட்டில  ஒரே பொண்ணுன்னு செல்லம் . ஸ்கூல்ல நல்ல படிக்கிறாள்ன்னு செல்லம் ..கல்லூரியிலும் இவள் தான் டாப்.. கரகரன்னு கண்களில் இருந்து கண்ணீர் வழிய நின்றவளைப்பார்த்ததும் பதறிப்போன சித்தார்த் மன்னிப்பு கேட்க இவளும் தன்னோடு தவறு புரிஞ்சி சமாதானம் ஆயிட்டா.”
“அப்பாடா! ஆமா …அப்புறம் எதுக்கு இந்த டைவர்ஸ் ?”
“சொல்லிட்டு தானே இருக்கேன்? கு றுக்கால புகுந்து எதுக்கு இந்த கேள்வி?”
“சாரி யுவர் ஆனர் ..சொல்லுங்கள் தாயே ! எல்லா ஆம்பளையும் என்னைய மாதிரி இருந்துட்டா பிரச்சனையே இல்ல.  குடும்ப நல வழக்காடு மன்றத்துக்கு அப்புறம் மூடு விழா தான் ! உனக்கெல்லாம் வேலையும் கிடையாது .
“போதுமே !நீங்க செய்யற அட்டகாசத்தை எல்லாம் நானா இருக்கறதுனால பொறுத்துக்கிட்டு போறேன்.. வேற ஒருத்தியா இருந்தா ……”
“அய்யய்யோ !வேணாம்பா …இன்னொருத்தியா !தாங்காது !!”
“எதுக்கு இப்ப இந்த கூத்தடிக்கிறீங்க ? நான் எவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் ?
“சரி …சரி.. யூ பிரசீட் !”
“ஏதோ திருவிழாவுக்கு அம்மா வீட்டுக்கு போன சரண்யா அம்மா கிட்ட இத பத்தி சும்மா ஜாலியா சொல்ல …என்னது உன்னை அடிச்சானா? எவ்வளவு செல்லம்மா வளர்த்தேன் ? அவன் எப்படி உன்னை அடிக்கலாம்? இதுக்கு தான் நான் அப்பவே தலப்பாட அடிச்சுக்கிட்டேன். காதல் எல்லாம் வேண்டாமுன்னு… நீ கேட்டியா?”
“அய்யய்யோ… அம்மா! இது எப்பவோ நடந்து முடிந்த விஷயம் .சும்மா விளையாட்டா உங்க கிட்ட சொன்னேன். அதை நானே பெருசா நினைக்கல ..என்னால அவர் மேனேஜர் கிட்ட செம டோஸ் வாங்கினார். ஆனால் அப்ப கூட என்ன திட்டல . அடிச்சதுக்காக நானே போதும் போதும் சொல்ற அளவுக்கு மன்னிப்பு கேட்டுட்டாருமா… விடேன்.. ஏய் நிறுத்திடி கட்டுன பொண்டாட்டி அடிக்கிறவன் ஆம்பளையா உனக்கு ஒன்னும் தெரியாது அவனை… அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன் … போலீஸ்ல சொல்லி …அவனை லாக்கப்ல தள்ளி …மனித உரிமை கழகம் …மகளிர் ஆணையம்னு புகார் மேல புகார் கொடுத்து கலேபரமானதுல அவனோட வேலை போயிடுச்சு.”
“அடக்கடவுளே!..”
“வாழுற பொண்ண தாயே கெடுத்தான்னு சொல்லுவாங்கல்ல …அது மாதிரி இரண்டு வீட்டு உறவு முறையும் வரிஞ்சு கட்டிக்கிட்டு பிரித்து விட தயாரா இருக்கு   ஆனா இவங்க ரெண்டு பேரு கண்ணுலையும் தெரியற ஏக்கம் இருக்கே.. அதை என்னால சகிச்சுக்க முடியல . எதுவுமே சொல்லாம மௌனமா ரெண்டு பேரும் விடுற கண்ணீர் என்ன சுடுதுங்க …”
“உங்க கோர்ட்டு இந்த மாதிரி நிறைய பேரோட கண்ணீரத்  தாங்கி நிக்குது இல்லை …..”
“ஆமாங்க !என்ன செய்யறது ? எப்படியாவது ரெண்டு பேரையும் பேச வச்சுட்டா போதும். அதுக்கு ரெண்டு உறவும்  நிச்சயமா சமாதிக்க மாட்டாங்க.”
“சரிம்மா …அதுக்காக நீ கஷ்டப்பட்டு உன் உடம்பு கெடுத்துக்காதே… உண்மையான அன்பு என்னைக்கா இருந்தாலும் ஒன்னா சேரும்.”
இரவு உணவு மௌனமாகவே முடிந்தது .
 றுநாள் காலை அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்க
“அம்மா… அம்மா ..எனக்கு ஒரு 500 பணம் கொடுங்க….”
“எதுக்குடா ?”
“என் பிரண்டுக்கு பர்த்டே மா .”
“யாருக்கு?”
“ நம்ம சுரேஷுக்கு …”
“போன மாசம் தானே அவனுக்கு பிறந்தநாளுன்னுட்டு வாங்கிட்டு போனே? “
“அப்ப சதீஷ்க்குன்னு வச்சிக்குங்க..”
“டேய்! என்னடா இது? பார்ட்டி வைச்சி நம்மளுடைய எண்ணங்களை பகிர்ந்துக்கும் போது ஏற்கனவே போட்டுகிட்ட சண்டைகள் கூட காணாமல் போய்விடும் .அப்புறம் நாங்க மறுபடியும் பிரண்ட் ஆயிடுவோம் ..”
“அம்மா! ப்ளீஸ்மா! “
500 எடுத்து அவனிடம் நீட்டியவள்.
“என்னங்க! நாளன்னைக்கு எனக்கு பிறந்தநாள். ஒரு பார்ட்டி ஏற்பாடு
செய்யுங்க “ – என்றாள்.
“என்ன விளையாடுறியா ? உனக்கு மார்ச் ஏழு தானே பிறந்தநாள் ? இல்லாத பிறந்தநாளுக்கு ஒரு பார்ட்டி வேற ஏற்பாடு செய்ய சொல்றே? “
 “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி …..பாட்டிக்கு வரப் போறது யாரு தெரியுமா ? நம்ம சித்தார்த்தும் சரண்யாவும் தான் !
“ ரெண்டு பேரும் சந்திக்க உனக்கு புதுசா ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஒரு கேக் போதும்ல ?”
“ஒரே ஒரு ஒட்டியானம் வாங்கி கொடுத்திடுங்களேன்… “
“உன் இடுப்புக்கா ?!அய்யய்யோ !தாங்காது .ஆப்ட்ரால் ஒரு கல்லூரியில் பேராசிரியர் தான் நானு! என்ன விட்டுடுமா தாயே! “
என ஓட மகிழ்ச்சியுடன் விரட்டினாள் கௌசல்யா .
மனதுக்குள்ளே இருந்த வலி காணாமல் போய் நல்லதொரு முடிவுக்காக தவம் கிடக்க ஆரம்பித்தது.
கவிதாயினி. கலாவிசு
புதுவை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!