சிறுகதை

கடைசியாக ஒரு கவிதை

116views
ததும்பிக் கொண்டிருந்தது சந்தோஷம். எக்கணமும் வழியத் தயாராகி விட்டதைப் போலவும்கூட.
கடகடவென பறந்து வந்து அமரும் புறாக்களாக, மனதில் முகிழ்த்த கவிதைக்கான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன.
பூக்களின் பின்னணியில், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்புகளைப் போல உணர்வுகள் நுரைத்துக் கொண்டிருக்க ஜோவிற்கு சிறகுகள் முளைத்திருந்தன.
மனதுள் பதிந்து கொண்டிருந்த காட்சிகள், இன்றைக்கென்று அப்படியானதொரு லயத்தில் ஒரு ஸிம்பனிக்கான காட்சிக் கோப்புகளைப் போல அமைந்திருந்தன.
அது மழையென்று சொல்ல முடியாத ஊட்டிக்கே உரித்தானதொரு சிணுங்கல் மழை.

ஜோ வந்து கொண்டிருந்த பாதையின் கீழ்ப்புறச் சரிவில் அந்தப் பள்ளியின் மைதானம். மழையில் தொப்பலாக நனைந்திருந்தும் அதிதீவிரமாக கால் பந்தாடிக் கொண்டிருக்கும் பையன்கள் மைதானத்தில் ஆங்காங்கே தேங்கின நீரைக் கிழித்தபடி பந்தை தட்டிக் கொண்டும், ஓடிக் கொண்டும், ஆர்ப்பரித்துக் கொண்டும் அவர்கள் உலகக் கோப்பையில் ஆடுகிற வீரர்களின் தீவிரத்துடன், சுற்றிலும் அமர்ந்திராத ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் எக்களிப்பும், ஆரவாரமும் அவர்களுக்கு மட்டுமே கேட்க, அந்த உந்துதலில் தன்னை மறந்து விடுகிற கிளர்ச்சியுடன் களத்தில் ஆடுபவர்களைப் போல ஆடிக் கொண்டிருந்தனர்.

வழுக்கும் புல்தரையும், சற்றே நெகிழ்ந்திருந்த மண் தரையும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்பதை போலிருந்தது அவர்களின் ஆட்டம்.
அதில் லயித்திருந்த ஜோ அங்கிருந்து நகர்ந்து நடந்து கொண்டிருந்த பொழுதும், அவனின் மனத்திரையில் அவர்களின் ஆட்டம் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்க, ஜோவுமே ஒரு பார்வையாளனாய் மாறி மனத்திரைக்குள் போய், கைத்தட்டல் ஆரவாரங்களுடன் மெய் மறந்து நின்று கொண்டிருந்தான்.
மாயமாய் மேக இடுக்குகளில், ரகசியமாய்… ஆனால் திடுமென்று கசியும் ஒளிக்கற்றைகளைப் போல, காரணமே இல்லாமல் மனதில் உற்சாகம் உள்ளே புகுந்திருந்தது.
மெல்ல மரங்களைத் தொட்டுத் தொட்டு நடந்தான் ஜோ.
பிடரி மயிர்க்கற்றையைச் சிலுப்பியபடி கனைத்துக் கொண்டு நடக்கும் குதிரையை இழுத்தபடி போன ‘யாரோ’ சிறுவர்கள், ஜோ இவ்விதமாய் வருவதைப் பார்த்துவிட்டு தோழமையுடன் கையசைக்க, ஜோவும் கையசைத்தான்.
அவர்களில் ஒருவன் சட்டென்று இவனை நெருங்கி மரத்தின் கிளையொன்றை எகிறிக் குதித்துப் பிடித்து உலுக்க, தரதரவென்று மரத்தின் மழைத்துளிகள் ஜோவின் விரித்திருந்த குடைமேல், தபேலாவின் தாளலயமாக விழுந்தன.
ஜோ சிரிக்க, அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிற மாதிரி சிரித்துக் கொண்டு கடந்தார்கள்.
நடந்து வந்த பாதையிலிருந்து படிகள் ஏறி, மேற்புறமிருந்த பகுதிக்கு வந்தபொழுது அங்கே பஸ்ஸிற்காகக் காத்திருந்தனர் அந்தப் பள்ளியின் பிள்ளைகள்.
மழைக்கும் அவர்களுக்கும் ஏதோ ரகசிய உடன்பாடு இருப்பதைப் போலவும், அதனால் மழை தங்களை ஏதும் செய்துவிடாது என்பதைப் போலவும் இருந்தது அவர்களின் ஆட்டம். நின்றிருந்த பஸ்ஸின் ஜன்னல்களில் பூத்திருந்தன குதூகல முகங்கள்.
