கவிதை

இயற்கை சீற்றம்…

33views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மனங்களுக்கு புலப்படாத
ஆச்சரியங்கள்…
எந்த ஜோசியக்காரர்களும்
கணித்துச் சொல்ல முடியாதவை…
எந்தக் கிரகக் கட்டங்களுக்கும்
அகப்படாதவை…
அவதாரப் புருஷர்களின்
அஸ்திரப் பிரயோகங்களில்
அகப்படாதவை…
வாய்கள் மாறியும் மீறியும் பேசும்
வானிலை அறிக்கைகளை
வலுவிழக்கச் செய்பவை…
கணநேரங்களுக்குள்
நடந்து முடிந்து விடும் களேபரங்கள்…
உங்களுடைய எந்த விஞ்ஞான
வளர்ச்சியும் எதனையும்
தடுக்க முடியவில்லை…
சுட்டெரிக்கும் நெருப்புக் குழம்புகளின்
எரிமலை லாவாக்கள் இல்லை
குளிர்பனக்கட்டிகளின்
ரணக்கொடூரங்கள்…
இயற்கை அரண்கள்
மானுடக் கண்களுக்கு
முரண்களாகத் தெரியலாம்…
ஆனால்
அவை மானுடம் நேசிக்கும்
இயற்கையின் உபசரிப்புக்கள்
இறைவனின் நல விசாரிப்புக்கள்…
மானுட பிறப்புக்கு முன்பே
கால்நீட்டிக் கிடக்கும்
மேற்குத் தொடர்ச்சி மலைகளும்
எரித்துக் கிளப்பும் எரிமலைகளும்…
உறங்கிக் கிடக்கும்
பனி மலைகளும்
உயரச்சிகரங்களும்
உற்பத்தி நதிகளும்
உலகப் பொதுமைகள்…
அவைகளை கட்டுப்படுத்தி
உங்கள் கைகளுக்குள்
கொண்டுவர முயலாதீர்கள்…
வணங்குபவன் வணங்காதவன்
இணங்குபவன்
இணங்காதவன் என்று
எப்போதுமே அவை
வேறுபடுத்தி பார்ப்பதில்லை…
பசி ஒன்று…
இரத்தம் ஒன்று… மனிதன் ஒன்று…
இறைவனும் ஒன்றுதான்…
நீங்கள் சீறினால் இறைவன்
பொறுத்துக் கொள்ளலாம்
இயற்கை பொறுத்துக்கொள்ளாது…
இயற்கை எப்போதுமே
உங்களுக்கு ஒரு நினைவூட்டி…
நேபாளம்
ஒரு பாடம்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!