உலகம்

மலேசிய மண்ணில் முதுகுளத்தூர் பெரும் புலவர் சுவாமி இராமதாசரின் 110 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

66views
ஜோர்ஜ்டவுன் :
கடந்த 20.11.2026 அன்று ஜோர்ஜ்டவுனில் உள்ள ஜாலான் சுங்கை இராமதாசர் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றமும் இராமதாசர் தமிழ்ப்பள்ளி வாரியமும் இணைந்து நடத்திய பெரும் புலவர் மகான் சுவாமி இராமதாசரின் 110-ஆவது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பெரும் புலவர் மகான் சுவாமி இராமதாசர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலூகா, கொழுந்துரை கிராமத்தைச் சேர்ந்தவர். தனது இளம்வயதில் மலேசியா சென்று அம்மண்ணிற்கு அரும்பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, ஓர் இனம் வாழ வேண்டுமானால் அதன் மொழி வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஓர் இனத்தின் அடையாளத்தையும் பண்பாட்டையும் நமது முன்னோர்கள் காலங்காலமாகப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவிற்கு வருகை புரிந்த பெரும் புலவர் மகான் சுவாமி இராமதாசர், நமது தாய்மொழியான தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் அரும்பணியாற்றியவர் என்று அவர் குறிப்பிட்டார்.வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும், பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும் அவர், சுவாமி இராமதாசர் விட்டுச் சென்ற வரலாற்றையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இராமதாசர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் வினோத், பெரும் புலவர் இராமதாசரின் கொள்கைகளும் சிந்தனைகளும் இன்றளவும் முக்கியத்துவம் பெற்று விளங்குவதாகக் கூறினார். பினாங்கு தமிழ்மண்ணுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் புலவர் ஆற்றிய பங்களிப்பையும், அவர் கற்பித்த பண்பாட்டு நெறிகளையும் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பள்ளி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றத்தின் தலைவர் செந்துறைக் கவிஞரின் உரையை வாசித்த மன்றத்தின் ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் ரவிச்சந்திரன் மாணிக்கம், தமது உரையில் சுவாமி இராமதாசர் ஆற்றிய அரும்பணியைப் போற்றும் வகையில் ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியின் பெயர் இராமதாசர் தமிழ்ப்பள்ளி என மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், பெரும் புலவர் மகான் சுவாமி இராமதாசரின் 110-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமுவிற்கு மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றம் ‘திருப்பணிச் செம்மல்’ விருதை வழங்கிச் சிறப்பித்தது.
அதேபோல், மலேசியத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் இரா. திருச்செல்வத்திற்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருதும், கவிஞர் முத்துப்பாண்டியனுக்கு ‘பாமுகில்’ விருதும், செந்துறைக் கவிஞர் சோலை முருகனுக்கு ‘பாக்கனல்’ விருதும் வழங்கப்பட்டன. இம்மூவருக்கும் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு விருதுகளை வழங்கினார். டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமுவைப் பாராட்டி பாவலர் கோவதன் வாழ்த்துக் கவிதை வாசித்தார்.பெரும் புலவர் இராமதாசர், ஆய கலைகள் 64-இல் 51 கலைகளைப் பல்வேறு கலை விற்பன்னர்களிடம் கற்றுத் தேர்ந்தவர் என்றும், தாம் கற்ற கலைகளைப் பிறரும் பயன்பெறும் வகையில் சிலம்பம், மல்யுத்தம், பரதநாட்டியம், சமயம் உள்ளிட்ட கலைகளைப் பினாங்கு இளைஞர்களுக்குப் போதித்தவர் என்றும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற இராமதாசர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களுக்குப் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!