கவிதை

பொய்க்கால் குதிரைகள்

29views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
நடக்க முடியாதவைகளை
ஓட விடுகிறார்கள்…
உள்ளிருக்கும் இயந்திரங்கள்
பார்வைக்குத் தெரியாதபடி மறைவாக…
சின்னவகை ரோபோட்டுகளில்
பேட்டரிகள்போல
பென்னம் பெருசுகளின் பின்னணிகள்…
யாரும் எளிதில்
யூகிக்க முடியாத படியும்
கிடைத்தவற்றை
விரும்பியபடி எல்லாம்
போகிக்க முடியாதபடியும்…
தேர்தல் பந்தயங்களில்
எல்லாக் குதிரைகளும் ஓடுகின்றன…
ஆங்காங்கே ஒன்று ஒன்று
என்று வெற்றி பெற்று விடுகின்றன…
கொஞ்சம் நொண்டினாலும்
அது தீவிர சிகிச்சைகளின் ஆதரவில்
கணினி எந்திரங்களின்
கண்ணசைவில்
விரல் ரேகை அடையாளங்களின்
வெளிப்பேச்சுகளில்…
எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி
கண்கள் கட்டப்பட்ட
கருப்புத் துணி தேவதைகள்
படிக்கட்டுகளையும் தாண்டி
பறந்து வந்ததாகக் காட்டப்படுகின்றன…
அவற்றின் வெற்றிகளுக்கான
முன்னுரைகளை
நியமிக்கப்பட்டவர்களின்
நிழல்கள் எழுதி விடுகின்றன…
வாய்மையும் தூய்மையும்
வாக்கும் நோக்கும்
இயந்திரங்களுக்குள்
சுருட்டப்பட்டு விடுகின்றன…
விரல்களில் கருப்பு மைகள்
பூசப்பட்டு விடுவதால்
வெள்ளையை யாரும் பேசுவதில்லை…

இங்கே ஓடுகின்ற
குதிரைகள்தான்
எங்கோ எவரோ
பணம் கட்டி ஆடுகிறார்கள்…

வெற்றிக்குரியவை என்று
கருதுகின்றவை
விழத்தாட்டப்படுகின்றன…
நொண்டிக்குதிரைகள்
முந்தி வருகின்றன…
குதிரைப் பேரங்கள் இல்லை
எல்லாம்
பொய்க்கால் குதிரைகள்..

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!