அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணித்த தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் குவாத்தமாலாவுக்கு அரசுமுறைப் பயணமாக ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதியம் புறப்பட்டார். இந்நிலையில், அவர் சென்ற விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாஷிங்டனின் புறநகரில் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு மீண்டும் திரும்பிய விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது.
பின்னர் வேறொரு விமானத்தில் கமலா ஹாரிஸ் புறப்பட்டு திட்டமிட்டப்படி குவாத்தமாலாவுக்கு சென்றடைந்தார். துணை அதிபரான பிறகு அரசு முறைப்பயணமாக கமலா ஹாரிஸ் செல்லும் முதல் சர்வதேச பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு விமானம் திரும்பியபோது கமலா ஹாரிஸ் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தபடி இறங்கினார் என பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.