கட்டுரை

இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் – நூல் திறனாய்வு

604views
இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் என்ற நூலை முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் எழுதியுள்ளார். இந்த நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியிட்டுள்ளது.
அறக்கட்டளைச் சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டு பின்னர் ஆராய்ச்சி நூலாக வெளி வந்துள்ளது. இந்த நூல் 150 பக்கங்களைக் கொண்டது. இராவுத்தர் என்ற சொல் நாட்டார் வழிபாட்டில் வழங்கப்படும் பொதுப் பெயராகும். இது குறிப்பிட்ட சமயப் பெயரைக் குறிப்பது அல்ல. சங்க காலத்திலிருந்து இன்று வரை குதிரை வீரனை இராவுத்தர் என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. அரசர்கள் குதிரைப் படை வைத்திருந்தனர்.  அவர்கள் போருக்குச் செல்வது, நாடு கைப்பற்றச் செல்வது, திருவிழாவுக்குச் செல்வது ஆகியவற்றிற்கெல்லாம் குதிரையைப் பயன்படுத்தினர்.
குதிரைகள் பயன்பாடு அதிகம் தேவைப்பட்டதால் அரபு தேசங்களில் இருந்து குதிரைகளை விலைக்கு வாங்கினர். குதிரைகளை மேய்ப்பவர்கள், குதிரைகளுக்கு மருந்து கொடுப்பவர்கள் இவர்களும் அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பின்னர் குதிரைப் படைப் போர் வீரர்களாகவும் திகழ்ந்தனர்.
இன்றுள்ள அரேபியர்கள் இசுலாம் சமயத்தைத் தழுவியிருப்பதால் இராவுத்தர் என்ற சொல் இசுலாமியரைக் குறிக்கும் சொல் என்று அவர்கள் வாதிடுகின்றனர். அது மறவர்,வேட்டுவர்கள், முத்தரையர்கள் இவர்களின் குடிப்பெயர்ச் சொல்லாகும். எனவே இந்து இசுலாம் சமயத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இராவுத்தர் நாட்டார் வழிபாட்டின் படிமம் ஆகும். இதில் சிதறிய எச்சங்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து சென்றுள்ளன.
இராவுத்தராயன் என்ற சொல்லுக்குக் குதிரை வீரன் என்று தமிழ் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஒருவர் எந்த மதங்களில் மாறினாலும் தெய்வ வழிபாட்டு முறைகள் தொல்குடித் தமிழர் மரபுகளில் இருந்து பின்பற்றப்படுபவை ஆகும். சங்க காலத்தில் இனக்குழுக்கள் கூட்டாக இணைந்து வாழ்க்கையை மேற்கொண்டனர்.
அவர்களிடத்தில் சாதி,சமயம், குலம், கூட்டம், கோத்திரம் இவைகள் கிடையாது. இராவுத்தர் என்ற சொல் எந்தக் குடியைச் சேர்ந்த குதிரை வீரனாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் பட்டம், அடையாளம், பதவி ஆகும். இராவுத்தர் சிலருக்குக் குலதெய்வமாக இருக்கிறது.

கனிமொழி செல்லத்துரை
பலருக்கும் நாட்டார் தெய்வம், நடுகல் வழிபாடு, சிலை வழிபாடு, கோயில் வழிபாடு, துணைத் தெய்வம், காவல் தெய்வம், எல்லைத் தெய்வம் ஆகியவைகளாக உள்ளது. இந்நூலில் ஆசிரியர் இராவுத்தர் குறித்த தொன்மம், வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மக்களின் வாழ்வியல், வழக்காறுகள், இராவுத்தர் குறித்த தொல்லியல் ஆவணங்கள், கல்வெட்டு, நடுகல், வரலாறு, செப்பேடு, இலக்கியங்கள் ஆகியவைகளைப் பயன்படுத்தி சான்றுகள் காட்டியுள்ளார். தமிழர்கள் தோன்றிய காலங்களில் இருந்து இன்று வரை இராவுத்தர் குறித்த அடையாளங்கள், கோயில்கள், விழாக்கள், பாடல்கள், கதைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டார் வழிபாடுகள் பற்றிய விளக்கங்கள், ஆய்வுகளில் பெறப்பட்ட செய்திகள், கள ஆய்வில் திரட்டிய தரவுகள், இசுலாமியப் பெயருடைய தெய்வங்கள் நாட்டார் வழிபாட்டில் வழங்கப்படும் சடங்குகள், தர்கா வழிபாடு, துலுக்காணம்மன், துலுக்க நாச்சியார், துலுக்கர்கள் தொடர்புடைய ஊர்ப் பெயர்கள், அடையாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். குதிரைக்கான நடுகல் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது.
குதிரை குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படுகிறது. நாட்டார் வழிபாடு கோயில்களில் குதிரை முக்கிய இடத்தைப் பெறுவதையும் எடுத்துக் காட்டியுள்ளார். துலுக்கச் சூடாமணி அம்மன், மூங்கில் ஆண்டவர், வாபர் சாமி, பட்டாணி, இலாடசாமி, குளுந்தாளம்மன் வழிபாடு, சாய்பாபா, தத்தோசாமி, கான்சாகிப் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பட்டவர்கள்,போத்த இராசா இவர்களுக்கும் இராவுத்தருக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
வீ.கோவிந்தராஜ், 
கொங்குச் சமுதாய ஆய்வாளர், கொக்காட்டிபட்டி, அரவக்குறிச்சி, கரூர்

 

1 Comment

  1. நண்பரே தாங்கள் பதிவிட்ட நாட்டார் வழிபாடு பற்றி பதிவை நான் பார்த்தேன் அது பாண்டியர்களின் மரபு வழி நடுக்கள் சாமி முறை தேவேந்திரர் குல மக்கள் இந்திரனை வழிபட்டு வந்ததாக கூறிகிறார்கள் வரலாறும் அப்படித்தான் உள்ளது குறிப்பாக செந்தில் மள்ளர் எழுதிய (மீண்டெழும் பாண்டிய வரலாறு )வரலாற்றில் அவ்வாறே கொடுக்க பட்டுள்ளது அதற்கு சான்றாக விளக்கமும் கொடுத்துள்ளார் ஆனால் தாங்கள் நாட்டார் வழிபாட்டில் அதாவது கனிமொழி செல்லத்துரை மேடம் எழுதிய புத்தகத்தில் முத்துரையர், மறவர் குறிப்பிட்டு உள்ளீர்கள் மேலும் தமிழ் குடிகளின் ஐவகை நிலங்கள் பார்க்கும் பொழுது குறிஞ்சி -குறவர், முல்லை -வேடவர்-கோனார், பாணர் , மருதம் -பள்ளர், மள்ளர், தேவேந்திரகுலவேளாளர்,பாலை – திருடர்,மறவர், நெய்தல் -முத்துரையர்…. இதான் குறிப்பிட்டு உள்ளது நாட்டார் வழிபாட்டை வேறு ஒரு சமூகத்துடன் ஒப்பிட்டு கூறுவது எப்படி சார் மேலும் இது வரலாற்று திரிபு இல்லையா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!