நேர்காணல்

இங்கிலாந்தில் கோவிட் பணியாளர்களுக்கு உதவும் காயல்பட்டினத்தின் ‘முதல் பெண் ஓவியர்’

2.77Kviews
தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்து ..கலை இலக்கியத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி உதவி செய்து வரும், இங்கிலாந்தில் வாழும்   ஓவியரும் கவிஞருமான மீரா அகமத் அவர்களை மண்ணின் மணத்தை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு கோடை மழை ஓய்ந்த மாலையில் அழைத்தேன்.   பேசப் பேச அவரிடமிந்து வரும் கருத்துக்கள் உதிர்ந்து விழும் வேப்பம் பூவின் வாசம் போலவே அவரின் கருத்துக்கள் மணம் வீசிக்கொண்டிருக்கிறது இன்னும்.  அந்த ஈர மழையின் வாசமும் வெப்பம் பூ வாசமும் உங்களால் உணர முடியும் இப்போது..
வணக்கம் ….கடந்த எட்டு ஆண்டுகளாக உங்கள் முக நூல் பக்கத்தை கவனித்து வருகிறேன்….ஒரு ஓவியராக, ஒரு புகைப்படக் கலைஞராக, கவிஞராக …இன்னும் ஏராளமான கலைகளை கை கொண்டவராக  உள்ளீர்கள் …. உங்களை பற்றிக்  கொஞ்சம் சொல்லுங்களேன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள்  அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
நான் பிறந்தது மெட்ராஸில். வளர்ந்தது எல்லாம் காயல்பட்டினம் தான்.  உம்மா மஹ்மூதா பீவி. வாப்பா அகமது கபீர்.
பாம்பேயில் நவரத்தின வியாபாரம் செய்ததால் ‘கபீர் சேட்’னு  எல்லோரும் சொல்லுவாங்க. நிறைய தர்மம் செய்வார்கள்.  நான் இரண்டு வயது குழந்தையாக  இருக்கும் போதே எங்க வாப்பா தவறிட்டாங்க. அதன் பிறகு  மெட்ராசில இருந்து ஊர்  வந்துட்டோம்.
ரொம்ப அழகான கடற்கரை நேர்த்தியான தெருக்கள், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு மசூதி, நிறைய பள்ளிக்கூடங்கள்  இருக்கும்  எங்கள்  ஊரில்,  சொன்னால் நம்ப மாட்டீங்க போலீஸ் ஸ்டேஷன், மதுக்கடை மற்றும் சினிமா தியேட்டர் இந்த மூன்றும் மட்டும்  இல்லை! ஆனால் சர்ச்களும்  கோயில்களும் உண்டு.  மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான ஊர்.
எங்கள் ஊர் பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் ஊர்.
அதற்கடுத்து 5 கி. மீ. ல்  வீரபாண்டியன் பட்டினம் அநேகமாய் கிருத்துவர்கள் வாழுகின்ற ஊர். அங்கு புனித தோமையார் ஆலயம்
ஐரோப்பிய கோத்திக் கட்டட கலை முறைப்படி கட்டப்பட்டதாகும்.   அதிலிருந்து ஒரு 5கி. மீ. ல் திருச்செந்தூர் முருகன் கோயில் பத்தி எல்லோருக்குமே தெரியும் இந்துக்கள் அதிகம் வாழும் ஊர்.
பாண்டியர்களின் தலை நகரம் மதுரை.துறை முகப்பட்டினம் கொற்கை. இதனுடைய சிறிய படகுத் துறைமுகங்களாக காயல் பட்டினம், வீர பாண்டியன் பட்டினம், குலசேகரன் பட்டினம் விளங்கியது.
எங்க ஊர் அரசு பள்ளியில் தான் பள்ளிப்படிப்பு.  கோவிந்தாம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் B.com யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர். திருமணமான பின் இங்கிலாந்து வந்துட்டேன். கணவர் பாயிஜ் மற்றும் ஆதில், ஆலியா, ஆமிர் மூன்று குழந்தைகளோடு தற்போது
கென்ட்(Kent) மாகாணத்தில் வசித்து வருகிறேன். அதை  ‘Garden of England’ என்று அழைப்பர்.
‘பொதுவாகவே ஒரு இஸ்லாமிய குடும்ப பின்னனியில் கலை இலக்கியம் என்றாலே ஹராம் என்று நிலவும் சூழலில் உங்கள் பெற்றோர் இதறகு ஒப்புக் கொண்ட பின்னணிப் பற்றிச் சொல்ல இயலுமா?’
கலை இலக்கியமென்றாலே தவறென்று ஒரேடியாய்  சொல்லி விடவில்லையே. எல்லாவற்றிக்கும் சில பல  வரைமுறைகளை  வகுத்து வைத்திருக்கிறாரகள்.. அவ்வளவு தான். எனக்கு எந்த வித தடங்களும்  இருந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் நல்ல சப்போர்ட்டா தான் இருப்பாங்க வீட்டில், உறவினர்கள் மற்றும் சமூகத்திலும்.
கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருந்த படியே ஓவிய வகுப்பு எடுத்தேன்.  கிரீட்டிங் கார்டு செய்து விற்பனை செய்வேன். பள்ளி  பேன்சி டிரஸ் போட்டிகளுக்கு மாடல்கள்  செய்வேன். கலயாண மணப்பெண்களுக்கு மருதாணி போடுவேன். அப்பவும்  இப்படித்தான்  எதையாவது செய்து கொண்டே இருப்பேன்.
“வெளி நாட்டு வாழ்க்கையே இயந்திர வாழ்க்கை என்று எனக்கும் தெரியும்..வெளி நாட்டு வாழ்கையில், ஒரு ஓவியராக, கவிஞராக, புகைக்கப்படக் கலைஞராக, வெளி நாட்டில் கார் ஓட்டும் ஒரு ஓட்டுநராக எப்படி சமாளிக்க முடிகிறது…”
வெளிநாடு என்றில்லை எங்கு இருந்தாலும் நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோமோ அதன் படி தான் நம் வாழ்க்கை அமைகிறது. இன்னும் சொல்லப்போனால் ஊரில் ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி செல்லும் குழந்தையின் தாய் என்னை விட மிகவும் பிசியாக இருப்பதாகத்தான் எனக்குப்படுகிறது.  ஒரு ப்ராஜெக்ட் முடிக்கிறதுக்கே அவ்வளவு முயற்சியும் போடுறாங்க. சின்னசின்ன விஷயங்களையும் மிகவும் சிரத்தை எடுக்கிறார்கள். தேவையே இல்லை. தேவைப்படும் விஷயங்களுக்கு தேவைப்படும் அளவு மட்டும்  முயற்சி மற்றும் நேரம் செலவழித்தாலே போதும். நமக்கு வேண்டியதை எல்லாவற்றையும் செய்ய போதுமான நேரமும் சக்தியும்  கிடைக்கும்.
கார் ஓட்டுறத கேட்டீங்க. கார் ஓட்டுறது நம் தேவைக்கு தானே. எனக்கு ஸ்கூல், GP கிளினிக், ஹெலத் சென்டர்,  சில்ட்ரன்ஸ் சென்டர், பார்க் எல்லாமே ஒரு ஐந்து, பத்து நிமிடம் நடக்கிற தூரம் தான்.ஒரு சூப்பர் மார்க்கெட் கூட வீட்டுக்கு எதிர்த்தாப்ல தான்.
இந்த வீட்டை வாங்கும் போது அப்டி ஒரு கடை இருப்பதே தெரியாது ஏனென்றால் எண்ட்ரன்ஸ் டோர் நேரா தெரியாது. வி ஆர் லக்கி. அதும் இந்த  lockdown சமையத்தில் மிகவும்  உதவியாக இருந்தது.  சிறு தொழில்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தி விட்டது கொரோனா. பனிப்பொழிவு காலத்திலும் மிகவும் பயனளிக்கும் இந்தக்கடை.
ஒரு ஐந்து நிமிட வேலைக்காக அரை மணி நேரம் டிராபிக்கில் நின்று, கார்  பார்க்கில் இடம் கண்டு பிடித்தால் பக்கத்தில் இருக்கிற கார் சரியாக பார்க்  பண்ணி இருக்காது. இனி வேற இடம் தேடனும்! நடப்பது எனக்கு பிடித்ததும் கூட. ஹாலிடேஸ்ல லாங் டிரைவ் போகும் சமயத்தில்   கணவரரோடு ஷேர் பண்ணி கார் ஓட்டுவேன்.
ஒரு குடும்பத் தலைவியாக, அதுவும் ஒரு கைக்குழந்தைக்குத் தாயாக இதற்கான நேரங்களை எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள்..
என் மகனுக்கு வயது 2. எல்லா இடத்திலும் உருண்டுட்டே வருவான். நான் ஏதாவது செய்யும் போது அவனுக்கும் ஒரு வேலை கொடுப்பேன். ரொம்ப சிம்பிள். நம்ம வேலையை தொந்தரவு பண்ணாம அவன் வேலையில்  மும்முரமாயிடுவான்.  இப்ப நான் ஓவியம் வரையிறேனோ இல்லையோ அவன கண்டிப்பா தினமும்  வரைஞ்சிடுவேன். டீ போடுற சத்தம் கேட்டுட்டா
எங்கிருந்தாலும் ஓடி வந்து இஞ்சி இடித்து தருவான்.ஏலக்காய் போட மறந்தால் கையை காட்டி (பேர் தெரியாது)எடுத்து கேட்பான்.   தோட்டத்தில் வேலை பார்க்கும் போதும் அப்படித்தான்.  இப்போதைய அவனோட புது செல்லபிராணி மண்புழு.
முற்போக்கான பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்ப்பார்கள், அந்தச் சுதந்திரம் திருமணத்திற்குப்  பிறகு இருக்கும் என்னும் சதவிகிதம் அதிகரித்து வருகிறது  என்பதும் உண்மை தான், உங்கள் கணவர் எப்படி ….
அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்க தான். இப்போது ராயல் மெயிலில் வேலை.  அவர் தந்தை 1968லேயே மருத்துவராக இங்கு குடியேறியவர்.
Painting ஸ்டால் போட, Pampering Evening,  ஸ்கூல்களில்  ஹென்னா மற்றும் face painting  ஸ்டால்ஸ் போட அழைத்துப் போவது set up பண்ணுவது, மற்றும் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது, கிட்சனில் உதவி என எல்லா விதத்திலும் உதவிகரமாக இருப்பார்.
