காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கம் கிடைத்துள்ளது.
நேற்று ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால் ரிங் குங்கா களமாடினார். 19 வயதே ஆன இவர் சக போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில், ஸ்னாட்ச் பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் 140 கிலோ எடை தூக்கி மிரள வைத்தார்.
இதேபோன்று, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடை தூக்கி வியக்க வைத்தார். இதன் மூலம் இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி, தங்கப் பதக்கத்தை வென்றார்.
சமோவா வீரர் இடேன் மற்றும் நைஜீரியாவின் உமோ ஃபியா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். காமன்வெல்த் சாதனையுடன் ஜெரிமி பதக்கம் வென்றதன் மூலம் பர்மிங் ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்தது.
இந்நிலையில் ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ எடையை தூக்கி அவர் அசத்தினார். இதன் மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 3 தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
முதல் தங்கத்தை மீரா பாய் சானு வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.