143
மனைவி, மகன், மகளுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். மாலைநேரம் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மகனும், மகளும் செல்போனில் கடலின் அழகை படம்பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெரியவர் ஒருவர் எங்கள் அருகே வந்தார்.
” தம்பி… அரிசி முறுக்கும், சூடான சுக்கு காபியும் வேணுமா…?” என்று கேட்டார்.
நான் அவரை பார்த்தேன். ” வேண்டாம் பெரியவரே… நீங்க கிளம்புங்க…” என்று சொன்னேன்.
” தம்பி… உங்க குழந்தைகளுக்கு இரண்டு முறுக்காவது வாங்கிக் கொடுங்க. சுவையாக இருக்கும்…” என்று இரண்டு முறுக்கை எடுத்து என்னிடம் நீட்டினார்.
நான் பேசாமல் அமைதியாக இருந்தேன். பெரியவரும் அங்கிருந்து சென்றார்.
” என்னங்க… இரண்டு முறுக்கு வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே…? பாவம் அந்த வயசானவர்… அவர் முகத்தை பார்க்க எனக்கே பரிதாபமாக இருக்கு. நீங்க கண்டிப்பாக வாங்குவீங்கன்னு எதிர்பார்ப்போடு வந்திருப்பாருங்க…” என்று மனைவி சொன்னாள்.
மனைவி சொன்னதில் நியாயம் இருந்தது. இரண்டு முறுக்காவது வாங்கியிருக்கலாம். அவர் மனசும் நிறைந்திருக்கும். தூரத்தில் பெரியவர் செல்வது தெரிந்தது. உடனே அங்கிருந்து கிளம்பினேன்.
” பெரியவரே… கொஞ்சம் நில்லுங்கள்…” என்று அவரை அழைத்தேன். உடனே என்னை திரும்பி பார்த்தார்.
” நீங்கள் எங்களை கடந்து போகும்போது, இந்த பணம் உங்களை அறியாமல் கீழே விழுந்தது. நீங்களும் கவனிக்காமல் சென்றுவிட்டீர்கள். இந்தாருங்கள் உங்கள் பணம் பெரியவரே…” என்று அவரின் கையில் நூறுரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, வேகமாய் திரும்பி நடந்தேன். என் மனதில் இருந்த சுமையும் இறங்கியது.
-
நாகர்கோவில் கோபால்
“நான்” இதழில் மீண்டும் எனது சிறுகதை வெளிவந்ததில் மனதில் ஆனந்த மழை…