கவிதை

பனித்துளிக்குள் பிரபஞ்சம் : நூல் விமர்சனம்

65views
நூலாசிரியர் – சுகுமார் கவி
நூல் விமர்சனம் – தயானி தாயுமானவன்
இருள் என்பது குறைந்த ஒளி – என்பது பாரதியின் வரிகள். இது ஏனோ மனதை ஏதோ செய்கிறது.
இரவு என்பது பயம் சாவிகள் கொடுக்கப்பட்ட நம் வாழ்வு இரவானதும், பூட்டிக் கொள்ளும் மனம் அமைதி காக்கும் . சிறு சத்தமும் நம்மை கலவரப்படுத்தும்.. துணையெழுத்து எஸ். ரா அவர்களின் எழுத்தில், சிறிய மகிழ்வையும் சிறிய துயரமும் கூட நம்மை பிரபஞ்சத்தை மறந்து இந்த கவிஞரோ சுகுமாரன் அவர்கள் “பனித்துளிக்குள் பிரபஞ்சம் ” என்கிறார்.
  சுகுமார் கவி
நுண்மையின் அழகில் துய்க்கிறது மனம்,
‘பலத்த மழை
வீட்டுக்கு வந்தது
கடல்’
ஒரு குழந்தை கடலை பார்த்திருக்காது. ஆனால் கடல் பெரியது என்பதும் செவிவழி கதைகள்.
வெள்ளம் பெருகி வாசலை அடைக்கும் போது குழந்தை நினைத்துக்கொள்ளும் கடலே நம் வாசலுக்கு வந்துவிட்டது என்று.
காகிதக் கப்பல்கள் டைட்டானிக் கப்பலாக மாறும் தருணம் ஒரு ஹைக்கூ மலருகிறது.
சுகுமார் கவி அவர்களின் வரிகள் காட்சிகளை நம்முன்னே மலரவைக்கிறது.
இந்த ஹைக்கூ அப்படித் தான்.
‘உதிர்ந்த பூ
சூடிக் கொண்டது
நதி’
நான் மிகவும் இரசித்த ஹைக்கூ. உதிர்ந்த பூ என்பது பூவல்ல அது வாழ்வின் கடைசித் தருணம். உதிர்ந்த பூவை யார் சூடுவார்? ஆனால் சூடிக் கொண்டது காலம் எனும் நதி யென விரியும் பேரழகில் நதிஅழகியல் தாங்கி நிற்கிறது மரணத்தின் வாயிலையும் அழகாக்கும் உதிர்ந்த பூக்கள்
‘வலையில் மீன்
மாட்டிக் கொண்டது
தொண்டையில் முள்’
வாழ்வின் தத்துவம் இது.
நமது செயல்களின் விளைவை நாமே விளைய வைக்கிறோம். அப்பப்பா தாங்க முடியவில்லையே என பிதற்றும் மனம். செயல்களின் விளைவே வாழ்வு இதில் இடையில் மாட்டிக் கொண்டதோ தொண்டை காலம் முள்ளால் துடிதுடிக்கிறது. விழுங்க முடியாத நினைவுகளில் தேங்கியது மனம்.
இப்படி சிக்கித் தவிக்கும் மனதிற்கு ஒருவானம் இந்த நூல்.
நீங்கள் எதிர்பார்க்காத வரிகளை சந்திக்கும் போது அங்கேயும் அடடே இப்படியும் இருக்கலாம் என்ற தூண்டில் ஊசாலாடும் மனது.  குளம் என்னவோ அமைதியாகத்தான் காட்சியளிக்கிறது.
வாழ்வின் போராட்டம் பசியும் பசிக்கான தேடுதலிலும் நூலளவு தூரம் தான் மரணத்தின் நொடி முள் நகரும் முன் தன்னம்பிக்கையின் கைகளில் ஏமாறப் போவது குளமா? அன்றி நாமா?
‘கைவிரல்
கறைபடிந்தது
வோட்டு போட்டதும்’
அரசியல் களநிலவரங்களில் இங்கு மேக மூட்டம்!! மழை வருமா? அன்றி காற்றின் திசையில் போக்கு காட்டுமா? என்பதெல்லாம் காலநிலைக்கு கிடைத்த பரிசு.
இரசனையின் வாசகனே புதிய கதவுகளை தனது வாசகனுக்கு திறப்பவன்! அதுவே எழுத்தாளனின் வெற்றி!
அது பாடகர், கவிஞர் நாவலாசிரியர் எனபன்முகப் படைப்பாளிக்கு கிடைத்திருக்கிறது.
புல்லின் நுனியும் வாளாகும் கவிஞனின் கண்பட்டால் என்பதை நிரூபித்த கவி சுகுமார் அவர்களுக்கு
எனது வாழ்த்துகள்!!
புதிய நூல் படைப்போர்க்கு இந்நூல் அமுதம் மக்களுக்காக எழுதப்பட்ட நீதிகளும் அநீதிகளும் குறிஞ்சிப்பூக்களாக மலர்ந்துள்ளது.
சுகுமார் அவர்களின் நூலை பனித்துளிக்குள் உலகத்தைக் காண உங்கள் மனம் தயாரா?
அப்படியெனில் உங்கள் அனுபவத்திற்கு விருந்தாகும் இந்த நூல்
பதிப்பகம் – அன்பின் சங்கமம்
கைபேசி : 98419780 29.
நூல் மதிப்பு- ரூ – 120
மைசூரிலிருந்து தமிழ் மணக்க ஹைக்கூ பூக்களை தமிழன்னைக்கு அணிவித்த கவி சுகுமார் அவர்களின் இந்நூல் மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும்!
வாழ்க ஹைக்கூ!
உயர்க தமிழ்!!
வெல்க கவி!!!
தயானி தாயுமானவன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!