தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

72views
ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சார்பு நீதிபதி தலைமையில் நடைபெற்றது. கூலியில் பாதியை மட்டும் வழங்கி விட்டு, முழு ஊதியத்தையும் பெற்றுக் கொண்டதாக வனத்துறை அதிகாரிகள் கையெழுத்து கேட்பதாக மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவர் புகார் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஆணைக்குழுவின் மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான இருதய ராணி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மலைவாழ் மக்களுக்கான குறைகள் குறித்து நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது மலை வாழ் மக்கள் இனத்தை சேர்ந்த ஜோதி என்பவர் கூறும் போது, சூழல் மேம்பாட்டுக் குழுவில் தான் பணியாற்றிய வேலைக்கு தகுந்த கூலியில் பாதியை மட்டும் வழங்கி விட்டு, முழு ஊதியத்தையும் பெற்றுக் கொண்டேன் என வனத்துறை அதிகாரிகள் கையெழுத்து கேட்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து வனத்துறையினரிடம் சார்பு நீதிபதி இருதய ராணி காட்டமாக பேசினார். நீங்கள் அனுப்பும் அறிக்கையை விசாரணை நடத்தாமல் அப்படியே முடித்து வைப்பதில்லை. ஏன் தவறான அறிக்கை அனுப்பினீர்கள், நீங்கள் என்ன செய்தாலும் என்னுடைய கவனத்திற்கு வந்து விடும் எனவும் தெரிவித்தார்.
தாங்கள் அளித்த புகாருக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என மலை வாழ் மக்கள் தெரிவித்தனர். மலைவாழ் மக்கள் அளித்து நடவடிக்கையின்றி உள்ள 14 புகார்களையும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆதார் அட்டை, வங்கி எண் தொடக்கம், குடும்ப உறுப்பினர் அட்டை கோரும் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் 34 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் உடைகளை சார்பு நீதிபதி மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!