தமிழகம்

இது அரசியல் அல்ல..

91views
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. – இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!
உலகம் போகின்ற போக்கில் இன்று எதுவும் அரசியல் அல்ல. மக்களை மக்களாக மதிக்கின்ற தன்மை ஆறப்போட்டு தூய்மை அகன்று போனது.
அடிக்கடி அதே தோசையை திருப்பித் திருப்பி போட்டு தீய்த்தது தான் மிச்சம். இலவய கண்மூடித்தனங்களால் உரிமை உணர்வுகள் முடமாக்கப்பட தமிழர் நலம் அறிவுச் செல்வங்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு திராவிட மாயங்கள் குளிர் காய்கின்றன.
இதில் யார் மீதும் குற்றமில்லை. ஆராய்ந்து அறிந்து தெளிந்த பின்னும் அதே இருட்டில் அதே குழியில் விழுகின்ற தமிழர் சிலரின் கண்மூடி பழக்கம்.
நாமும் பிற நாடுகளை பார்த்து கெட்டுப் போனோம். பிற இனங்களாலும் கெட்டு வழி மாற்றுகளால் கெட்டுப் போனோம்.
விடுதலை பெற்ற நாட்டில் மீண்டும் பல அடிமைத் தனங்களை ஆளுவோர்கள் கட்டி வைத்துவிட்டனர். நம்தாய் மொழி ஆட்சியில் இல்லை. நம் நாட்டு பற்றை போற்றி வளர்ப்பாரில்லை. தனிமனித போற்றல்களே மிகுந்த ஆர்ப்பாட்டங்களோடு நடத்தப்படுகின்ற கேடு.
எல்லோருக்குமாக இருந்த ஊரும்.. எல்லாமுமாக இருந்த ஆடு, மாடு, கோழிக்கொக்கும் என்ற இயற்கை வளங்கள் அற்றுப் போக.. குடிக்கும் நீரிற்கும் விலை?! எதையும் மதிக்க மறந்த கட்சிகள். வெறுமை காட்சிகள்.
ஆனந்தமாய் அரங்கேறிய குடும்பங்கள் சுற்றம் இன்று அடிப்படையின்றி ஆட்டம் காணுகின்றன. சுயநலம் என்னும் பேச்சு போட்டிகளால் ஆணென்றும் பெண்ணென்றும் ஆளுக்கு ஆள் கேள்விகள் கேட்கின்றன. நாம் என்கின்ற ஒற்றுமை உணர்வு போனது.
எல்லாம் ஒரு வகை ஆடிமைத்தனம். எல்லாம் ஒருவகை பொழுது போக்குகள். நம்மிடம் இல்லாத அறிவும் செல்வமும் வெளிநாடுகளில் குவிந்து கிடப்பதாக பாராட்டுவோர்கள்.
நாம் நாமாக எழுந்து நிற்க முடிவில்லை. அப்படி எழுந்து நின்றால்.. இழுத்துப் போடும் ஆண்டைகளாய் பல இனங்கள். நம்மை பற்றிய நற்சிந்தனையை மழுங்கடிக்கும் தொடர் முயற்சிகள்?!
இல்லாதவர்களின் கைகளில் மக்களாட்சி. ஊழலும் முறைகேடுகளும். பற்பொடி விற்கவும் இலவயங்களோடு மதுபான கடைகளை திறக்கவும் பயன்பாட்டில் கொடிகட்டி பறக்கின்ற நோய்கள்.
ஒற்றுமை என்பதை சாதிக்குள் சாதிகளாக பிரித்துப் போட்டு, தன்னை கேள்வி கேட்டு எழாதபடி மக்களை சிறைக் கூண்டிற்குள் அடங்கிவர்களாக மக்களை ஆக்கி வைத்து விட்டு, அவரவர் குடும்பதோடு சனநாயகம் ஆள?!..
அதனால் இன்று நாமே நம்மை மதிக்க மறந்தோம். அதனால் இங்கே அவர்களுக்கே வாழ்வு. அப்படிப்பட்டவர்களாலேயே சட்டதிட்டங்கள் இங்கு இயக்கப் படுகிறது..
