சினிமா

மலையாள திரையுலகிலிருந்து தமிழில் களமிறங்கும் ‘ஆர் கே வெள்ளிமேகம்’

175views
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் ‘ஆர் கே வெள்ளிமேகம்’ என்ற பெயரில் படமெடுத்து, அதை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியுள்ள சைனு சாவக்கடன் ஆறாவது படமாக சைக்கோ திரில்லர் சப்ஜெக்டில், கமர்ஷியல் அம்சங்களுடன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் விஜய் கௌரீஷ், ரூபேஷ் பாபு, சுனில் அரவிந்த், சுப்பிரமணியபுரம் விசித்திரன், அதிரா முரளி, சார்மிளா, வின்சென்ட் ராய் தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் பரிச்சயமான கொட்டாச்சி, சின்ராசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை யதுகிருஷ்ணன் எழுத, கோவை பாலு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
நேரடி தமிழ்ப் படமான ‘ஆர் கே வெள்ளிமேகம்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் 24.4.2024 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் படக்குழுவினரோடு, சிறப்பு விருந்தினராக சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன் கலந்து கொண்டார்.
படத்தின் கதாநாயகன் விஜய் கௌரீஷ் பேசியபோது,
”ரெண்டு வருஷம் முன்னே வந்த ‘ஜோதி’ படத்துல வில்லனா நடிச்சிருந்தேன். அடுத்து ‘ஸ்டார்ட் கேமரா ஆக்சன்’னு ஒரு படம் நடிச்சு ரிலீஸாகப் போகுது. அடுத்ததா இந்த வெள்ளிமேகம் படத்துல ஹீரோவா நடிச்சது மகிழ்ச்சியா இருக்கு. ‘வெள்ளி மேகம்’னா என்னன்னு இயக்குநர்கிட்டே கேட்டேன். வானத்துல மேகங்கள் தெரியுறதை பார்க்கிறோம். அது வெள்ளி உலோகம் மாதிரி பளீர் நிறத்துல பஞ்சு மாதிரி நம்ம கண்ணுக்குத் தெரியும். ஆனா, அந்த மேகத்தை நெருங்கிப் போய் பார்த்தா வேற மாதிரி இருக்கும். அதே மாதிரி படத்துல நீங்க ஒரு விஷயத்தை நினைப்பீங்க. ஆனா, கதை வேற மாதிரி போகும். செமயான திரில்லர் படம். படத்துல நிறைய சஸ்பென்ஸ் இருக்கு. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் ஷூட்டிங் நடந்திருக்கு. படத்துல நடிச்சவங்களும் சரி, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான அர்ப்பணிப்போட வேலை பார்த்திருக்காங்க. எனக்கு இந்த படத்துல நடிச்சதுல கிடைச்ச பெரிய சந்தோஷம் என்னன்னா சல்மான் கானுக்கெல்லாம் மேக்கப் போட்டவர் எனக்கு மேக்கப் போட்டது. அதே மாதிரி, சர்மிளா மாதிரியான சீனியர்கள் கூடவெல்லாம் நடிச்சதும் நல்ல அனுபவமா இருந்துச்சு.
சிறிய பட்ஜெட் படங்களை பார்க்க மக்கள் தியேட்டர்களுக்கு வர முடியாம போறதுக்கு டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் ரேட் எல்லாமும் ஒரு காரணமா இருக்கு. ஒரு ஃபேமிலி படம் பார்க்கப் போனா 2000 வரை செலவாகும்கிற நிலைமை. இந்த நிலைமை மாறணும்னா அரசாங்கமே 50, 60 சிறு தியேட்டர்களை எடுத்து நடத்தணும். அது மூலமா சிறிய படங்கள் மக்கள்கிட்டே போய் சேரும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதை தமிழக முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கோரிக்கையா வைக்கிறேன்” என்றார்.
இயக்குநர் சைனு சாவக்கடன் பேசியபோது,
”சினிமாவுக்குள்ள சினிமாங்கிறதுதான் படத்தோட கதைக்களம். ரெண்டு இளைஞர்கள் சினிமா ஆசையில சென்னைக்கு வந்து வாய்ப்புகளுக்காக முயற்சி பண்றாங்க. அதுல அவங்க சந்திக்கிற விஷயங்களை, எதிர்பாராத திருப்பங்களோடு, சஸ்பென்ஸோடு கொடுத்திருக்கோம். அதுக்கு மேல இப்போ கதையை சொல்ல முடியாது. படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. படம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் பேசியபோது,
”இது திரில்லர் படம்னாலும் குடும்பக் கதையை மையமா வெச்சுத்தான் எடுத்திருக்கோம். படத்தை முழுசா பார்த்தாத்தான் கதை புரியும். அந்தளவுக்கு கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் இருக்கு. நாலு பாட்டு, சண்டைக் காட்சிகள்னு கமர்ஷியல் அம்சங்களும், ஹியூமரும் இருக்கு. இயக்குநரும் மற்ற டெக்னிஷியன்களும் மலையாள சினிமா ஃபீல்டுல இருக்குறவங்கன்னாலும் படத்துல நிறைய தமிழ் நடிகர்கள், நடிகைகளும் நடிச்சிருக்காங்க. படத்தை அடுத்த மாசம் வெளியிட திட்டமிட்டிருக்கோம்” என்றார்.
சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச் செல்வன் பேசியபோது, ”தயாரிப்பாளர் மலையாளத்திலிருந்து தமிழ்ப் படம் எடுக்க வந்திருக்கார்னா அதை நாம எல்லாரும் வரவேற்கணும். அங்கிருந்து வர்ற மஞ்சுமல் பாய்ஸ். பிரேமலு’ன்னு எல்லா படங்களும் இங்கே ஜெயிக்குதுன்னா கன்ட்டென்ட்தான் காரணம். அதே மாதிரி நல்ல கன்டென்ட்டோட இந்த படம் தமிழ்ல வருது. இதுவும் இங்கே பெரியளவுல வெற்றி பெறும். அப்படி வெற்றி கிடைக்கிறப்போ இந்த படத்தோட தயாரிப்பாளர் மாதிரி இன்னும் நிறையப் பேர் தமிழ்ப் படம் எடுக்க முன்வருவாங்க.
சினிமா ஃபீல்டு நல்லாத்தான் இருக்கு. ஒருவரே எல்லா வேலையையும் செய்யாம யார் யாருக்கு என்னென்ன வேலை தெரியுமோ அதை செஞ்சாலே நல்ல சினிமாக்கள் வரும். வெற்றியடையும். சினிமாவை நேசிக்கிறவங்க நிச்சயம் ஜெயிப்பாங்க” என்றார்.
படத்தில் நடித்துள்ள சார்மிளா பேசியபோது, ”இந்த படத்துல ஹீரோவுக்கு அம்மாவா வர்றேன். நான் நிறைய மலையாளப் படங்கள் நடிச்சிருக்கேன். இந்த படத்துக்காக கூப்பிட்டபோது ஏதோவொரு சாதாரணப் படமாத்தான் இருக்கும்னு நினைச்சு போனேன். ஆனா, அப்படியில்லாம வேற மாதிரி அனுபவம் தர்ற படமா இருந்துச்சு” என்றார்.
படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான திவ்யா பேசியபோது, ”மலையாளத்துல நான் நடிச்ச படங்களைப் பார்த்து இயக்குநர் எனக்கு இந்த படத்துல சான்ஸ் கொடுத்தார். இது எனக்கு முதல் தமிழ்ப் படம். ரஞ்சனிங்கிற கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். படத்துல டிவிஸ்ட் அன்ட் டர்ன் என் கேரக்டர் மூலமாத்தான் நடக்கும். அந்தளவுக்கு ஸ்ட்ராங்கான கேரக்டர் என்னோடது” என்றார்.
நடிகர் ஆதேஷ் பாலா,
இந்த படத்தில் நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்தபின், ”இப்போ இருக்கிற நிலைமையில தியேட்டர்களுக்கு ஏழை எளிய மக்கள் படம் பார்க்க போக முடியறதில்லை. காரணம் கட்டணங்கள். ஜெயலலிதாம்மா சி.எம்.மா இருந்தப்போ குறைந்த கட்டணத்துல மக்கள் படம் பார்க்க வசதியா மினி தியேட்டர்கள் உருவாக்கப்படும்னு சொன்னாங்க. அதை இப்போ செயல்படுத்தினா, பாமர மக்கள் கூட படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு வருவாங்க. படங்கள் வெற்றி பெறும். இதை இன்றைய அரசாங்கம் கவனத்துல எடுத்து செயல்படுத்தணும்னு கேட்டுக்கிறேன்” என்றார்.
படத்தில் கதாநாயகர்களில் ஒருவரான ரூபேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளும் படத்தில் தாங்கள் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆர்.கே. வெள்ளி மேகம் படக்குழு :
இசை: சாய்பாலன்
பாடல்கள்: அஜூ சஜன்
ஒளிப்பதிவு: டோன்ஸ் அலெக்ஸ்
படத் தொகுப்பு: ஹரி ஜி நாயர்
மக்கள் தொடர்பு : பி. மணிகண்டன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!