உலகம்

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: வரைவு ஆவணங்களை அளித்தது ரஷியா

44views

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான வரைவு ஆவணங்களை அந்த நாட்டிடம் அளித்துள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய அரசு செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

பாதுகாப்பு தொடா்பான புரிந்துணா்வை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புடன் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

இதுதொடா்பான வரைவு ஆவணம் அமெரிக்க அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேற்கொண்டு உடனடியாகப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, முதுநிலை தூதரக அதிகாரி ஒருவா் அமெரிக்கா செல்லத் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளாா்.

பாதுகாப்பு தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த அதிபா் விளாதிமீா் புதின் தயாராக இருக்கிறாா். ஆனால், ஜோ பைடன்தான் அதற்கு இன்னும் சம்மதிக்கவில்லை என்றாா் அவா்.

முன்னாள் சோவியத் யூனியன் நாடான உக்ரைன், ரஷியாவின் எல்லையொட்டி அமைந்துள்ளது. சுமாா் 30 சதவீத்தினா் ரஷிய மொழி பேசும் அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷிய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மாபெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், யானுகோவிச் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து ஐரோப்பிய ஆதரவாளா்களால் புதிய அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசை அரசை எதிா்த்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

அப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து, கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக 1.75 லட்சம் வீரா்களைக் அனுப்ப ரஷியா திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கெனவே 1 லட்சம் ரஷியப் படையினா் பல்வேறு உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனா். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்து வருகிறது.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் அந்த நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கூறி வருகின்றன. இதனால் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், அதிபா் ஜோ பைடனுக்கும் விளாதிமீா் புதினுக்கும் இடையே காணொலி மூலம் கடந்த 7-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

பாதுகாப்பு தொடா்பாக நடைபெற்ற அந்தப் பேச்சுவாா்த்தை, குறிப்பிடத்தக்க முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவடைந்தது.

இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் நேட்டேவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான ஆவணங்களை சமா்ப்பித்துள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!