உலகம்உலகம்

இலங்கை அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே

50views

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மே 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார்.

கோத்தபய ராஜக்சவுக்கு எதிராகவும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதால், அவர் தனது பதவியை கடந்த 14ம் தேதி ராஜினாமா செய்தார். அதோடு, இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்.

இதையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நியமித்தார்.

மேலும், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில், அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட டலஸ் அழகபெரும 82 வாக்குகளையும், ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுரா திசநாயக்க 3 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர்.

இதையடுத்து, நாட்டின் 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூர்ய முன்னிலையில் பதவி ஏற்றார்.

அடுத்த சில நாட்களில், அவர் நாட்டின் புதிய பிரதமரை நியமிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சேவின் பதவிக் காலமான நவம்பர் 2024ம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக் காலம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமராக 6 முறை இருந்த ரணில் விக்ரமசிங்கே, முதல் முறையாக அதிபராகியுள்ளார். முன்னதாக அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!