தமிழகம்

“விருதுநகர் புத்தக கண்காட்சியில், மாவட்ட கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” கவிஞர் திலகபாமா ஆதங்கம்

116views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் எழுத்தாளர், கவிஞர் திலகபாமா. இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராகவும் இருந்து வருகிறார். விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கவிஞர் திலகபாமா கூறினார். சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்து திலகபாமா கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் புத்தக கண்காட்சிக்கு அழைப்புகள் விடுக்கப்படவில்லை. கண்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் விருதுநகர் மாவட்டத்தை தவிர்த்து, மற்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
குறிப்பாக திமுக கட்சிக்கு ஆதரவாக இருக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட துறையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த புத்தகக் கண்காட்சிக்காக பொதுமக்களிடம் கட்டாயப் பணம் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களை வரவழைத்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்று கவிஞர் திலகபாமா கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!