தமிழகம்

வைரமுத்து அறக்கட்டளைச் சொற்பொழிவு அறிக்கை

27views
மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய கவிப்பேரரசு வைரமுத்து அறக்கட்டளைச் சொற்பொழிவு 14.07.2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் கோ.தேவிபூமா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் திரு.மூ.விஜயராகவன், கௌரவத் தலைவர் பொறியாளர் சு.இராஜகோபால், செயலாளர் பொறியாளர் சு.இரா.ஸ்ரீதர், பொருளாளர் திரு. அ.ஆழ்வார்சாமி ஆகியோரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினரை உதவிப் பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் கம்பம் மீரான் அவர்கள் கலந்து கொண்டு கவிப்பேரரசு வைரமுத்துவின் திரையிசைப்பாடல்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அச்சிறப்புரையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வாழ்வியல் சாதனைகளைப் பட்டியலிட்டு அவரது புலமைத்திறத்தினைப் பல்வேறு சான்றுகளுடன் எடுத்துரைத்தார். ஏழு முறை தேசிய விருதுகளைப் பெற காரணமாக அமைந்த பாடல்களைப் பாடி அதன் சிறப்புகளை மாணவர்களின் மனங் கொள்ளுமாறு விளக்கிக் காட்டினார்.
மாணவர்களின் மனங் கவர்ந்த பாடல்களைப் பாடியும் மாணவர்களை மகிழ்வித்தார். மாணவர்கள் சிலரை வைரமுத்துவின் பாடல்களைப் பாடிச் சொல்லியும் உற்சாக மூட்டினார். நீங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவினைப் போல் பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்து தனது உரையை நிறைவு செய்தார். நிகழ்விற்கான நன்றியுரையை முனைவர் பட்ட ஆய்வாளர் பா.சுரேஷ் கூறினார். நிகழ்ச்சியினை முனைவர் பட்ட ஆய்வாளர் வி.மோனிகா யாழினி தொகுத்து வழங்கினார்.
தமிழ் உயராய்வு மையத்தின் துறைத்தலைவர், இணைப் பேராசிரியர் முனைவர் சீ.காயத்ரிதேவி, உதவிப் பேராசிரியர்கள் முனைவர் தி.மல்லிகா, முதுமுனைவர் ப.திருஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!