121
06.11.2021 இன்று காலை திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றேன்.
அங்கிருந்த கடையில் இளநீர் வாங்கி குடித்துவிட்டு, அதில் இருந்த மெல்லிய தேங்காயை தின்று கொண்டிருந்தேன்.
அப்போது அங்கே இளநீர் குடிப்பதற்காக கல்லூரி மாணவி போல் இருந்த ஒரு இளம்பெண் வந்தாள். லட்சுமிகரமான முகம்!
அந்தப் பெண் தனக்கு இளநீர் சொல்லிவிட்டு நிற்க, அதே நிமிடம் ஒருவர் வேகமாய் வந்து தனக்கு இளநீர் கேட்டார்.
உடனே அந்தப் பெண், இளநீர் வெட்டிக் கொண்டிருந்தவரிடம் “அவர் தாகமாய் இருக்கிறார். அவருக்கு கொடுங்க. நான் அப்புறம் குடிக்கிறேன்.” என்றாள் கனிவாக.
அந்தப் பெண்ணின் பொறுமை எனக்கு ஆச்சர்யம் தந்தது.
பிறகு நான் பசலிக்கீரை வாங்குவதற்காக கீரைக்கடைக்கு சென்றேன்.
அங்கே அதே இளம்பெண், கீரைக்கார பாட்டியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
அங்கு சுமார் 10க்கும்மேல் இருந்த அவுத்திக்கீரை கட்டுகளை அந்த பெண் வாங்கி, ஒவ்வொரு கட்டிலும் இருந்த ரப்பர் பேண்ட்டை எடுத்துவிட்டு, கீரையை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து எடுத்துக் கொண்டு, பணத்தை கொடுத்துவிட்டு, சுறுசுறுப்பாய் வெளியே சென்றாள்.
நான் பசலிக்கீரை வாங்கிவிட்டு உழவர் சந்தையைவிட்டு வெளியே வந்தேன்.
சற்று தூரத்தில் அந்த பெண் தன் கையில் இருந்த அவுத்திக்கீரையை எடுத்து, அங்கு சாலையில் நின்றிருந்த மாடுகளுக்கு பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணின் செயல் மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
அந்தப் பெண்ணின் பெயர் எனக்கு தெரியாது… ஒருவேளை அன்பு, கருணை என்று இருக்கலாம்!
-
திருச்சி சையது
add a comment