தமிழகம்

ஈஷாவில் கோலாகலமாக நடந்த மாட்டு பொங்கல் விழா

88views
ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு ஜனவரி 16 அன்று கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகவும், உழவர் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் விழா ஈஷாவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை கோலகலமாக நடைபெற்றது.

இதில் மலைவாழ் பழங்குடி மக்கள், கிராமப்புற மக்கள், விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள், வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், ஈஷாவில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, நவதானியங்கள் போன்றவை அர்ப்பணிக்கப்பட்டன.

விழாவின் முக்கிய அம்சமாக, அழிந்து வரும் நம் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக, நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காங்கேயம், காங்கிரிஜ், கிர், ஓங்கோல், தார்பார்க்கர், தொண்டை மாடு, வெச்சூர், உம்பளாச்சேரி உள்ளிட்ட 23 வகையான பாரம்பரிய நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும், அந்த மாட்டு இனங்களின் பூர்வீகம், சிறப்பு பற்றிய குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

உலகில் மிக குட்டையான நாட்டு மாட்டு இனத்தில் இருந்து, மிக உயரமான நாட்டு மாட்டு இனமும் பார்வைக்கு வைக்கப்பட்டது. பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராட்ஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை ஈஷா பல ஆண்டுகளாக பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!