இலக்கியம்கவிதை

லதா கவிதைகள்

273views
தையலை உயர்வு செய்
பெண்மை போற்றும் பாரதமே
பேரின்ப பொருளாய் காணாதே
தாய்மை ஒன்றே உலகினில்
தலைமை என்று மறவாதே…
குடும்பம் ஒன்றே கடவுளாய்
குடிலைச் சுற்றித் தவமிருப்பாள்
குயிலுக்கும் குரல் கொடுப்பாள்
கூகைக்கும் பதில் சொல்வாள்…
ஆணுயர தலைகுனிந்து
ஆதாரமின்றி அடையாளமானவள்
ஆசையின்றி சிகரம் தொட்ட
மீசையில்லாப் பாரதியவள்…
நிகரென்று யாருமில்லை
சமமென்று வாழும் பெண்மணிகள்
சிகரமென்று உயர்த்திப் போற்றிடுவோம்
வரமென்று வாழ்த்தி வணங்கிடுவோம்…

பெண்
பெண்ணுக்கும் மீசையுண்டு
பகைப்பவன் நெருங்கும் போது…
கல்லுக்கும் காதலுண்டு
கவிஞன் பார்வை படும் போது…
குயிலுக்கும் குரலுண்டு
கண்ணம்மா நினைவில் வரும்போது…
தென்றலுக்கும் சுவாசமுண்டு
சுதந்திரத்தைப் பரிசளிக்கும்போது…
வீழ்ந்தேன் என நினைப்பதுண்டு
விதைத்த விதை துளிர்க்கும்போது…
சாதிக்கும் புதுமையுண்டு
சாதியைச் சமாதியாக்கும் போது …
பசிக்கும் தீப்பிழம்பு உண்டு
புதியன விரும்பும் போது…
புத்துயிர் அளித்து வா..
பாரதி காண நினைத்த பெண்ணென…
லதா
சிவகாசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!