ஓவிய ஆர்வம் எப்படி வந்தது?
சிறு வயது முதலே நோட் புக்கில் ஸ்கூல் பெஞ்சில் எனக்கு எப்போதும் வரைந்து கொண்டிருப்பேன். பின்பு ஆறுமுகநேரி மூத்த ஓவியர் பிச்சை சாச்சா  பெர்ணாண்டோ என்
ஆர்வத்தை பார்த்து மகிழ்ந்து எனக்கு ஆயில் பைண்டிங்கை அறிமுகப்படுத்தினார். அப்போது எனாமல்  பெயிண்ட் வைத்து தான்  வரைவேன். ஒரு ப்ளைவுட்டில் மைதா மாவு பேஸ்ட் போட்டு துணி வைத்து ஒட்டி காய வைத்து படம் வரைவேன். என்னடா ப்ளேக் அண்ட் வயிட் காலத்தில் மாதிரி பேசுறேனேன்னு நினைப்பீங்க தானே.  அப்டியில்லை அது ஊர்பக்கம் வேறு.  சிட்டியாக இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம். ஆர்வம் இருந்தால் எல்லாம் தானே பண்ணுவோம்.அப்படிதான் இதும்.
இன்னொரு நலம் விரும்பி காயல் இப்னு  அப்பாஸ் என்றொரு எங்கள் ஊரு ஆர்ட்டிஸ்ட்.  அந்தஸ் காலத்தில் வீட்டுக்கு தெரியாமல் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்த கதைகள் கூறுவார். சிறுவர்களுக்கு இந்தக்  கலையை கொண்டு சேர்ப்பதில் மிகுந்த அர்வம் கொண்டிருந்தார். அவரும் அவ்வப்போது என்கரேஜ் பண்ணுவார். அவர் காயல் மாநகரில் முதன் முதலில் என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அதில் காயல்பட்டினத்தின் ‘முதல் பெண் ஓவியர்’ என்றும் என் பெயர் குறிப்பிட்டிருந்தார்.
கேரளா புயல் மழை காலத்தில் உங்கள் ஓவியங்கள் ஒரு சிறு அணிலைப் போல உதவியது என்று அறிந்தேன் …அதைப் பற்றி எங்கள் வாச்கர்களுக்குச் சொல்லுங்களேன் …..
2018 ல்  கேரளா வெள்ளம் வந்த போது நிதி திரட்ட ஓவியங்கள் தர முடியுமாவென நண்பர், இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். இங்கிருந்து அனுப்புவது அவ்வளவு எளிதாய் இல்லை. அப்போது நான் இந்தியாவிடுமுறைக்கு   வந்திருந்த நேரத்தில் ஏன் நாமே இங்கு இருக்கும்போதே வரைந்து கொடுக்கலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே அங்கிருந்த என் அக்காவின்  மகள் அபிரா(@abaticakes) வைத்திருந்த தரமான வாட்டர்கலர்  பேப்பர்களை தந்து உதவினாள். அப்போது என் மகன் வயிற்றில் ஐந்து மாதமென்பதால் வாந்தி மயக்கம் வேறு!  எப்படியோ ஒரு பத்து ஓவியங்கள் அவசரம் அவசரமாக வரைந்து முடித்தேன்.  எல்லாமே கேரளாவின் சிறப்பம்சங்கள் குறித்த படங்கள்.  அவைகளை நான்  போது துபாய்
வழியாக இங்கிலாந்து திரும்பும் போது எடுத்து சென்று ஓவிய கேலரி உரிமையாளர் மற்றும் ஆர்ட் க்யூரேட்டர் ஜெஸ்னோவிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் இன்னொரு சிக்கல் அவர்கள் பிரேம் போட்டால் தான் ஏற்றுக்கொள்வோம் என்றார்கள். அதற்கு பணம் எங்கே போவது? அபுதாபி அய்மானை தொடர்பு கொண்டதில் உதவ முன்வந்தது ஆனால் சிறிதும் அவகாசம்  இல்லைஎன்பதால்  உடனே என் UK தோழி ஒருவருக்கு பேசி அவர் உடனே அவருக்கு தெரிந்தவர்களிடம் பணம் சேகரித்தார்.  ஒரு வகையாய் ஓவியங்களை கேலரியில் கொடுக்க அக்காவின் இன்னொரு மகள் நஸ்ரின் (#abati@46thaikastreet) காரில் கூட்டி சென்றாள். போகும் வழியில் டயர் பங்க்ச்சராகி அந்த பயணம் கேன்சலாகி விட்டது.  பின்பு நான் uk வந்த பிறகு அவள் தான் கொண்டு போய் கொடுத்தாள். ‘Together we can’ என்று ஒரு கண்காட்சி
கேரளா நிதி திறட்டுவதற்காக UAE யின் ஏழு எமிரேட்டுகளிலும்( Abu Dhabi, Dubai, Sharjah, Umm al-Qaiwain, Fujairah, Ajman and Ra’s al-Khaimah)  நடந்தது அதில் என் ஓவியங்களும் இடம் பெற்றிருந்தது.
