உலகம்உலகம்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து. அமெரிக்காவில் மேடை ஏறி மர்மநபர் வெறிச்செயல்

77views
உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான ஹடி மடர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே இங்கிலாந்தில் குடியேறினார். இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற சல்மான் பல ஆண்டுகளாக அந்நாட்டிலும், அமெரிக்காவிலும் வசித்து வருகிறார்.
சல்மான் ருஷ்டி 1981-ம் ஆண்டு எழுதிய மிட்னைட்ஸ் சில்ரன் என்ற புத்தகத்திற்காக உலகின் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர்ஸ் பிரைஸ் விருது வழங்கப்பட்டது. இதனிடையே, சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு வெளியிட்ட புத்தம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘தி சனடிக் வர்சஸ்’ (The Satanic Verses) என்ற அந்த புத்தகம் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தகத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக இஸ்லாமிய நாடுகள் அந்த புத்தகத்திற்கு தடை விதித்தது. இந்த புத்தகத்தை தடை விதித்த முதல் நாடு இந்தியாவாகும்.
இந்த புத்தகத்திற்கு இந்தியாவில் இப்போதும் தடை நீடிக்கிறது. இஸ்லாமிய மதம், இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதரை விமர்சிக்கும்/கேளி செய்யும் வகையில் இந்த புத்தகம் இருப்பதாக கூறி பல இஸ்லாமிய நாடுகளில் சல்மான் ருஷ்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல நாடுகளில் அந்த புத்தகத்தை மொழிபெயர்த்தவர்கள் மீதும், சல்மான் ருஷ்டியின் உதவியாளர்கள் மீதும் தாக்குதல்கள் அரங்கேறியது.
இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் ‘தி சனடிக் வர்சஸ்’ புத்தகத்தை வெளியிட்டதாக 1989-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் தலைக்கு ஈரான் அதிபர் அதுல்லா ருஹொலா கெமியோனி வெகுமதி அறிவித்தார். சல்மானை கொலை செய்பவருக்கு 3 மில்லியன் டாலர்கள் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆனால், அதுல்லா ருஹொலா கெமியோனி உயிரிழந்த பின்னர் ஈரான் தனது அறிவிப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக பின்வாங்கியது. ஆனால், சல்மான் ருஷ்டியின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வந்தது.
அவரை கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் வசித்து வரும் சல்மான் ருஷ்டியை கொலை செய்யும் நோக்கத்தோடு நேற்று நியூயார்க்கில் நடத்தப்பட்ட தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!