தமிழகம்

உயர் கதிர்வீச்சு செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : வீகேபுதூர் தாசில்தாரிடம் பெண்கள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு

101views
தனியார் நிறுவன உயர் கதிர்வீச்சு செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் 5ஜி செல்போன் டவர் அமைக்க கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முயற்சி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 5ஜி செல்போன் கதிர்வீச்சு மனிதர்களின் உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், உயிரினங்கள் அதிகளவில் தீங்கை சந்திக்கும் என கூறி மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. வேறு இடத்தில் அமைக்க முயற்சித்தும் அங்கும் எதிர்ப்பு வந்ததால் அங்கும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் மீண்டும் செல்போன் டவர் அமைக்க முயற்சி செய்ததாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் வசந்தன் தலைமையில், புலி பாண்டியன், முருகன், சிவசக்தி, ராமையா, செல்வராஜ், ஜெயம், சரோஜா, ராதா, முத்துலட்சுமி, திருமலைக்கனி, செல்லக்குட்டி, மாரிக்கனி, ராதா, கனக மணி, பாப்பா, மல்லிகா, கனியம்மாள், வெள்ளையம்மாள் உள்ளிட்ட 50ற்கும் அதிகமான பெண்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தாசில்தார் தெய்வசுந்தரியை நேரில் சந்தித்து செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர். மனுவினை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!