இது நடந்து இரண்டரை  வருடங்களுக்கு பிறகு திடிரென இங்குள்ள ஒருவரிடமிருந்து மெசேஜ் வந்தது.  ரெண்டு வருடங்களுக்கு முன்பு துபாயில் ஒரு ஓவியம் பார்த்ததாகவும் அது அவருக்கும் அவர் மனைவிக்கும் ரொம்ப பிடித்திருந்ததாகவும் அதை வாங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அது யானைகள் அணி வகுத்து நிற்கும் ‘கேரளா திருவிழா’ ஓவியம். அதன் இருப்பு நிலை பற்றி எனக்கு தெரியாததால் வேண்டுமானால் வேறு வரைந்து தருக்கிறேன் என்றேன். அவர் அந்த ஒரிஜினல் தான் வேண்டும் என்றும் உறுதியாக சொன்னதால் அந்த கேலரி தொடர்பு கொள்ள அறிவுறுத்தினேன்!
லண்டனிலும் பல்வேறு சமூகப் பணிகளுக்குக்கு உங்கள் ஓவியங்கள் உதவுகிறது …அதைப் பற்றி …..
முன்பு இஸ்லாமிய கேலிகிராபி ஓவியங்கள் வரைந்து நிதி திரட்டி இங்குள்ள இங்கு எங்கள்  பள்ளிவாசல் கட்டும் நிதிக்கும் மற்றும் எங்கள் ஊர் புதுப்பள்ளி வாசல் பாழமையானது. உள்ளே மழை காலத்தில் குளம் கட்டி விடுவதால் தொழுகை நடத்த முடியாமல்
அவதிப்படுவதால் அதனை மறு நிர்மானம் செய்தல் மற்றும்  திருத்துப்பணிகள் நடை பெறுகின்றன. அதற்காவும் சிறிது நிதி திரட்டி கொடுத்தேன்.
லாக் டவுன் சமயத்தில் மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கோவிட் 19 ஹாட் ஹப்(hot hub) கள், GP டாக்டர் கிளினுக்குகள்  என சாராமரியான  தட்டுப்பாடு மருத்துவ உபகாரணங்களுக்கு (masks, scrubs etc). அதற்கு என் ஓவியங்களை விற்று அதில் ஒரு பகுதியை இந்த உபகாரணங்கள் வாங்க நிதி திரட்டினோம். அதில் மிகவும் மகிழ்ச்சி!
இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் என்ன செய்தீர்கள்?
போன வருடம் கொரோனா லாக் டவுன் ஆரம்பித்த உடனேயே இங்கு மருத்துவர்  மற்றும் செவிலிகளுக்கு தேவையான பிபிஇ (PPE) மாஸ்க்  மற்றும் SCRUB மருத்துவ உடைகள் தட்டுப்பாடு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. அப்போது முகநூலில் ஒரு குரூப் ஆரம்பிக்கப்பட்டது  (விவரமறிய  ‘for the love of scrubs’ ) அதில் சேர்ந்து போன மார்ச் மாசம் நானே என் பணத்திலேயே  துணி வாங்கி தைக்க ஆரம்பித்தேன். பின்பு நாங்கள் எங்கள்  ஏரியாக்கு என ஒரு தனி குரூப் ‘Medway Scrubbers’ மற்றும் ‘Crafting for Cares என்று ஆரம்பித்தோம். எல்லோரும் வெளியே
கையை தட்டி கொண்டு இருக்கும் போது உள்ளே இருந்து தைத்துக் கொண்டிருப்பேன்.  என்னால் முடிந்த அளவுக்கு ஸ்க்ரப்கள் மாஸ்க் கள் மாஸ்க் போடும்பித்து காது காயம்படுவதால் அதற்கு என தனியாக இயர் சேவர்கள்(ear savers)மற்றும் தொற்று பரவாமல் தடுக்க யூனிபாரமை பையில் வைத்து வாஷிங் மெஷினில் அப்படியே போட்டு கழுவ துணிப்பைகள் என பலவேறு ஐட்டங்கள் தைத்துக் கொடுத்தேன். என் பிள்ளைகளும் இதில் அவ்வப்போது பங்கேற்பார்கள்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மேம்பர்கள் கூடக்கூட தைக்க தெரியாதவர்களும் தாங்களும் எதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு டிஸ்ட்ரிபியூஷன், துணி வெட்டுதல் என அவர்களால் முடிந்ததை செய்வார்கள். எங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஆண்களும் உதவுவார்கள். பணமாகவும் கொடுத்து உதவுவார்கள். அதிலிருந்து துணி மற்றும் மற்ற தேவையானவை வாங்கி,  தேவைப்பட்டடால் வெட்டி எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். சிறிது காலத்திற்கு பிறகு பிள்ளையோடு மிகவும் சிரமமாக இருந்ததால் வெட்டி ரெடியாக கேட்பேன். கொஞ்சம் எளிதாக இருந்தது. இது வரை 20000 க்கும் அதிகமான ஐட்டங்கள் தைத்து கொடுத்திருக்கிறோம்.
இந்த வாய்ப்பு எப்போதும் கிடைத்து விடாது.  வாழ்க்கையில் ஒரு முறை தான் கிட்டும். ஒரு  முக்கியமான நேரத்தில் உலகமே தடுமாறிக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே மிகத் திருப்தியான ஒரு விசயம் தான்.