தான் செய்த எந்த தப்புத் தவறுகளையும் தட்டிக் கேட்டுவிடாதபடி தடுக்கும் அளவிற்கு துணையாகும் ஆளூம்- எதிர்கட்சிகளின் உடன்பாடுகள்.
நாம் நம் போக்குகளை மறந்து நெடு நாட்களாகி விட்டன. இன்றோ.. விட்டன போக தொட்டன பலவாக. எல்லாம் நமதின்றி கையை சுடுகின்றன. அந்த அளவிற்கு அந்நிய மோகங்கள்.
பள்ளிக்கூடங்கள் போயின. படிப்புகளும் பண்பாட்டு வளங்களும் போயின. இன்று கூலிக்கு படிக்கின்றோம். குலம் என்றால் தவறென பேசுகின்றோம். தமிழ்க் குலத்தை கூண்டிலேற்றி இல்லாத திராவிடம் இயலாமையை மறைக்கிறது.
யார் சொன்னால் என்ன? இதற்கும் மேலாகவா கெட்டு விடப் போகிறோம்? என்று தனதை மறந்திட்ட சூழலில் இருப்பதை பெருமையாக பேசி உறங்கிக் கிடக்கின்றோம்..
ஆசைகள் போயின. அடைவுகள் போயின. நாடும் மக்களும் வளமின்றி தேய்ந்திட.. புதுப்புது திட்டங்கள் ஏழையரை மேலும் ஏழையராக்கி கூட்டின.
எங்கெங்கு பார்த்தாலும் இங்கு ஆளுங்கட்சிகளுக்கும் எதிர் கட்சிகளுக்கும் நாடெங்கும் சிலை வைப்பு, பெயர் வைப்பு கொடுமைகள். வேறு நன்மைகள் செய்யத் தெரியாதவர்கள்.
பொய் பேசும் எதையுமே போற்றி வளர்த்திட இங்கு போட்டியும் திரைப்பட நடிகர் நடிகர்களும் வரிசையில் கைக்கோர்த்து நிற்கின்றனர். கட்சியுமாய் புதுப்புது தோற்றத்தில்.
கோடம்பாக்கமும் கோட்டையும் ஒற்றுமை உணர்வில் நடிப்புக்களமானது. போராட்டக் குணமும் நலமும் திரைமறைவில் தொடுவாரின்றி ஒதுக்கலில்.
எங்கெங்கு பார்த்தாலும் ஒன்று போல் மக்களின் அடிமைத்தனம். உறுதி மொழிகளுக்கும் பொய் பேச்சில் மயக்கமும் உறக்கமும் தூக்கமுமாய்..
நன்றெல்லாம் இழந்திட்டு தமிழர் நாகரீகம் கானலில். மீண்டெழுமா சொல்லுங்கள்? நமது அறமும் மறமுமாய் நின்றாளும் திருக்கோயில்களும் தெய்வங்களும் திட்டுகளை வாங்கிக் கொண்டே அருள் வழங்கும் மெய்ப்பாடுகளுமாக?;
காக்க மறந்தார் கையில் ஆட்சி வந்தால் போகாத இடமெல்லாம் போய் முடிப்பார் என்று.. இன்று வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!.. என் அழுது இயலாதவர்களின் பசியை போக்கிட எழுந்த வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெருவெளியில் நுழைந்து கேடு செய்கிறது திராவிட வேடிக்கைகள். தன் பெயரை அங்கேயும் எங்கேயும் எழுதி வைத்து விடவேண்டும் என்ற கபட நாடகத்தில்.
பொல்லார்க்கு தனிங்கே வாழ்த்துகள் ? எது போனாலும் விடியாத தூக்கங்கள். தெரூவெல்லாம் தமிழின்றி முடக்கங்கள். தாய்த் தடுத்தாலும் விடேன்! என்ற செயற்பாடுகள் போயின.