அவைகளில் எதுவோ ஒன்று ‘அங்கிள்,,, அங்கிள்’ என்ற கோரஸ்!
ஜோ கூப்பிட்டவளை ஒரு கணம் யூகித்து ‘காயத்ரி’ என்று கையாட்ட நிகழ்ந்தது அது. புராதான நாட்களின் பெரும் நீண்ட படகுகளில் சடக்கென்று வெளிவந்து கடல் நீரைத் துழாவுகிற துடுப்புகளின் அசைவுகளைப் போல, பஸ் ஜன்னல்களின் வெளி வந்து பிஞ்சுக் கைகள் அசைந்தன.
கீழே நின்றிருந்த பிள்ளைகளும் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள, ஓடி வந்த ஒரு பொடியன் “மழை ரொம்பவா அங்கிள்…?” என்று சிரிக்க, அப்பொழுதுதான் தான் இன்னும் குடை விரித்துக் கொண்டிருந்ததின் ஞாபகம் வந்துவிட்டவனைப் போல, சிரித்தபடி குடையை மடக்கினான். நடந்தான்.
நிற்காத சில தூறல்கள் இப்பவும் முகத்தில் விழ, சிலிர்ப்புடன் தலையை அசைத்துக் கொண்டான். நீரில் துள்ளும் மீன்களென மனதில் வார்த்தைகள் துள்ளின.
மழை சுபிட்சம்.
மழைச் சாரல்கள் தரும் மனமயக்கம்.
மழை புது உருவினை எவருக்கும் தருமொரு மாயம்.
மழை நனவாகும் கனவின் இனிய அனுபவம்.
மழை அறியும் இயற்கையின் மனதை குளிர்விக்கிற ரகசியம்!
மழை கவிதைக்கானதொரு பாதை காட்டும்.
மழை மீட்டி மனதில் பெருகும் இசை!
மீன்களின் துள்ளல்களாய் வார்த்தைகள், வார்த்தைகள்…
“நல்லாருக்குங்க இது…! குடை இருந்தும், மடக்கிட்டு இப்படி யாராவது நனைஞ்சு வருவாங்களா…?”
ரூத்தின் எரிச்சலான குரலைக் கேட்டதும், தலையை உலுக்கிக் கொண்டான்.
கால்கள் தாமாக வீட்டுக்கு ஜோவைக் கொண்டு வந்து சேர்த்திருந்தது. வியப்பாக இருந்தது அவனுக்கே. ரூத்தைப் பார்த்து சிரித்து வைத்தான்.
“ரூத், ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைக்கு பிரமாதமான விஷயங்கள்!”
“அதிருக்கட்டுங்க. முதல்ல தலையைத் துவட்டுங்க” என்றாள் ரூத்.
மேலே வானத்தைப் பார்த்தான் ஜோ.
விசித்திரமாய் வீட்டருகில் இன்னும் மழை இல்லை.
“என்னங்க என்னப் பார்க்கறீங்க…? போய்த் துணியை மாத்துங்க. புள்ளைங்க உங்களைப் பார்த்துப் பழகிட்டா கெட்டுப் போயிடும்தான்…” என்றாள் ரூத்.
ரூத் டீச்சர் கண்டிப்புமிக்க டீச்சர். ஒழுக்கங்களைச் சிரமேகொண்டு, கடைப்பிடிக்க விரும்பும் ரூத் டீச்சர்.
ஜோ பார்க்கப் பார்க்க, ரூத் டீச்சர் பெரியதாகி… தாகி அறையின் கூரையையே முட்டுகிற அளவிற்குப் பெரிதாகி, தலையில் ‘டிபிகல்’ டீச்சர் கொண்டையுடன், ஸ்கூலுக்குப் போடுகிற பெரூன் ஸ்வெட்டருடன், தவறு செய்துவிட்ட மாணவனைக் கண்டித்து, அடித்தாகிலும் திருத்த, கையில் பிரம்புடன் புறப்பட்டுவிட்ட டீச்சராய் நின்றிருந்தாள், தான் சிறியதாகிப்போன பிரமையில்!
“ஐயோ… பிரம்பு வேண்டாம் டீச்சர்” என்றான் தீனக்குரலில்.
பின் உள்ளே போய், துணியை மாற்றி, தலையைத் துவட்டிக் கொண்டிருக்கிற கதவருகில் மீண்டும் கண்டிப்புமிக்க ரூத் டீச்சர்.
“ம்ஹூம். உங்களுக்கு கிண்டலாயிடுச்சு இல்லையா… நல்லது சொல்ல வந்தா இப்படித்தான்.”
எல்லாம் முடித்து வந்த ஜோ, ஜன்னலருகில் வந்து உட்கார்ந்தான்.