உங்கள் பிள்ளைகளிடமும்  ஓவிய ஆர்வம் இருக்கிறதா?
ஆம். அவர்கள் பாணி வேறு. மகன் தனக்கென ஒரு பாணியில் வரைக்கிறான்.
அவனுக்கு பாஸ்கெட் பால் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் அதிலும் குறிப்பாக he is specialized in painting Air Jordan shoes. Logo க்களும் டிசைன் பண்ணி கொடுக்கிறான்.
மகள் இப்போது டிஜிட்டல் ஆர்ட்டில் அபரமாக வரைகிறாள். அனிமேஷன் கேரக்டர்கள் இப்போதைய டிரண்டிங்.
முகநூல் மூலம் பல்வேறு கவிஞர்களின் தாக்கத்தால் கவிதைகள் எழுதி வருகிறீரங்கள் .. நீங்கள் எழுதிய , உணங்களுக்குப் பிடித்தக் கவிதையைச் சொல்ல முடியுமா ….
ஹஹா.. ஆமாம். பள்ளிகாலத்தில் தமிழ் இரண்டாம் தாளில் நான் எழுதிய கவிதையை ஆசிரியை மொத்த வகுப்புக்கும் வாசித்து காட்ட சொன்னார்கள். அதன் பிறகு என்னை மறுபடியும் எழுத வைத்ததும் ஒரு ஓவியம் தான்!  என் மகள் வரைந்திருந்த ஒரு வானவில் ஓவியம் என் படுக்கைக்கு அருகில் உள்ள சுவரில் ஒட்டி இருக்கும். அதைப்பார்த்ததும் ஒரு கவிதை தோன்றியது. சின்னப்பிள்ளை தனமானது தான். அதான் ரீ என்ட்ரி.  அப்பறம் அவ்வப்போது கவிதைகள் எழுதி முகநூலில் பதிவிடுவேன். வார்த்தைகள் தேடி தேடி எழுதுவதும் சுவரசியமாகத் தான் இருக்கிறது. பின்பு அதற்கு ஏற்றால் போல் டிஜிட்டல் ஓவியமும் துரிதமாக  வரைந்து பதிவிடுகிறேன்.
“ஒரு கையிலிருந்த
பேனா
கித்தானில்
நவீன ஓவியம் தீட்ட ஆரம்பிக்க
மறு கையிலிருந்த
தூரிகை தானாக
எழுத ஆரம்பிக்கிறது
ஒரு புரியாத ஹைகூவை..
என் உபகரணங்களும்
எப்போதிருந்து
ஆகி விட்டன
என்னைப் போலவே?!”
இது இப்போது தோணிய கவிதை தான். கவிதை தானே இது? .. ஹஹா
எனக்குப் பிடித்த ஒரு எளிமையான  கவிதை. மூனே வரி தான்.
‘ கூடுடைத்தால் தான்
நீ
பட்டாம்பூச்சி’
சிலர் சமயம் நான் எழுதுறத பார்த்து  நானே என் விசிறியா ஆகிவிடுவேன். எல்லாம் கொஞ்ச காலம் தான். அதே கவிதையை கொஞ்ச நாள் கழித்து வசித்து பார்த்தால் ‘அய்யோடா இது என்ன’ ன்னு இருக்கும்!
‘ஓடு மீன் ஓட
உருமீன் வருமளவும் ஒற்றைக் காலில்
காத்திருக்கும் கொக்கு..
கானல் நீரில்
கால் நனைத்த படி..’
‘தலைப் பிரசவத்தில்
அழுதபடியே பிறந்த குழந்தையை
பரவசத்தோடு
அள்ளி அணைக்கிறாள்
அப்போது தான்
புதிதாய்
பிறந்திருந்த
இளம் தாய் ‘
இந்த மாதிரி கவிதைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட ஒரு எண்ணம் உண்டு. இறைவன் நாடினால் கூடிய விரைவில் கவிதையின் வாயிலாகவும் உங்களை சந்திக்கிறேன். இன்ஷாஅல்லாஹ்..
ஒரு புகைப்படக் கலைஞராகும் எண்ணம் எப்படி தோன்றியது, ..நீங்கள் எடுத்த, உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் பகிர முடியுமா
புகைப்படக் கலைஞர் என்று எல்லாம் சொல்லிட  முடியாது. ஒரு ஓவியராக இயற்கையிலேயே இருக்கும் அழகுணர்ச்சி மற்றும் ஆர்வம் தான் புகைப்படம் எடுக்கத்  தூண்டும். மற்றபடி டெக்னி க்கல் விஷயங்களில் நான் இன்னமும் நர்சரி ஸ்கூல் தான். போட்டோக்ராபி என்பதை விட Autography என்பது தான் சரி. புகைப்படம் எடுத்து பின் அதை  எனக்கு தோணுவது போல சில மாற்றங்கள் செய்வேன். நிறைய  புகைப்படங்கள் இருக்கு. சிலவற்றை மட்டும் பதிவிடுவேன்.  இருக்கு.
நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்.  ஒரு  நாள் காலையில் டீ குடிக்க உட்கார்ந்தேன். ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம். நல்ல அழகான நாள் தான் என்று நினைத்துக் கொண்டே ஒரு மிடக்கு குடிக்கிறேன். மறுபடியும் வெளியிலே பார்த்தால் ரோட்டில்  நிப்பாட்டி இருக்கும் காரில் சூரிய ஒளி பட்டு கிளார் அடித்தது. அது உள்ளே ஜன்னலில் வைத்திருந்த  போன்சய் மரத்திற்கு மேலே ஒரு நிலா  போல தெரிந்தது. உடனே போய் போன் எடுத்து வந்து  புகைப்படம் எடுத்தேன். பின்பு அதை எடிட்டிங் செய்தேன். அதோடு விட்டேனா என்றால் அதான் இல்லை. பின்பு அதை பற்றி ஒரு கவிதை வரி  தோணியது.   அப்புறம் முழுக்கவிதையும் எழுதி முடிச்சிட்டு தான் மனசு ஆறியது…அதோட பாதி குடிச்ச டீயும் ஆறிப்போச்சி தான்!  ஹ ஹா..
மேலே கூறியவைகளை விட, ஒரு வர்ணம் பூசுபவராக, தச்சராக, தோட்டக் கலைஞராக ..இன்னும் ஏராளமான கலைகளைக் கை கொண்டுள்ள நீங்கள்..ஐயோ ..இது நம்மால் முடியாது …விட்டு விடுவோம் என்று எந்த கலையையாவது  தவிர்த்துள்ளீர்களா ….
விட்டுவிடுவோம் என்று தவிர்த்தில்லைனு தான்  நினைக்கிறேன்.
ஆர்வமிருந்தால்  கண்டிப்பாக முயற்சி பண்ணிடுவேன். முயற்சி  பண்ணிட்டு முடியவிட்டால் இந்தப்பழம் புளிக்கும் என்று வேண்டுமானால் விட்டு இருக்கிறேன்.. ஹாஹ.  ஐஸ் ஸ்கேட்டிங் ரோம்ப பிடிக்கும். அப்பப்ப கிறிஸ்துமஸ்  நேரத்தில் இங்கு ஐஸ் ரிங்க் போடும் போது போய் இருக்கிறேன்.  மகன் சிறு வயதிலேயே ஐஸ் ஹாக்கி விளையாடுவான்.  மகளோடு சேர்ந்து ஐஸ் ஸ்கேட்டிங் கிளாஸில் சேர்ந்தேன். கொஞ்ச நாள்லேயே  கீழே விழுந்து நல்லா அடி பட்டு  கிட்ட தட்ட மூணு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டியதாகி விட்டது.
‘Sometimes you have to risk it for a vision no one can see but you’  எனக்கு பிடித்த ஒரு quote.
அதே மாதிரி சுவீட்சர்லாந்து போயிருக்கும் போது  பாராகிளைடிங்  செய்தேன். அதற்கு முந்தைய இரவு முழுதும் தூக்கம் வரவே இல்லை. மேலே இருந்து குத்திக்கிற சீனே மறுபடி மறுபடியும் gif மாதிரி யோசனையில் வந்துட்டே இருந்துது. மலைக்கு மேலே ஒரு கேபிள் காரில் போய் அதுக்கும் மேலே ரொம்ப தூரம் செங்குத்தா ஏறிப் போகணும். கடைசி செகண்ட் வரை மனசு குதிக்கணுமே குதிக்கணுமேன்னு பயம் காட்ட கால்கள்  மட்டும் முன்னே அது பாட்டுக்கு நடந்துட்டு இருந்தது. சரி அதனால் கிடைத்தது என்ன? அந்த ரெசிஸ்டேன்ஸ தாண்டி போறது தானே ஸ்போர்ட்சின் வெற்றியே.  வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம் கிடைத்தது. பறவையை போல பறக்கும் அனுபவம்.. அருவியின் முகத்திற்கு  நேராய் போய் முகமன் கூறிய அனுபவம்… வான வில்லுக்குள் நுழைந்து வந்த அனுபவம்!
ஓவியங்கள் வரையும் போதும் அப்படித்தான் ஒவ்வொரு  ஸ்ட்ரோக்ஸ்ம் ஒவ்வொரு எதிர்ப்பை தாண்டி தான் வரைகிறோம். எந்த இடத்தில் என்ன வண்ணம் எந்த அளவுக்கு எப்படி வைக்கவேண்டும் என்று பல ஆப்சன்கள் மூளை ஒரு பக்கம் இதயம் ஒரு பக்கம் கொடுத்துட்டே இருக்கும் . அதில ஒன்னு மட்டும் தேர்வு செய்து தான் கேன்வாசில் இறுதியாக தூரிகையால் பூசுகிறோம். ஓவியம் சாதாரணமாக  பார்த்திருப்பீங்க. அடுத்த முறை ஓவியங்கள் பார்க்கும் போது  இதையும் சேர்த்து யோசிச்சி பாருங்க.
அடுத்து தச்சு வேலை சுவருக்கு பெயிண்ட் அடித்தல், பிளம்பிங், அறைக்கு லேமினேட் ப்லொரிங் எனக்கு எல்லா வேலைகளையும் செய்வேன். யூ டியூபில் என்ன சமையல் மட்டுமா வருகிறதா என்ன? வேண்டியதை கற்கலாம். செய்யலாம். மனம் தான் வேண்டும். எல்லோரும் சேர்ந்து செய்யும் போது தவறுகளிலிருந்து பிள்ளைகள் பாடம் கற்றுக்கொள்வார்கள். நாமும் தான். அப்படி கற்கும் பாடம் அவர்களுக்கு காலத்திற்கும் துணை நிற்குமில்லையா.
