14views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மங்கலகரமாய் பூக்கும்
மலர்களைப் போல
மங்களகரமான இந்தப் பெண்கள்…
முகையாகி மலர்தல் போல்
இரண்டும்
மலர்ச்சிகளின் ரகசியங்கள்…
பூப்படைவது என்பதால் தான்
பூக்கள் போல்
பெண்களும் என்றார்களோ?
பூக்களுக்கும் பெண்களுக்கும்
தொடர்புகள் அதிகம்…
மென்மைகளில் மட்டுமல்ல
கவர்ச்சிகளிலும்…
கண்கட்டு வித்தைகளிலும்…
வன்மைகளிலும்
கசக்கி எறிவதிலும்…
சமயங்களில் கடைகளிலும்
நடைபாதைகளிலும்
வணிகப் பொருளாகவும்…
எல்லா உரிமைகளும்
வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும்
எல்லா உரிமைகளும்
மறுக்கப்பட்டவர்களின்
கிழிந்த பக்கங்களும் அவர்கள்தான்…
திக்கற்றவர்கள் போல
ஒருவகையில் வக்கற்றவர்கள்…
சுயமரியாதை சீர்திருத்தங்கள்…
பகுத்தறிவுப் பிரச்சாரங்கள்…
சம உரிமைச் சமூக எழுச்சிகள்
கொஞ்சம் அவர்களை
வளர்ச்சிக்கு மலர்த்துகின்றன…
என்ன இருந்தாலும்
வளர்ச்சி பெற்ற நாடுகள்
எனப் பேசும்
மூளையற்ற முண்டங்களின்
ஏவுகணை வீச்சுகளில்
கருகும் மலர்கள்
காக்கும் வழிமுறைகள்
உலகின் எந்தப் பெண்ணியக்கங்களும்
பேசவில்லை..
கொடுமைகள் பார்த்தும்
கூனிக் குறுகிக் கிடக்கும் ஐநாக்கள்..
மலர்ந்தும் மலராத
பள்ளிக் குழந்தைகளான
ஈரானிய மலர்களுக்கு
இதய அஞ்சலிகள்..
இது இறந்த பூக்களுக்காக
கண்களின் ஈரப்பூக்களை வைக்கும் நேரம்…
வெட்கமாக இருக்கிறது
மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்கு…
add a comment