மழை இன்னமே இப்பகுதிக்கு வரவில்லை. வரலாம். வரணும் போலிருந்தது.
“பேச மாட்டீங்களே… ஆமா… நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். துவைக்கப் போடறப்ப பேண்ட், ஷர்ட்ல பணம் ஏதாச்சும் வைச்சிருக்கமான்னு செக் பண்ணிப் போடுங்கன்னு. நீங்க அதைக் காதிலேயே போட்டுக்கறதில்ல. நான் என்னதான் செய்ய முடியும்? நான் சொல்றதெல்லாம் ஏன் எதுக்குன்னு புரிஞ்சுக்குங்களேன் ப்ளீஸ்…” என்றாள் ரூத் டீச்சர்.
ஜோவிற்கு எட்வினாவும், ரோஷினியும் எங்கே கேட்கத் தோன்றியது. அவர்களிடமாவது பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
“நம்ம பசங்க எங்கேங்க டீச்சர்…?”
“ஆமாமா… பேச்சை மாத்த்தாதீங்க …. பசங்களுக்கு நீங்க கொடுக்கிற செல்லம் ஜாஸ்தி…. இப்படிப் பண்ணிட்டே இருந்தீங்கன்னா அவங்களுக்கு அப்பாதான் நல்லவர், அம்மா கெட்டவள்ன்னு ஆயிடும்.”
“அப்பான்னா புள்ளைங்களுக்கு கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டாமா…? செல்லம் கொடுங்க. வேண்டாம்னா சொல்றே?? ஆனா, அப்பப்ப அடியும் வேணும். ‘பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான்’னு போட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமில்ல…?”
“நான் சொல்றதை எல்லாம் நீங்க காதில் போட்டுக்கறீங்களா என்னங்க…?” என்றபடி விடுவிடுவென வந்த ரூத், ஜோ முன் நிற்க,
நிமிர்ந்தவன் “சரிங்க டீச்சர்” என்றான் தோள்களைக் குலுக்கியபடி.
ரூத் மிகுந்த கோபத்துடனும், சலிப்புடனும், அவன் மனதின் அசத்தல் காட்சிக் கோர்ப்புகளை அழித்துவிடுகிற மாதிரியான உக்கிரத்துடன் உள்ளே சரேலென்று போய்விட, சட்டென்று ஒரு கணம் எல்லாம் போய்விட்ட மாதிரிதான் இருந்தது அவனுக்கு.
அறைக்குள் ரகசியமாய் பிரவேசித்த எட்வினாவும், ரோஷிணியும் ஜோவின் பக்கமாய் வந்து நின்றார்கள்.
“என்னாச்சு டாடி…?” என்றாள் ரோஷிணி
.
அவளைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டான் ஜோ.
“இறக்கை பிஞ்சு போய், பட்டாம்பூச்சி கீழே விழுந்துடுச்சும்மா…”
“அப்றம் டாடி…?” என்றான் எட்வினா.
“நெறையச் சங்கிலிகள் எல்லா இடத்திலும், இதோ அதோவென எங்கயும்…”
“எதுக்கு டாடி…?”
“எல்லாத்துக்கும்தான்.”
“நான் நெனைக்கிறேன்… டாடி மூட் அவுட்தான்” என்றாள் ரோஷிணி.
“சில விஷயமே… வாழ்வில் … விசேஷமே…” என எட்வினா, காட்பரீஸ் சாக்லேட் விளம்பர வரிகளை ராகம் போட்டு பாடி “இந்தச் சமயங்களில் உங்களுக்கு தேவை காட்பரீஸ் சாக்லேட்… இதோ டாடிக்குக் கொண்டு வருவேன் மூட் மாறிப்போக…!” என்றபொழுது, சூழல் சட்டென்று மாறிவிட்டதைப் போல மூவருக்கும் சிரிப்பு எகிறிற்று.
ரோஷிணி தலையைத் தட்டிக் கொண்டு சிரிக்க, ஜோவும் மனம் விட்டுச் சிரித்தான்.
கதவு திறக்க, உள்ளே வந்தாள் ரூத்.
“ஆமாமாம். இந்த பாட்டுக்கெல்லாம் குறைச்சலில்லே… நல்ல விஷயத்தைக் கத்துக்காதீங்க…” என்ற கோபத்தோடு ஆரம்பித்தவளுக்கும், சற்று முன் அறையில் நிறைந்திருந்த சிரிப்பு அவளையும் பாதித்துவிட்டதைப் போல, கோபம் பொய்க் கோபமோ என்பதைப் போல அவளும் சிரித்தாள்.
முதலில் மிரண்ட பிள்ளைகள், இப்போது சுதாரித்துக் கொண்டு மீண்டும் சிரித்தன.