தோட்டக்கலையிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறீர்கள்.  என்ன விதமான செடி கொடிகள் வளர்க்கிறீர்கள்?
எப்போதும் செடி கொடிகள் மிது ஆர்வம் உண்டு. முன்பு ஊரில் எங்கள் வீட்டில் தோட்டத்தில் மாடுகள் கோழிகள் முயல்  வளர்ப்போம். ஓங்கி வளர்ந்த அசோக மரங்கள்  தான் எங்க வீட்டிற்கு முகவரியே. அதன் விதைகள் விழுந்து குட்டி குட்டி கன்றுகளாக தோட்டமெங்கும் முளைத்திருக்கும். அப்படியே
மற்ற மரங்களான பன்னீர் புஷ்பம் மற்றும் மாட்டு தீவன மரங்களும்.  அதை பிடுங்கி ஏறியாமல், எங்க உம்மா அதை பிடுங்கி பாதுகாத்து வேண்டியவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். இது தொடர்ந்து நடக்கும்.
இங்கு எங்கள் தோட்டம் மிக சிறியது தான். இருப்பினும் ஆப்பிள் மரம், பிளம்ஸ்,  செர்ரி கீவி, கிரேப்ஸ்,  ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி,  இருக்கின்றன. தொட்டியில் அத்தி, ப்ளூ பெர்ரி, யூகளிப்டஸ் இன்னும் பல செடிகள் வளர்க்கிறேன்.
கோடையில் buddleia செடியின்  ஊதாப்பூக்களால் கவரப்பட்டு பட்டாம்பூச்சிகள் சுற்றிக் கொண்டிருக்கும் அழகே தனி தான். தேனி, bumble bee க்களை கவரும் லேவண்டர், பாப்பி, ரோஜா, peony ,போன்றவைகள் உண்டு. இங்கு கோடையில் மட்டும் தான் காய்கறிகள் வெளியில் வளர்க்க முடியும். அதுவும் பனி (frost)யிலிருந்து  மிகுந்த பாதுகாப்போடு மே மதம் பாதிக்கு மேல் தான்  வெளியில் நட வேண்டும். அதுவரை ஒரு  குழந்தையைப் போல் பாது காக்க வேண்டும். ரன்னர் பீன்ஸ், பிரஞ்சு பீன்ஸ், சாலட், கீரைகள், கேரட்., உருளை, courgette, பூசணி, மூ லிகைகள்  etc.வளர்ப்பேன். முன்பு கம்போஸ்ட்டும் தொட்டத்திலேயே உற்பத்தி செய்வேன்.  தோட்டக்கலை கண்ணுக்கும் இதமளிப்பதோடு  இலவசமான தெரபியும் கூட!
பயணக் காதலரான நீங்கள் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளீர்கள்..எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்துள்ளீர்கள் …உங்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது …
ஹஹா..ஆமாம் பயணக் காதலர் தான்.  ஒவ்வொரு லீவுக்கும் பெரும்பாலும்  குடும்பங்களை பார்க்க இந்தியா வந்துடுவோம். அப்போ வரும் வழியில் துபாய் ஸ்ரீலங்கா போவோம். அது மட்டுமில்லாமல் இங்கிலாந்து ஒரு விசித்திரமான தட்பவெப்ப நிலை கொண்ட நாடு. ஒரே நாளில் இங்கு மேகமூட்டம் வெயில் மற்றும் பனியும் கூட பொழியும். ஒரு உடையையோ ஷீவோ கால நிலையை அவதானித்து போட முடியாது. அதனால் தான் வெயில் உள்ள இடங்களுக்கு வெள்ளைக்காரர்கள் விடுமுறை போகிறார்கள். துருக்கி, இத்தாலி, பிரான்ஸ், சவூதி, அமீரகம், ஸ்ரீலங்கா, உலகிலேயே மிகச்சிறிய நாடான வாடிகன், பெல்ஜியம், ஹாலாந்து, சுவிட்சர்லாந்து, வென்னிஸ் போன்ற நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். குற்றாலம் தான் எங்களுக்கு சிறு வயது முதலே மிகவும் பிடித்த இயற்கையின் வரப்பிரசாதம். அதனால் ஒரு மழை நேரத்தையோ சாரலுடன் கூடிய அழகிய பொழுதோ அமையும் போது குத்தலாம் மாதிரி இருக்குது என்று அடிக்கடி  சொல்லுவதுண்டு. பிடித்த நாடு என்றால் சுவிட்சலாந்தை சொல்லலாம்.  ஆயிரம் குற்றால மலைகள் ஒன்றாக கூடி மாநாடு நடத்துவது போல ஒரு  பிரம்மாண்டம்!  நான் எப்போதும் நகரங்களை விட இயற்கையோடு இருப்பதை விரும்புவேன். நாங்கள் தங்கிய ஊர் வெங்கன்(Wengan ) பெரினீஸ் ஆல்ப்ஸில் உள்ள 1000 பேர் வாழும் இடம்.  உலகின் அழகிய பத்து கிராமங்களில் ஒன்று. இங்கே கார்கள் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளது, தூய்மையான மலை காற்று கெடுக்க முடியாது பொருட்டு தடை.
