தமிழகம்

மதுரையில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் போராட்டம்

57views
மதுரை மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து, கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம், திடீர் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  தமிழகத்தில் முடங்கியுள்ள அரசு கேபிள் டிவியை முறையாக ஒளிபரப்ப வலியுறுத்தி, கேபிள் ஆபரேட்டர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல லட்சம் இணைப்புகளை கொண்ட தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது.  மதுரை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி மூலமாக 6 லட்சத்துக்கு மேற்பட்ட இணைப்புகள் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் இந்த இணைப்பின் சேவை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரசு கேபிள் டிவி சேவை தமிழகம் முழுவதும் முடங்கியது. இதனால், மதுரை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி மூலம் பயனடைந்து வந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால், பொதுமக்கள் தனியார் கேபிள் இணைப்பிற்கு படையெடுத்து வருகின்றனர்.
இது குறித்து, அரசு கேபிள் டிவி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படவில்லை என தெரிவித்தனர். இதனால், வேதனை அடைந்த 100க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அரசு கேபிள் டிவி நிர்வாக அதிகாரி இன்னும் 24 நேரத்தில் சரியாகிவிடும் தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் கலைந்து சென்றனர்.
இன்று வரை சரி செய்யப்படாத நிலையில், அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடியிருந்தனர் . இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால், அங்கேயே கூடியிருந்த ஆபரேட்டர்கள், மாவட்ட ஆட்சியர் கார் வந்த உடன் அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அவர் கார் பின்னால் வந்த அமைச்சரின் கார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியேவே நிறுத்தப்பட்டு, கடந்த மூன்று வருடங்களாக பூட்டியிருந்த ஆட்சியர் அலுவலக மற்றொரு வாசல் மூலம் அமைச்சர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே வந்தார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இது குறித்து, கேபிள் ஆப்ரேட்டர்கள் கூறும் போது கடந்த வெள்ளிக்கிழமை அரசு கேபிள் டிவி செயல்பாடு முடங்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்கள் எங்களிடம் சேவை குறித்து கேட்கும் போது சரிவர பதில் சொல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், அரசு கேபிள் டிவி முடங்கி உள்ளதால் தற்போது, பொதுமக்கள் தனியார் கேபிள் டிவிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
தற்போது ஒவ்வொரு கேபிள் ஆபரேட்டரிடமும் இருந்து 200க்கும் மேற்பட்ட இணைப்புகள் தனியார் வசம் சென்று கொண்டுள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அரசு கேபிள் டிவி இணைப்பின் செயல்பாட்டை குறித்து உண்மை தன்மையை தெரிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக சேவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். முடங்கியுள்ள அரசு கேபிள் டிவி செயல்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என, தெரிவித்தனர்.
மேலும், நாளைக்குள் இது சரி செய்யப்படவில்லை என்றால், இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பேட்டியின் போது தெரிவித்தனர்.  அரசு கேபிள் டிவியின் செயல்பட்டால், தனியார் டிவி சேனல்களை பலர் நாடுவது, சந்தேகம் அளிப்பதாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!