சிறுகதை

இரவல்

304views
விடியற்காலை பகலவன் வர இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் இருப்பினும் காய்கறி வண்டி காத்திருக்காது.காய்கறி வண்டியின் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்தான் ராஜா கதவை திறக்க. அதற்குள் தெருவே விழித்துக்கொள்ளும் அளவிற்கு ஒலி ஓயாமல் அடித்தான் காய்கறி வண்டிக்காரன்.
“தம்பி அந்த சத்தம் கொஞ்சம் நிறுத்து பக்கத்துல எல்லாம் சத்தம் போடுவாங்க” என்றான் ராஜா.
“ எனக்கு லேட் ஆச்சு நீங்க இவ்ளோ மெதுவா வந்த என்ன பண்ண ஃபோன் வந்துகிட்டே இருக்கு “ என்றான் வண்டிக்காரன்.
ராஜா கதவைத் திறக்க விரைந்து காய்கறிகளை எடை போட்டு இறக்கி வைத்தான் ராஜாவும் குறித்துக் கொண்டு வண்டியை அனுப்பி வைத்தான்.
ரூமுக்குள் சென்று ஒவ்வொருவராய் எழுப்பினான் ராஜா.
“ டேய் நேரமாச்சு எந்திரிங்க என்று எழுப்பி காலை உணவுக்கான பணிகளை துவங்கினான்.” அவன் எழுப்பிய பத்து பதினைந்து நிமிடத்தில் அனைவரும் பணியை துவங்கினர். இதற்கிடையில் அனைவருக்கும் ஒரு டீயும் சென்று சேர்ந்தது.
ராஜா முதுகலை பட்டதாரி அவன் சொந்ததொழில் ஒன்றும் அவ்வளவு சோபிக்கவில்லை .சொந்தக்காரர் ஒருவரின் ஹோட்டல் நிர்வாகம் செய்ய ஒரு படித்தவர் வேண்டும் என்று ராஜாவை வேளையில் அமர்த்தினார் அவன் வேலை பிடித்துப்போக மேலும் நம் சொந்தக்காரன் என்ற உரிமையும் அவனை சென்னை கிளைக்கு மாறுதல் வரும் என்று அவன் நினைத்ததில்லை. வேலை என்னமோ நிர்வாக மேலாளர் என்று சொன்னாலும் அனைத்து வேலைகளும் தொய்வில்லாமல் நடப்பதருக்கு இவனே பொறுப்பு.
வேளைகளில் பல நேரங்களில் காரணங்கள் தேவையில்லை செயல்கள் மட்டுமே தேவைப்படும். சுறுசுறுப்பை குறைக்காமல் அனைவரிடமும் கனிவாக வேலை வாங்குவதில் கெட்டிக்காரன். சம்பளம் குறைவுதான் இருந்தாலும் சாப்பாடும் தங்கும் இடம் கம்பெனியை சார்ந்தது மற்றும் அவன் இருக்கும் பதவி கொஞ்சம் ஆறுதல் தரும் காரணிகள்.
ராஜா மாதம் ஒருமுறை இரண்டு நாட்கள் ஊருக்கு சென்று வருவான் அவன் மனைவி மகனை பார்க்க. ஞாயிற்றுக்கிழமை பொதுவாக அவனுக்கு விடுமுறையும் கிடையாது. .அந்த இரண்டு நாளும் மகன் அவன் மேல படுத்து கொண்டு இருப்பான். கங்காரு குட்டியை போல நொடி பொழுதும் கீழே இறங்காமல் சுற்றுவான்.. மீதம் உள்ள நாட்களில் அந்த இரண்டு நாட்களின் நினைவுகளை சுமந்தே நாட்களை கடத்துவான் ராஜா. பல முறை அவன் மகனுக்கும் மனைவிக்கும் கண்ணீரோடு மன்னிப்பு கோரி இருக்கிறான் தனிமையில். தான் செய்த தவறுகளே அவர்களை பிரிந்திருக்க காரணமாக அவனே பல நேரங்களில் அவனை கண்ணாடியில் பார்த்து வசவுகளை அவனுக்கு அவனே தொடுத்து அமைதி கொள்வான்.
அப்பாவின் சிநேகிதன் ஒருவர் அலுவலக அறையில் தங்கிஇருந்தான். சொந்த ஊரில் தனக்கென மனிதர்கள் சிலர் இருந்தனர் சொந்தக்காரர்கள் அதிகம். இங்கு தனி அறை தனி ஒரு ஆளாக உறக்கம் வராமல் பல நாட்கள் இருந்ததுண்டு. கண்களே அயர்ந்து போய் அவனாகவே கண் அயர்ந்து போனது தான் அந்த உறக்கம் கூட.
அவனுக்கான சில மனிதர்கள் சில நண்பர்கள் தவிர வேறு யாரும் அவனுக்கு பெரிதாக பரிச்சயம் இல்லை.அப்படி ஒரு நாள் அவன் தங்கியிருந்த அறைக்கு விருந்தினர்கள் சிலர் வருவதாக அப்பாவின் நண்பர் சொல்லியிருந்தார் இடம் போதாமல் போகலாம் அதனால் நண்பர் அறைக்கு சென்றுவிடலாம் என்று எண்ணி கடைசி நிமிடத்தில் அவனுக்கு கால்செய்ய நண்பனோ சொந்த ஊருக்கு ஒரு வேலையாக சென்று விட்டதாக சொல்லிவிட்டான். அன்று ராஜாவிற்கு வேலை நாள் கூட இல்லை விடுமுறை என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான்.கடைசி வழியாக எதும் கிடைக்கவில்லை என்றால் சேகர் வீட்டில் தஞ்சம் அடையலாம் என்று திட்டம் வகுத்தான் ராஜா.
