13views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
பழைய கட்டுப்பட்டித்தனங்களில் இருந்தும்…
காவிக் கண்ணராவித்தனங்களில்
இருந்தும்
இன்னும் முழுமையாக
விடுபடவில்லை இந்த தேசம்…
எண்பது ஆண்டுகளை
எட்டி இருக்கிறோம் என்கிறார்கள்…
எட்டாயிரம் ஆண்டுகள்
பின்னோக்கி இருக்கிறோம் என்பதை சொல்ல
மறந்து விடுகிறார்கள்…
வெள்ளையன் காலத்து
முன்னேற்றங்கள் கூட
இந்த கொள்ளையர் காலத்தில்
குழி தோண்டி புதைக்கப்படுகின்றன…
அறிவியல் முன்னேற்றங்கள்
மறைக்கப்பட்டு
இதிகாசப் புராணங்கள்
முன்னிறுத்தப்படுகின்றன…
நேருப் பெருமகனார்
போன்றோர் உயர்த்திய
மேரு போன்ற உயர்வுகள்
பாதாளங்கள் நோக்கிப் பாய்கின்றன…
சாலை வசதிகள் இன்னும்
சந்திக்காத கிராமங்கள்
இங்கே லட்ச கணக்கில்…
கழிப்பிட வசதிகள் இல்லாதவர்கள் தொகை
கோடிக்கணக்கில்…
அவசர மருத்துவமனைகளும்
ஆரம்பப் பள்ளிகளும்
எட்டிப் பார்க்காத குக்கிராமங்கள்
ஆயிரக்கணக்கில்…
முளைத்து வரும் முன்பே
ஏகலைவர்கள் கட்டை விரல்கள்
வெட்டப்படுகின்றன…
கருக்களில் வைத்தே
பெண் குருக்கள்
மூச்சுக் குழல்கள்
முறிக்கப்பட்டு விடுகின்றன…
வனாந்தரங்களே வாழ்வாதார
இடங்களாகி
வயிறு கழுவுதற்கும்
வக்கற்றவர்கள் தொகை
கோடிக்கணக்கில்…
இல்லாதவனிடம் இருந்து பிடுங்கியே
இருப்பவன்
மடி நிறைக்கிறார்கள்…
இருந்தும்…
இன்றும் கொடியேற்றி…
இனிப்பு வழங்கி…
கம்பீரத் தலைப்பாகை கட்டி
கொஞ்சம் கூட
வெட்கமே இல்லாமல் சொல்வோம்
வரும் ஆண்டும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்…
ஏழைகள் சிரிப்புக்கு
ஒரு வழி செய்யாமல்
எத்தனை ஆண்டுகள்
கோட்டைப் படியேறி என்ன
நீ கொடியேற்றி என்ன?
add a comment






