நேர்காணல்

நிலவை ஒளிர வைத்த சூரியன்கள்!

193views
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும்   சில மனிதர்கள்   நமக்கு இன்ஸ்பிரேசனாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் சாதனைகள் இந்த சமூகத்தின்மீது நமக்கு நம்பிக்கை நாற்றுக்களை ஊன்ற வைக்கிறது.   அவர்கள் வாழ்வின் அனுபவங்கள் நமக்கு  உத்வேகம் தந்து நம்மை தட்டி எழுப்புகிறது. அவர்கள் வாழ்வின் வெற்றிகள்,  நமக்கு பிரமிப்பைத் தருகிறது. அவர்களின் கருத்துக்கள் நம் மனதினை செப்பமிட்டு, சீர்ப்படுத்துகிறது.
கீழக்கரை என்ற சிறுகிராமத்தில் பிறந்து, உயர்கல்வி கற்று இன்று துபாயில் வசிக்கும் தமிழர்களுக்கு பரிச்சயமான    மரியம் சலாஹூத்தீன்  அவர்கள்   சிறுவயது முதல்   தன்னை இன்ஸ்பிரேசன்ஸ் பண்ணிய      மனிதர்களைப்  பற்றி  இங்கே மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார் :
  • அப்பாவின் அறிவுரை!
ங்களுக்கு 8 வயது இருக்கும்போதே நாங்கள் சாப்பிட்ட தட்டினை, நாங்களே எடுத்துச் சென்று சமையல் அறையில் கழுவி வைக்கும் பழக்கத்தை அப்பா கற்றுத் தந்தார்.
அதைப் பார்த்த என்  பாட்டி, அப்பாவைப் பார்த்து “குழந்தையை ஏன் வேலை செய்யச் சொல்லி கஷ்டப்படுத்துகிறாய்?  வேலை செய்யத்தான் வேலைக்காரர்கள் இருக்கிறார்களே…”  என்று கேட்டார்.
உடனே அப்பா, “உங்கள் பேத்தி, தன் வேலையை, தானே செய்தால்தான் அவளுக்கு அந்த வேலையைப் பற்றி தெரிய வரும். கூடவே பொறுப்பும் வரும் அம்மா!  உங்க பேத்தியின் எதிர்காலத்திற்கு இது நல்லது என்று நினைக்கிறேன் அம்மா” என்று  விளக்கம் சொன்னார்.
அப்படி  அப்பாவின் அறிவுரைகளால் அன்று கற்றுக் கொண்ட அதுபோன்ற  சிறுசிறு வேலைகள் இன்று  பெரிதும் பயனாக இருக்கின்றன!

  • குழந்தை   மனம்!
நாங்க சின்னக்குழந்தைகளாக இருக்கும்போது… சேனாஆனா  (பி.எஸ்.ஏ.) பெரியவாப்பா விமானத்தில் இருந்து வரும்போது அங்கு கொடுக்கும் சாக்லேட்டுகளை  பத்திரமாய் வைத்திருந்து எங்களுக்கு கொண்டு வந்து கொடுப்பார்.
இதை நான் ஏன் இன்ஸ்பிரேசன்ஸ்   என்று சொல்றேன்னா… அவங்க எங்களை நெனச்சு கொண்டு வரணும்னு அவசியமில்லை… அந்த சின்னவயசுல நானும் கேட்கப்போறதில்லை… குழந்தைகளான எங்களை நெனச்சு, அதை கொண்டு வந்து எங்களுக்கு தர்றாங்கள்ல அது கண்டிப்பாக ஒரு பெரிய ஆளோட தன்மையை, பெரிய மனசைக் காட்டுது.
இது மட்டுமல்ல… அவங்ககிட்ட இருந்தே நிறைய இன்ஸ்பிரேசன்ஸ் உண்டு. அவங்கமேல எனக்கு தனி மரியாதை உண்டு. குறைவாக படித்திருந்தாலும். தன்னம்பிக்கையோடு சிறிய தொழில் தொடங்கி, அதில் என் தந்தையை அவங்க பார்ட்டனாராக சேர்த்து,  மிகப் பெரிய அளவில் சாதனை படைச்சாங்க.. அவங்களோட திறமையும்  கடின உழைப்பும்  இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடியது!

  • என் முதல் ஆசிரியை!
டித்தது எங்கள் நினைவில் நிற்பதற்காக எங்க அம்மா, அதனை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து,  திரும்ப திரும்ப கேட்டு மனதில் பதிவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
வீட்டுக்குள்ளேயே பிள்ளைகள் ஒரே இடத்தில் உட்கார்ந்து படித்தால், அவர்களுக்கு போரடிக்குமே என்ற எண்ணத்தில், காற்றோட்டமாக உள்ள   பூங்கா, கடற்கரை போன்ற வெளி இடங்களுக்கு  அழைத்துச் சென்று படிக்க வைப்பார்கள்.
செல்லம் கொடுக்கும் அதேநேரத்தில் நாங்கள் திருக்குர்ஆன் படிப்பதிலும், உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்பதிலும் மிகுந்த கண்டிப்பாக இருந்தார்கள். எங்களை ஒழுக்கத்துடனும், தமிழ் இஸ்லாமிய பண்பாட்டுப்படியும் வளர்த்தார்கள்.
பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று சொல்லித் தந்தார்கள்.  உணவை வீணாக்கக்கூடாது, ஆடம்பரச் செலவுகள் செய்யக் கூடாது என்றெல்லாம் அறிவுரை வழங்குவார்கள்.  அன்று அம்மா எனக்குச் சொன்ன அறிவுரைகளையே, இன்று நான் என் மகள்களுக்கும் சொல்லி வளர்க்கிறேன்.