அரசியல் தானொன்றே உழைப்பென்னும் போர்க்கள காட்சிகள். அதற்கே தமிழ்நாட்டு வரிப்பணத்தில் விளம்பரங்கள். அதனை பார்த்து வியந்து பேசுகின்ற மக்களாய் சிலர்.அதை மட்டுமே நம்புகின்ற உணர்ச்சிக் காய்ச்சல்கள். எதையுமே விலை கொடுத்து வாங்கும் முயற்சிகள். அதற்கேவா மக்களின் உழைப்பு?
பொதுவென்னும் போட்டிப் பொறாமைகள். புதிதென்ற போதை மயக்கத்தில் யாரோடும் சேராத பெருக்கல்கள்.
இயற்கையை ஏதாவது ஒருவகையில் பந்தாடுவது அல்லது விற்றுத் தின்பது. அல்லது கொன்று குவிப்பது?! இதுதான் இன்றைய வரலாறு..
நாளையும் இப்படியே போனால்.. நம் வருங்கால மக்களுக்கு வாழ்வாதாரம் எங்கிருந்து கிடைக்கும்? சிந்திப்பாரில்லையே..
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது தமிழுநாட்டில் வெற்றிகரமாக நடந்த குடும்பக் கட்டுப்பாடு திட்டம் இப்பொழுது எங்கே போனது? அதனை உலகமும் கைக்கொள்ள வேண்டுமல்லவா?.
அதனால் தமிழர் நமக்கு மக்கள் தொகை குறைந்து போனது. அதனால் நமக்கு கிடைத்த பயனும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பங்கு உத்திர பிரதேசத்திற்கு அடுத்த இடம் என பதினெட்டு பேருக்கு இருக்கை. அப்படி இருந்தும் விடியாதவர்களின் காலப்போக்கு.
இப்படி எதையும் காப்பாற்ற மறுத்த அரசியல். இருந்த நல் மதிப்பையும் காப்பாற்றி வளர்க்கத் தெரியாதவர்களிடம் தமிழ்நாட்டு அரசியல். தாய்த் தமிழ் மொழிக் கல்வி எல்லாம் நெருக்கடியில்.
ஊழல் ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பு எல்லாம் காணாமல் போக, புதிய முழக்கங்கள் என டிஜிட்டல் இந்தியாவாகி, நம் உழைப்பாலும் வருமூனமுமு நலமா வீட்டில் நம் கைகளில் இருக்கும் நிலையின்றி, தேவைக்கு காசை இயந்திரங்களின் கேட்டுப் பெறும் நிலைகள்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.. என்கின்றார் நம் கணியன் பூங்குன்றனார். அறிவை விட்டு வருவோர் தருகின்ற இயலாமை இலவயங்களில் குளிக்க.. தமிழர் நம் உயரிய பொருளாதார வாழ்வு வறண்டு போய் விட்டது.
இப்பொழுதெல்லாம் யார் எதை வேண்டுமானாலும் பேசலாம். உலகமே ஒரு குடும்பம் என்ற முழக்கம் சொல்லி நடக்கின்றனர். ‘பொருளின்றி அமையா உலகத்தில்’ எப்படி ஏழை நாடுகள் வாழும்?
கடலில் கரைத்த பெருங்காயத்தை எங்கு போய் தேடுவது? நாமும் சிந்தித்தெழ வேண்டும்.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்.. அதுதான் மக்களுக்கு ஒட்டும் உறவையும் ஏற்படுத்தும். இல்லாத நாடுகளை இருக்கும் நாடுகள் நேசிக்கும் வழக்கம் வேண்டும்!
அதுவே உழைப்பு, நம்பிக்கை, உறுதியென்ற கைகொடுப்பூவாக அமையும். இதுவெல்லாம் நேர்மையின் நீராட்டுதல் போல. அதை தமிழர் நாம் பயின்றெழ நம் நாடும் மொழியும் நம் கைக்குள் இருந்து முன்னேறும்.
இதனை ஊரும் உறவும் நாடும் மக்களும் உணரத் தழைக்கும் நம் வளர் தலைமுறைகள். வாழ்த்துக்கள். இவையே இனி அரசியலாகட்டும்.
வணக்கம்.
பாவலர் மு இராமச்சந்திரன்,
தலைவர் – தமிழர் தன்னுரிமை கட்சி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!