கவிதை

இரக்கம் சுரக்கம் இறைவன் கரம்

206views
எங்கும் எதிலும் இன்னும் மிச்சமிருக்கிறது ஈரம்…
மனிதாபிமானம் என்பது மனதின் ஈரம்…
விழிகளில் நீரிருக்கும்
காலமெல்லாம் இருக்கும்…
கடலில் அலையிருக்கும் காலமெல்லாம் சுரக்கும்…
எங்கேயோ ஓர் இடறல் கேட்டால் இதயம் துடிக்கிறதே…
எங்கேயோ ஓர் அரற்றல் கேட்டால் கண்ணீர்த் துளிர்க்கிறதே…
வெயில் கொளுத்தி நாவறளும் வேளைகளில் எல்லாம்
வந்து கொட்டும் மழையைப்போல வந்து
கைகொடுக்கிறது மனிதாபிமானம்…
பெருமழைக் காலங்களில்
படகுகளின் துடுப்புக்களின் துழாவல்களில்
நீங்கள் அதைப் பார்க்கலாம்…
இந்துத்தாய் பெற்றெடுத்த
குழந்தைகளுக்கு
இஸ்லாமியத் தாய் பாலூட்டும்
நேயத்தில் தரிசிக்கலாம்…
புயற்காற்றுகள் புரட்டிப் போட்ட
கோவில் தலங்களைப்
புதுப்பித்துக் கொடுக்கும்
பள்ளி வாசல் புறாக்களின்
சிறகசைப்புக்களில் நீங்கள் அதைக் கேட்கலாம்….
நரமாமிசப்
பட்சிணிகளுக்கும்
திராட்சை ரசம் பருகத்தரும்
தேவ நேர்த்திகளில்
நீங்கள் அதை வரவேற்று வாழ்த்திப் பாடலாம்…
மானுடருக்கு மட்டுமன்று…
தாக நீருக்காக நா நாட்டி நின்ற நாய்க்கு
நீரூட்டியவளுக்கும் சுவனம் பரிசு என்றார்கள் நபிகள் பெருமான் …
எங்கேயோ பிறந்த ஒரு குழந்தைக்கு
சாதி மதம் பார்க்காமல் பாலூட்டுகிறாளே ஒரு பெண்…
மனிதாபிமானம் இல்லையா…
சாதிக்கலவரத்தில் வெட்டிப் போட்டவனுக்கு
இரத்தம் புகட்டுகிறானே ஒருவன்…
மனிதாபிமானம் இல்லையா…
ஒட்டுத்துணியில் கட்டும் மேனியின் ஏழைப்பெண் மானத்தை
தன் பட்டுச்சேலையால் பொதியத் தருகிறாளே ஒரு தேவதைப்பெண்…
மனிதாபிமானம் இல்லையா…
உண்டியும் உடையும் இல்லாமல்
வந்திறங்கிய அகதிகளுக்கு
அடைக்கலமும் ஆறுதலும் தந்து அணைத்துக்
கொள்கின்றனவே பற்பல தேசங்கள்…
மனிதாபிமானம் இல்லையா…
மனிதாபிமானம் மானுடனுக்கானது…
மனித நேயம் நேசிக்கும் எல்லோருக்கும் மகத்தானது…
அது காய்ந்த பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுகிறது…
அதனால் கள்ளிச்செடிகளுக்கும் நீரூற்றுகிறது…
தீய்ந்து போன கதலி வாழைகளுக்கும்
கனிவு காட்டுகிறது…
மனம் அழுக்கானவனுக்கும்
மலடானவனுக்கும் மட்டுமே அது பகை….
ஏனெனில் அவனுக்கு மனமேயில்லை…
அழுக்கடைந்த மனங்களின் அதிகாரச் சேட்டைகளை
பாவமன்னிப்பின் வாசல்கள் பரிசுத்தப்படுத்துகின்றன…
மனிதாபிமானம்
சாதி மத பேதம் இல்லாமல் எல்லோருக்கும்
சமபந்தி விருந்து வைக்கிறது…
மனிதாபிமானம் இரக்கம் சுரக்கும்
இறைவனின் இன்னொரு கை…
யார் விழுந்தாலும் அது தூக்கி விடும்…
எவர் அழுதாலும்
அது துடைத்தருளும்…
எங்கெல்லாம் முகாரியின் முனகல்கள் ஒலிக்கின்றனவோ
அங்கெல்லாம் அதை முறியடித்து,
தென்றலில் தவழ்ந்து வரும்
ஒரு புதிய ராகம் சுகப்படுத்தி விடுகிறது….
பூமியைத் தேடி வரும் மழை போல…
தென்றல் சுமந்து வரும் மலரின் நறுமணம் போல
இந்த உலகம் இருக்கும் வரை
மனிதாபிமானம் இருந்து கொண்டுதான் இருக்கும்…
ஏனெனில்…
அதுதான் இந்த பூமியின் சுவாசம்…
  • அத்தாவுல்லா

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!