அங்கு ஒரு சிறு ஹோட்டலில் சுவிஸ் சீஸ்  ஃபாண்ட்யு சாப்பிட்டுக்கொண்டு  அதன்உரிமையாளரோடு உரையாடுகையில் எங்கள் ஊர் சென்னை  என்று சொன்னதும் என்ன சொன்னார் தெரியுமா? ‘நான் அங்கு வந்திருக்கிறேன். மிகவும் பிசியாக இரைச்சலாகவும் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டு முறை வந்திருக்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.  அட..இதான் அக்கறைக்கு இக்கறை பச்சை என்பதா என்று வியந்து  வாயைப்  பிளந்தோம்!
துருக்கியிலுள்ள பிரின்ஸ்’ஸ் islandயிலும் கார்கள் இருக்காது. குதிரை மற்றும் சைக்கிள் தான். வென்னிஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை.  கண்டோலா அல்லது வாட்டர் பஸ் மூலம் தான் பயணங்கள். வென்னிசில் படம் வரைந்து கொண்டிருந்த போது ஒரு அந்த ஊரக்காரர் பேச்சு கொடுத்தார்.  அவர் தந்தையும் இப்படி வரைவாராம் இப்போது போட்டோக்கள் வந்துவிட்டதால் இப்படி plein air ஓவியங்கள் குறைந்து விட்டதென்று சொல்லி வரைவதை ரசித்தாள்
பிள்ளைகளையும் கூட்டி செல்வதால் அவர்களுக்கும் ஏட்டுசசுரைக்காயில் கிடைக்காத பல வகையான நேரடியாக அனுபவங்கள் கிடைக்கிறது.  அவர்களை அது பதப்படுத்த உதவும்.
கடைசியா ஒரு அழகான quote ஒன்று
‘Create a life you do not need a vacation from’
is what we all have to aim for at the end of the day!
உங்கள் ஓவியங்கள் விற்பனைக்கு கிடைக்குமா?  ஓவியங்களை  எப்படி பெற்றுக்கொள்வது? மற்றும் விலை மதிப்பு பற்றி..
ஓவியங்கள் வரைந்து முகநூல் பக்கத்தில் பதிவிடுவேன். மற்ற குரூப்களிலும் பகிர்வேன். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டு வாங்குவார்கள்.  கமிஷன் ஒர்க் வேண்டுமெனில் அவர்கள் விருப்பத்தற்கு ஏற்ற மாதிரி வரைந்து கொடுப்பேன்.  கேலரிகளிலும் வைத்துள்ளேன். சில சமயம் ஸ்டால்கள் போட்டும் விற்பனை செய்வதுண்டு. இரெண்டு வருடங்களுக்கு முன்னர்  Medway open studios ல்  பங்கு பெற்று என் ஓவியங்களை வீட்டிலேயே காட்சிக்கு வைத்திருந்தேன்.
கலைக்கு ஏது விலை.  போடுகிற உழைப்பு, நேரம் மட்டுமல்ல என் ஓவியங்களுடைய தனித்தன்மையையும். பொறுத்தே விலை நிர்ணயிப்பேன்.  இங்கிலாந்து பவுண்டு £50 யிலிருந்து £1200 வரை ஓவியங்கள் இருக்கின்றன. அளவை பொறுத்தும் விலை மாறுபடும்.. இப்போது இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் ஒரிஜினல் அல்லது கேன்வாஸ் பிரிண்ட் போட்டு ஹோட்டல்கள் மற்றும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு  கொடுக்கிறோம். விருப்பப் பட்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
கீழே உள்ள என்னுடைய முகநூல் பக்கத்தில் என் ஓவியங்கள் பார்க்கலாம்.  வாங்கலாம்.
https://www.facebook.com/meeraahamedartist
மிக்க நன்றி. உங்கள் நேரத்திற்கும். இப்படி அழகாக கேள்விகள் கேட்கப்போய் தான் என்னாலும் இப்படி எல்லாம் பதில் சொல்ல முடியும் என நானே இப்போது  தான் தெரிந்து  கொண்டேன். மிக்க நன்றி.
ஸலாம் அல்ஹம்துலில்லாஹ்!
மிக்க நன்றி
கலையும் இலக்கியமும் மனிதனை ஒரு இன்ச் அளவேனும் உயர்த்த வேண்டும் என்று சொல்வார்கள்…சிந்தனை அளவில் உயரச் செய்வதுடன், பொருளாதார ரீதியாகவும் உதவும் ஒரு கலை இலக்கிய வாதியாக உள்ளீர்கள் …
உங்கள் கலை இலக்கியப் பயணம் சமூகத்திற்கான பங்களிப்பு மேலும் மேலும் வெல்லட்டும் என்று தொலைபேசியை வைக்கிறேன்…ஓய்ந்திருந்த மழை …மெல்லிய தென்றல் காற்றுடன்  மெல்லிய சாரலாகத் தூவ ஆரம்பிக்கிறது …
  • நந்தகுமார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!