உலகம்உலகம்

கனடா: வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

46views

கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் தீவில் அமைந்துள்ளது சானிச் நகரம். அமெரிக்க எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. வங்கியில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயத்தில் அலறி துடித்தனர்.

இதனிடையே வங்கிக்குள் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் புகுந்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் வங்கியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்களை சரணடைந்துவிடும்படி எச்சரித்தனர்.

ஆனால் அதற்கு செவி சாய்க்காத அந்த மர்ம நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதை தொடர்ந்து, போலீசார் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பல மணி நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதே வேளையில் அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரிகள் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே மர்ம நபர்கள் வந்த காரை பரிசோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கி அருகே வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

வங்கியில் கொள்ளையடிக்கும் திட்டமா?

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வங்கியில் புகுந்த கவச உடை அணிந்திருந்த 2 பேர், அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்குள் அவர்கள் கொல்லப்பட்டனர்” என்றார்.

அதேசமயம் சுட்டுக்கொல்லப்பட்ட 2 மர்ம நபர்கள் குறித்த எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. அவர்கள் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? அல்லது நாச வேலை தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் நுழைந்தார்களா? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!