12views
மாத்ருபூதேஸ்வரன்
கங்கா! நதிபோல அவளும் ஒரு பிரவாகமான குரலைக் கொண்டவள்தான்.அவள் பாடும் பழைய பாடல்களைக் கேட்க என்ன ஆனந்தம்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான பாடலில் ஒரு பாட்டு, பக்தி, பழைய சினிமா எனத் தேனாய் வழியும் அந்தச் செவ்வியல் ராகங்கள்.
தீன கருணாகரனே, நடராஜா, மன்மத லீலையை வென்றார் உண்டோ?, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, கிருஷ்ணா முகுந்தா முராரி, ராதே! உனக்கு மனம் படைத்தேன், அம்பா, மனம் கனிந்து…
எனப் பல பாடல்கள் தேனாய் கேக்கும்போது, சின்ன வயதில் பாட்டு கற்றுக்கொண்டிருப்பாளோ என்ற சந்தேகம் தான். எப்படி கேட்பது?
இதோ. கங்காவின் குரல் கேட்க ஆரம்பித்துவிட்டது.
‘என்ன பாட்டு பாடிக் கொண்டு வருகிறாள்’.
‘கேளு. சொல்லு’.
‘அம்மா, பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும்’,என்கிற பாட்டு கேக்குறது பாரு’.
குரல் தெருவின் முனையில் வரும்பொழுதே கேட்கும். அந்த உச்சஸ்தாயியில் அவளின் குரல் வீடுகளுக்குள் ஊடுருவிவிடும். வீட்டில் உள்ள அனைவரும் அந்தக் குரலைக் கேட்க தயார் ஆகிவிடுவோம். இரவு எட்டு மணி ஆனால் இந்தப் பாட்டு சத்தம் கேட்டால், அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்கும் கங்கா வந்துவிட்டாள் என்று தெரியும். எல்லா நாளும் வரமாட்டாள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருவாள். எத்தனை பாடல்கள்! அவளுக்கு தமிழ், தெலுங்கு தெரியும். நாம் சொல்வது எதுவும் அவளுக்குப் புரியாது.
அவள் ஏதோ சில வார்த்தைகளைச் சொல்லுவாள்.அது தமிழிலும் இருக்கலாம். தெலுங்கிலும் இருக்கலாம்.
வாசலுக்கு முன் வந்து பாடிக் கொண்டு இரண்டு நிமிடம் நிற்பாள். யாரும் உள்ளிருந்து சாப்பாடு கொண்டு வந்து போடவில்லை என்றால், அடுத்த வீட்டுக்கு நகர்ந்து போய் விடுவாள். பாட்டை நிறுத்த மாட்டாள். சில நாட்கள் பையனும், இரண்டாவதான பெண்ணும் வருவார்கள். குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்.
அவள் சற்று புத்தி சுவாதீனம் இல்லாதவள் என்று சொன்னார்கள். ஊரின் பக்கத்திலிருந்த கிராமத்தில் உள்ள ஒரு ஐயர் வீட்டுக் குடும்பம். நல்ல வசதியாக இருந்ததாகவும், பின் ஏதோ சூனியம் வைத்ததனால் புத்தி பிறழ்ந்து விட்டதாகவும் சொல்லுவார்கள். விதியின் கோரப்பிடியில், கணவனின் நிலையும் பரிதாபம். கணவனும் ஒரு நல்ல ஸ்திதியில் மனநலம் இல்லாததனால், வாழ்வாதாரத்திற்கு வழியின்றி அவர்கள் காலம் தெருவுக்கு வந்து நின்றது. இந்த உலகில் எதுவும் சாசவதம் இல்லை என்பதற்கு இவர்கள் தான் ஒரு எடுத்துக்காட்டு.
வாழ்க்கை நடுவில் எங்கு கொண்டு போய் விடும் என்று யாரால் கூற முடியும்? வாழ்க்கையின் பாதையை கண்டுபிடித்து விட முடியுமா என்ன? நாம் செல்லும் பாதையை நாமே தேர்ந்தெடுக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் சில நேரங்களில் பாதை நம்மைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அதுவும் இவர்களைப் பொறுத்தவரை, அது எப்படி போகிறது என்பதையே அறிய முடியாத நிலையில், இவர்கள் உள்ளனர். காலம் இவர்களை நிலை குலைய வைத்து தெருவில் நிறுத்தியது.
அதன் காரணம் யாரும் அறிய முடியவில்லை. அந்தக் காலத்தில் சினிமா போஸ்டர்களைத் தெருவில் தள்ளிக் கொண்டு வருவார்கள்.அந்த வேலையை அந்தப் பையன் செய்ய ஆரம்பித்தான்.
அப்பா சில வருடங்களில் இறந்து போனார். ஊரில் பாழடைந்த கட்டிடத்தின் திண்ணையில், இம்மூவரின் வாழ்க்கை புகலிடமானது. இது ஒரு சுமாரான சிறிய ஊர். பிச்சைக்காரர்கள் என்று அதிகம் யாரும் இல்லை. உள்ளூர்வாசி என்ற ஒரே காரணத்தால் பட்டினி அவர்களை முற்றிலும் கொன்றுவிடவில்லை.
கங்கா பல ஆண்டுகள் வாழ்ந்தாள்.
காலங்கள் நகர நகர, அவளின் புத்தி கோளாறு அதிகமானது.
தானாகவே கத்திக் கொண்டிருப்பது, துணியை வைத்து சுற்றிக்கொண்டே இருப்பது என அந்த இடிந்த திண்ணையிலேயே கிடந்தாள். பையன் பெரியவன் ஆகிவிட்டான்.
சினிமா கொட்டகை மூடப்பட்டது. பின் சில டீக்கடைகளில் வேலை செய்தான்.
சில காலம் கழிந்து, அவனுக்கும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவனுக்கும் மனப் பிறழ்வு ஏற்பட்டதா என்று தெரியவில்லை.
ஆனால், விதி தன் கொடூர விளையாட்டை நிறுத்தவில்லை. அதன்பின் நடந்தவை பேரவலம்—பாதுகாப்பற்ற நிலையில் திரிந்த கங்காவின் மகளைக் கயவர்கள் சீரழித்தனர். அவள் கர்ப்பமாகி, குழந்தை பிறந்து, பெற்றெடுத்த குழந்தையும் சில நாட்களிலேயே மரித்துப் போனது. இதையெல்லாம் அறியாமலே கங்கா முழுப் பைத்தியமாகிச் சில காலத்தில் இறந்து போனாள். ஒரு காலத்தில் ராகங்களால் தெருவையே பரவசப்படுத்திய அந்த உன்னதக் குரல் அடங்கிவிட்டது.
ஆனால், அந்த பாழடைந்த திண்ணையின் நிழலில் இன்றும் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் அவளது இரு பிள்ளைகளின் உருவில்… அந்தக் கண்ணீர்க் காவியம் இன்னும் முடிவடையாமல் தொடர்கிறது. இந்த வேதனையான சோகத்திற்கு பதில் ஏது?
சில இரவுகளில் அந்தத் திண்ணையைக் கடந்து செல்லும்போது, காற்றில் ஏதோ ஒரு பழைய ராகம் மிதப்பது போலத் தோன்றுகிறது.
அது கங்காவின் குரலா?
காலம் அலைக்கழித்த ஒரு குடும்பத்தின் அழுகையா?
தெரியவில்லை.
add a comment