  • படிக்காத மேதை!
ருமுறை எங்கள் வீட்டுக்கு ஒரு பெண்மணி வந்தாங்க.
 “நான் ரூமுக்குள்ளபோய் ட்ரஸ் மாத்திட்டு வர்றேன்” என்று  பாட்டியிடம் சொல்லிட்டு உள்ளே போனாங்க.
உள்ளே சென்று கதவை சாத்திவிட்டு, பாட்டியின் கட்டில் தலையணைக்கு கீழ் இருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்து நகையைத் திருடி இருக்காங்க.
எங்க பாட்டிக்கு திடீர்னு சந்தேகம் வந்திருக்கு. ட்ரஸ் மாத்தணும்னா பாத்ரூமைத்தானே பூட்டணும். ஏன்  ரூமை பூட்டுதுன்னு சந்தேகம் வந்து கதவைத் தட்டி இருக்காங்க.
அந்தப் பெண் வெளியே வந்தவுடன் உட்கார வைத்து, செக் பண்ணி பார்த்தால் எங்க பாட்டியோட நகைகளை எல்லாம் எடுத்து  தன்னோட ட்ரஸ்க்குள்ளே அந்தப் பெண் ஒளிய வெச்சது தெரிய வந்திருக்கு.
படிப்பறிவு இல்லை  என்றாலும் பட்டறிவு நிறைந்த என் பாட்டியின் புத்திசாலித்தனம் என்னைக் கவர்ந்தது!
  • படம் தந்த பாடம்!
னக்கு பிடித்தமான   ஆங்கிலப்படம்  PAY  IT  FORWARD.
இந்தப் படத்தில் ஒரு ஆசிரியர், மாணவர்களுக்கு ஒரு  அஸய்ன்மென்ட் தருவார்.
அப்போது அன்பான ஒரு மாணவன் சொல்வான் :
   “நான்  எனக்கு அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு நல்லது பண்ணப் போறேன். அவங்களுக்கு காசு வேண்டும் என்றால் காசு கொடுப்பேன்.  வீடு கொடுக்க வேண்டுமென்றால் வீடு கொடுப்பேன். அவர்கள் எனக்கு கைம்மாறாக என்ன செய்ய வேண்டும் என்றால் இவர்களைப்போல் கஷ்டப்படுகிற இரண்டு பேருக்கு உதவி செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த புதிய இரண்டு பேர்களும் இன்னும் இரண்டு புதியவர்களுக்கு  உதவி செய்ய வேண்டும்”
இப்படி  நன்மைகளை தொடர்ந்து செய்யத் தூண்டும் அந்த நல்ல படம்!

  • அழகிய முன்மாதிரி…
    என்னுடைய வழிகாட்டியாக நான் நினைப்பது இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்களுடைய எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
    நபி பட்டம் கிடைப்பதற்குமுன் அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் அவர்கள் நபியான பிறகும், மன்னரான பிறகும் இருந்தார்கள். நபிகளாரிடம் எல்லா உயர்ந்த குணங்களும் குவிந்து இருந்தன.
    நபிகளார் பெண்களை மிகவும் மதித்தார்கள். தனது மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் மிகுந்த அன்போடு இருந்தார்கள். மனைவி சொல்லும் ஆலோசனைகளை கேட்டார்கள். மனைவி உடல்நிலை சரியில்லாதபோது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்திருக்கிறார்கள்.
    மதினாவில் மஜ்ஜிதுன் நவபி பள்ளிவாசல் கட்டும்போது நபிகளாரும் சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். அனைவருக்குமே உதவியாய் இருந்திருக்கிறார்கள்.
    மதினாவில் நபிகளார் ஒருமுறை தோழர் கொடுத்த செடியை ஒருவரின் தோட்டத்தில் நட்டிருக்கிறார்கள். நபித்தோழருடன் சேர்ந்து தோட்ட வேலையும் பார்த்திருக்கிறார்கள்.
    அதேபோல் இன்னொருமுறை நபித்தோழர் சொன்ன ஆலோசனையும் நபிகளார் கேட்டு அதன்படி செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களையும் நபிகளார் ஏற்றுக் கொள்வார்கள்.
    தனக்கு துரோகம் செய்தவர்களையும் மன்னித்திருக்கிறார்கள். எவரையுமே அவர்கள் தண்டித்தது இல்லை. நபிகளாருக்கு பல சோதனைகள் வந்தபோதும் அவர்கள் துவண்டு விடவில்லை. சோர்ந்துவிடவில்லை. நம்பிக்கையோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவனும் அவர்களுக்கு துணையாக இருந்தான். நபிகளாரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் கடல் அளவு உள்ளன!
பேட்டி : திருச்சி சையது

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!