ஒரு தேவதையின் அற்புதத் தொடலில் நொடிப்பொழுதில் சூழல் சகலத்தையும் வேறு புதிய வகையில் மாற்றிவிட்டதைப் போலிருந்தது. சிரிப்பு வழிய மலர்ந்த முகத்துடன் இப்போது ரூத்!
“என்னங்க ஜூலி வந்திருந்தா… உங்களுக்குப் பிடிச்ச நேந்திரம் சிப்ஸ் கொண்டாந்தா… இந்தாங்க.” என்றாள் தட்டை நீட்டியபடி.
சிப்ஸ்களை எடுத்து வாயில் போட்டபடியே ரூத்தைப் பார்த்து சிரித்தான் ஜோ.
ரூத் டீச்சர் இல்லை அது, பிரியம் வழிய பேசும் தோழி, ஸ்நேகிதி ரூத். எத்தனை அருமையானதொரு மாற்றம்! ரூத்திடம் அவனுக்குப் பிடித்தது இந்த மாற்றம்தான்!
ஸ்விட்ச் போட விளக்கு எரிகிறதைப் போல, கோப முகம் நொடிப்பொழுதில், பிரியமாய் மாற்றப்பட்டுப் போகிற விசேஷம்தான்!
“வா ரூத். இப்படி வந்து எங்ககூட உட்காரேன்” என்றான் ஜோ.
“என்னதிது… திடீர்னு… ம்ம்…?” என்று மீண்டும் சிரித்தாள் ஸ்நேகிதி ரூத்.
“நல்லா இருக்கு ரூத்!” என்றான் ஜோ.
“என்னங்க… சிப்ஸா…?”
“எல்லாமே… எல்லாமேதான்…”
“ஓகோ… சரி… இன்னைக்கு என் ஸ்டூடண்ட் ஒருத்தன் ரோஸ் கட்டிங் கொண்டாந்தான். ரொம்ப பிரம்மாதமான டைப்பாம். இதோ எடுத்துட்டு வரேன்.” என்றபடி ரூத் உள்ளே போக…
“டாடி… இப்பவே நட்டுடலாம் டாடி…” என்றனர் பிள்ளைகள்.
புத்தம் புது பச்சையில் கட்டிங் குட்டிக்குட்டியாய் ஐந்தாறு இலைகள் உயிர்ப்புடன் துளிர்திருந்தன. வெளிர் சிவப்பு கலந்த மழமழ பச்சையில் அழகாக கண் சிமிட்டின!
“மஞ்சள் ரோஜாவாக்கும்… இதில்..” என்றாள் ரூத்.
வீட்டிற்கு எதிரில் சிறு குழி எடுத்து, சாணி உருண்டை வைத்து, கொஞ்சம் எருவும் போட்டு கட்டிங்கை நட்டார்கள்.
ரோஷிணி முதலில் நீர் ஊற்ற, பின் எட்வினா, ரூத் ஊற்றினார்கள்.
அதையே பார்த்துக் கொண்டிருந்த ஜோவின் மனதில் மறுகணம்… மறுகணம்… கட்டிங்கில் இலைகள் இன்னுமாய் அரும்பி, அடுக்கடுக்காய்த் துளிர்த்து, பின் இலைகள் தழைத்து தலைத்து மொட்டுவிட்டு மொட்டுப் பிளந்து, பிளவில் எட்டிப் பார்த்த சிவந்த மஞ்சள் இதழ்கள், பின் மஞ்சள் ரோஜாக்காளாக, அவனுக்குப் பிடித்த தங்க ரோஜாக்களாக பூத்துக் குலுங்கின.
ரூத் புன்னகையுடன் “ரோஷிணி, உங்க டாடிக்கு என்னவோ பூ இப்பவே பூத்து குலுங்கிறதைப் பார்க்கிற மாதிரிதான் சிரிப்பும், பார்க்கிறது!” என்றாள்.
எதிர்மேட்டில் உள்ள வீட்டிலிருந்து ராமநாதனின் குழலிசை மெல்லத் தவழ்ந்து தவழ்ந்து, மிதந்து வந்து எல்லாரையும் தழுவிக் கொள்ள “லவ்லி” என்றான் ஜோ.
“என்ன டாடி சொன்னீங்க…?” என்றான் எட்வினா.
“முதல் பூ யாருக்கு டாடி…?” என்றாள் ரோஷிணி.
“கண்டிப்பா நம் ரூத் டீச்சருக்குத்தான்!” என்றான் சிறகு முளைத்திருந்த ஜோ.
சூரியன் மந்தகாசச் சிரிப்புடன் அவசரமாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிணுங்கல் மழையும் தொடங்கியது…!
  • கார்த்திகா ராஜ்குமார்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!