உலகம்உலகம்

இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம்

64views

நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்து விட்டதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. இடைக்கால அதிபராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்கிரமித்தனர்.

அதற்கு முன்பாகவே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய கோத்தபய, கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராணுவ தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாக தெரிகிறது.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அதிபர் பதவியை 13-ம் தேதி ராஜினாமா செய்வதாக கோத்தபய அறிவித்தார். இதையடுத்து, கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் துரிதப்படுத் தின. நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ம் தேதி நடக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை நேற்று அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக நேற்று மாலத்தீவுக்கு தப்பியோடி விட்டார். அவர், மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு தப்பிச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை மாலே நகரை அடைந்து விட்டதாகவும், அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாலத்தீவு நாட்டு ராணுவ அதிகாரிகள் அவரை, அங்குள்ள ரகசியத் தீவு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அந்த தீவில் உள்ள மாளிகையில் கோத்தபயவும், அவரது மனைவியும் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்ய மறுத்த நிலையில், அவர் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், கோத்தபய மாலத்தீவில் இருக்கிறாரா என்ற விவரத்தை வெளியிட அந்நாடு மறுத்துவிட்டது.

இதனிடையே,இலங்கையில் பதற்றம் நீடித்து வருகிறது. நாட்டின் சில மாகாணங்களில் போராட்டம், வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போராட்டத்தைக் கலைக்க போலீஸாரும், ராணுவ வீரர்களும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால், இலங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அதிபர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்கவும், போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வரவும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு: மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்துள்ளார். இதை தன்னிடம் கோத்தபய தெரிவித்ததாக சபா நாயகர் யாபா அபேவர்த்தனா கூறினார். மேலும், கோத்தபயவிடம் இருந்து விரைவில் ராஜினாமா கடிதத்தை பெற்றுவிடுவேன் என்றும் யாபா அபேவர்த்தனா தெரிவித்தார்.

வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டவுடன் இடைக்கால அதிபர் பதவியில் இருந்து விலகுவேன் என்று ரணில் தெரிவித்துள்ளார். ரூபவாஹிணி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய ரணில், “ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அச்சுறுத்தலை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அரசின் சொத்துகளை அழிப்பதை அனுமதிக்க முடியாது. அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் மாளிகையை மீட்க வேண்டும். சில முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிகிறது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத் தளபதிகள், காவல்துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது” என்றார்.

இதனிடையே, நேற்று மாலை கொழும்புவில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்றும், நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக செயல்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

டி.வி. நிலையம் முற்றுகை: முன்னதாக இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹிணி அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஒளிபரப்பு தடைபட்டது. போலீஸார் வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய பின்னர் நிகழ்ச்சிகள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்தியா மறுப்பு: அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியது என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தியாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத்துக்கு,அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரி வித்தார்.

மாலத்தீவில் போராட்டம்: இந்நிலையில், மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபயவை வெளியேற்றக்கோரிஅந்நாட்டு அதிபர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் இப்ராஹிமின் மாளிகை அருகே மாலத்தீவு மக்களும், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!