இந்தியா

உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்

358views

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு பாஜகவினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் 39 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். இதனால் ஆட்சியில் இருப்பதற்கான பெரும்பான்மையை சிவசேனா இழந்தது. இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவயைில் இருக்கும்போது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரால் உத்தரவிட முடியாது என அக்கட்சி வாதிட்டது. ஆனால், சிவசேனாவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரும் ஆளுநரின் உத்தரவை உறுதி செய்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டதால், உத்தவ் தாக்கரே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க உரிமை கோர பாஜக திட்டமிட்டிருக்கிறது. பாஜக சார்பில் அதன் மூத்த தலைவரான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாநிலம் எங்கும் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு முன்பு தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, ஃபட்னாவிஸ் நேற்று இரவு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், “நான் மீண்டும் வருவேன். புதிய மகாராஷ்டிராவை உருவாக்க நான் மீண்டும் வருவேன். ஜெய் மகாராஷ்டிரா” எனக் கூறியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!