இந்தியா

பாதை மாறியது ‘எஸ்.எஸ்.எல்.வி., – டி1’ ராக்கெட் விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்கள்

83views

‘எஸ்.எஸ்.எல்.வி., – டி 1 ராக்கெட், இரு செயற்கைக் கோள்களையும், 356 கி.மீ., புவி வட்ட சுற்றுப்பாதைக்கு பதில், நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தியதால், அந்த செயற்கைக் கோள்களை இனி பயன்படுத்த முடியாது,” என, ‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை தயாரித்து, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது.500 கிலோ எடைஇரு ராக்கெட்களும், 1,000 கிலோவுக்கு அதிகமான எடை உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் உடையவை.அவற்றை விட குறைந்த செலவில் சிறிய, மிக சிறிய என, 500 கிலோ எடை வரை உள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், எஸ்.எஸ்.எல்.வி., அதாவது, ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்’ என்ற சிறிய வகை ராக்கெட்டை, இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., – டி1 ராக்கெட், ‘இ.ஓ.எஸ்., – 02, ஆசாதிசாட்’ என்ற, இரு செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி, நேற்று காலை 9:18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான, 6.52 மணி நேர, ‘கவுன்ட் டவுண்’ நேற்று அதிகாலை, 2:26 மணிக்கு துவங்கியது.பூமியில் இருந்து புறப்பட்ட, 12வது நிமிடத்தில், எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்று நிலைகளும் திட்டமிட்டபடி விண்ணில் பிரிந்தன. இறுதியாக, வி.டி.எம்., கருவி உதவியுடன் இரு செயற்கைக்கோள்களும், புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக, தகவல் பலகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனால், அரங்கில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். அடுத்த சில நிமிடங்களில், செயற்கைக் கோள்களில் இருந்து தகவல் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானது.இதனால், அரங்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு, அமைதியான சூழல் உருவானது. அங்கு, தகவல் தொடர்பு தடைபட்ட தகவலை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.இதையடுத்து, ராக்கெட் ஏவுதலை பார்க்க, சதீஷ் தவான் மையத்திற்கு வெளியில் உள்ள பார்வையாளர் மாடத்தில் கூடியிருந்த மாணவர்கள், இளைஞர்கள் என, பலரும் சோகத்துடன் திரும்பினர்.

‘சென்சார்’ செயலிழப்பு இது குறித்து, சோம்நாத் கூறியதாவது:சிறிய வகை ராக்கெட், வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உதவியாக இருக்கும். பரிசோதனை முயற்சிக்கான முதலாவது, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், இரு செயற்கைக்கோள்களை சுமந்தபடி திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.ராக்கெட்டின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது நிலை திட்டமிட்ட இலக்கில் தன் பயணத்தை நிறைவு செய்தன. இறுதி நிலையில் தகவல் தொடர்பு தடைபட்டது. தகவல் தொடர்பை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்பார்த்தபடியே அனைத்து நிலைகளிலும், ராக்கெட் சிறப்பாக செயல்பட்டது. ராக்கெட், செயற்கைக்கோள்களை, 356 கி.மீ., புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப் பட்டது. ஆனால், அதற்கு மாறாக, பூமியில் இருந்து குறைந்தபட்சம் 76 கி.மீ., அதிகபட்சம் 356 கி.மீ., உடைய நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இது, பூமிக்கு மிக அருகில் இருக்கக் கூடியது.இதனால், இனி அந்த செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாது. இதற்கு காரணமாக, ‘சென்சார்’ செயலிழப்பால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை ஏன் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில், சில மாறுதல்களுடன் எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.நீள்வட்ட பாதை என்பது, பூமிக்கு மிக அருகில் உள்ளது. இதனால், அந்த பாதையில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் கீழே விழ வாய்ப்பு உள்ளது.எனவே, அங்கு நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாது.அதன்படி, புவியை கண்காணிக்க அனுப்பப்பட்ட, ௧௪௫ கிலோ எடையுள்ள ‘இ.ஓ.எஸ்., – 02’ செயற்கைக்கோளும்; நாடு முழுதும், 75 பள்ளி மாணவியர் உருவாக்கிய, ௮ கிலோ எடையுள்ள, ‘ஆசாதிசாட்’ செயற்கைக்கோளும் நீள்வட்ட பாதையில் நிறுத்தப்பட்டதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!