விளையாட்டு

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 108 பந்துகளில் 162 ரன்கள் குவித்து ராஜ் பவா அசத்தல்

38views

ராஜ் பவா 108 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார். இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

16 அணிகள் பங்கேற்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி உகாண்டா உடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக ஹர்னூர் சிங் , அங்கிரிஷ் ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆங்கிரிஷ், ராஜ் பவா ஜோடி, உகாண்டா பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்களது அதிரடியால் ஸ்கோர் ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்தது.

அங்கிரிஷ் 92 பந்துகளில் சதம் விளாச, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராஜ் பவா, 69 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்

இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் சேர்த்தது. ராஜ் பவா 108 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும், 14 பவுண்டரிகளும் அடங்கும். இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணி 79 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2004 ஆம் ஆண்டு நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் ஷிகர் தவான் 155 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!