முன்னெச்சரிக்கையாக சேகருக்கு ஃபோன் செய்து நிலைமையை விளக்கினான் ராஜா.
தெளிவான பதில் கூறாமல் “ சரி பாஸ் பாத்துக்கலாம்” என்று ஃபோனை கட் செய்தான் சேகர். மதியம் வரை ரூமில் இருக்க திட்டமிட்டு இருந்தான் ராஜா, அவன் போதாத நேரம் விருந்தினர்கள் முன்னதாகவே வர தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.எங்கு செல்வது என்று தெரியாமல் ஓய்ந்த மழைக்கு நடுவே ஓர் வெறிச்சோடிய பஸ் ஸ்டாப்பில் வண்டியை நிறுத்தினான் ராஜா. மதியம் என்பதால் சாலை வெறிச்சோடி கிடந்தது.
“ யாரும் அற்ற சாலையில், யாரும் தன்னை தெரிந்திராத ஊரில் ஒற்றை கூடாரத்தில் தான் மட்டும் அமர்ந்து கதிரவன் கணல் இருக்கையின் இறுதி வரை கணத்தும் மறுத்துபோன சிந்தனைகளோடு நகர்வற்று இருந்தான் ராஜா”
தான் இருந்த நிலைமை தலைகீழாக மாறும் என்று அவன் நினைத்ததில்லை. அவன் கண்ணாடிகளில் இடையே வலிந்து வந்த கண்ணீர் வலிகளை சற்று வெளியேற்றிய உணர்வுகளோடு, சேகருக்கு ஃபோன் செய்து தனது பையை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டிக் கொண்டான். அவனும் பையை கொண்டு வந்து தாங்க பாஸ் என்றான்.
இதற்கிடையில் இரண்டு டீயும் அவன் பசியை கொஞ்சம் அடக்கி ஆண்டது. பையை கொடுத்துவிட்டு பொறுமையாக கோவிலுக்கு சென்றான் ராஜா.அங்கே ஒரு மணிநேரம் காலம் கடத்திவிட்டு பிறகு பொது பூங்கா ஒன்றிற்க்கு உள்ளே சென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அவன் உள்ளே செல்லும் பொழுது கூட்டம் ஒன்று அவ்வளவாக இல்லை அதனால் யாரும் அவனை பெரிதாக கண்டுகொள்ளவில்லைஅவனும் அதைத்தான் விரும்பினான்.
நேரம் ஆக கூட்டம் உள்ளே நுழைய பெரும்பாலானோர் குடும்பமாகவே வந்தனர்.குழந்தைகள் ஆர்ப்பரிப்புடன் மேலும் கீழுமாய் காற்று அடைத்த அரண்மனை பொம்மையில் குதித்து ஆட ஒரு குழந்தையை தர தரவென தந்தை வெளியில் வர இழுத்தார். மன்றாடி கேட்டும் அவர் விடவில்லை. தூரத்தில் அமர்திருந்த ராஜா அதை பார்த்து குழந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் . தன் சட்டையில் இருந்த இரவல் பணம் ஐம்பது ரூபாய் தடவிக் கொண்டே.
அருகில் சென்று கடைக்காரனிடம் அந்த ஐம்பதையும் கொடுத்து விட்டு அக்குழந்தை மீண்டும் சிறிது நேரம் விளையாட விடும் படி சொல்லிவிட்டு நகர்ந்தான் அத்தந்தைக்கு தெரியாமல். கடைக்காரன் அவனே அனுமதிப்பது போல பாவனை செய்து இன்னும் சிறிது நேரம் விளையாடச் செய்தான்.
மேசையில் அமர்ந்து தூரத்தில் அக்குழந்தை சிரித்து விளையாடுவதை ரசித்தபடியே கிளம்பினான் ராஜா. இரவல் இடம் இரவல் பணம் என்றாலும் அக்குழந்தையின் சிரிப்பையும் இரவலாக பெற்று நடந்தான் ராஜா அவன் குழந்தையின் நினைவுகளோடு.
சிறிது நேரத்தில் தந்தையின் நண்பர் நம் அறைக்கே வந்து விடு என்று சொல்ல இரவல் அவனை தொற்றிக்கொண்டது இரவளாக.

கௌரி சங்கர் பாண்டியன்

2 Comments

  1. அருமை நண்பா. வாழ்த்துக்கள். டீ பசியை போக்கும் சூழ்நிலை அனுபவப்பட்டவனுக்கு நன்கு புரியும். மேலும் இது போன்ற நல்ல கதைகளை எழுதவும்

Leave a Reply to Sivanand Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!