1.14K
” பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப்புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே “
– கபிலர்.
கடந்த 2016 அக்டோபர் 20ஆம் தேதி ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழில் திரு சு. வெங்கடேசன் அவர்கள் எழுதி, ஓவியர் மணியம் செல்வன் அவர்களின் ஓவியங்களுடன் வெளிவந்தவன் தான் ” வீரயுக நாயகன் வேள்பாரி”.
எப்பவும் போலான தொடராக தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முதல் வாரத்திலேயே நம் மனதை உள்ளிழுத்துக்கொண்டான் வேள்பாரி.
அதன்பிறகு ஒவ்வொரு வியாழனும் தவிக்க வைத்தது. ஒரு வியாழன் முடிந்து அடுத்த வியாழன் வருவதற்குள் நீண்ட நாட்களாகி விட்டதாய் உணர வைத்தான் வேள்பாரி. அப்படி ஏங்கி , ஏங்கி ஒன்றல்ல இரண்டல்ல 111 வாரங்களாக பறம்பை விட்டு அகல மறுத்தது மனம்.
அப்படியானால் 116 வாரங்களுக்கு பிறகு பறம்பை விட்டு போய் விட்டதா மனம் ? இல்லவே இல்லை. பார்க்குமிடமெல்லாம் பறம்பாக தெரிந்தது. இரவின் கனவு கூட பறம்பின் அறமும், இயற்கையும், பறம்பின் வளமும் , பாரியும், கபிலரும் தான் போட்டி போட்டுக்கொண்டு ஆக்கிரமித்தார்கள்.
இந்த வரவேற்பை ஆனந்தவிகடனே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்; இதை எழுதிய சு. வெங்கடேசன் அவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்; அதை தன்னுடைய நேர்காணல் ஒன்றிலும் சொல்லியுள்ளார் இப்படி, “இந்தக் கதை 50 வாரங்களுக்கு மேல் போகாது என்று ” ….. ஆனால் நடந்தது வேறு.. அப்படி கொண்டாடினார் வாசகர்கள் வேள்பாரியை.
வெகுசன இதழியல் வரலாற்றில் “பொன்னியின் செல்வனுக்கு” பிறகு இப்படியான வாசக வரவேற்பு கிடைத்தது “வேள்பாரிக்குத் ” தான்.
ஆனந்த விகடனே சற்று திக்குமுக்காடி தான் போனது என்று சொல்ல வேண்டும். அதனால்தான் வேள்பாரியின் நூறாவது வார விழாவை மிக விமரிசையாகவும், நேர்த்தியாகவும், கலை நயத்துடனும் “வேள்பாரி 100” என்று கொண்டாடினார்கள். அதில் எழுத்தாளர் சு. வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் , பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மருத்துவர் கு. சிவராமன், அப்போதைய கல்வித் துறை செயலாளராக இருந்த திரு. உதயச்சந்திரன் IAS, விகடன் நிறுவனத்தின் தலைவர் திரு. பா. சீனிவாசன் மற்றும் பல முக்கிய ஆளுமைகள், மற்றும் வேள்பாரியை உயிராய் நேசித்த வேள்பாரி வாசகர்கள் கலந்து கொண்டு அவ்விழாவினைச் சிறப்பித்தார்கள். இப்படியொரு நிகழ்வு நம் இலக்கிய வரலாற்றில், இதழியல் வரலாற்றில் மிக மிக புதுமையான ஒன்றாக பதிவு செய்யப்பட்ட பொன் நாள்.
அப்பொழுதுதான் இந்த வாசக பரப்பை அப்படியே அடுத்த தளத்திற்குக் கொண்டு போக நினைத்த ஆனந்தவிகடன் “கார்க்கிபவா” அவர்களை அட்மினாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் வேள்பாரி வாசகர் மன்றம் என்கிற முகநூல் பக்கம்.
வாரா வாரம் ஆனந்த விகடனை கடையில் வாங்கியவுடன் முதலில் படிப்பது வேள்பாரியைத் தான். கடையில் இருந்து பேருந்து நிலையம் போவதற்குள் இரண்டு, மூன்று பத்திகளையாவது படித்துவிடுவேன் நடந்து கொண்டே. பேருந்தில் ஏறியதிலிருந்து பள்ளியின் நிறுத்தம் வருகிற வரையில் அதைப் படித்து இரசித்து, மகிழ்ந்து, சிலவேளைகளில் அழுது, சிலவேளைகளில் அப்படியே உறைந்து, அதிசயத்து என பலவித உணர்வுக் குவியலாயிருப்பேன் நான்.
வியாழன்தோறும் நான் படித்து மகிழ்ந்ததை ரசித்ததை யாரிடமும் பகிர்ந்துகொள்ள தோன்றும் அப்படி என் வகுப்பு மாணவர்களிடம் வேள்பாரி கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். அவர்களும் மிக எளிதாக நுழைந்து விட்டார்கள் பறம்பினுள்.
நான் வகுப்பிற்குள் சென்ற உடனே மிஸ் இன்னைக்கு என்னாச்சு, மிஸ் சொல்லுங்க மிஸ் என்று அவர்கள் ஆர்வமாய் கேட்கும் பொழுது எனக்கு கண்ணீர் வந்துவிடும். ஆனால் அது ஆனந்தக் கண்ணீர்; பெருமிதக் கண்ணீர் ; உள்ளத்தின் முழு மகிழ்வை கண்வழியே வெளிப்படுத்தும் அற்புதத் துளிகள் அவை.
அப்படி என் வாழ்வில் கலந்துவிட்ட அந்த பாரியினால் விளைந்த இலக்கிய எழுச்சியும், இயற்கை எழுச்சியும், அற எழுச்சியும் பற்றி பகிரவே …..
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பாரியில் என்று ஒரு ஐயம் எழலாம் உங்களுக்கு?
நான் உங்களைக் கேட்கிறேன் அப்படி என்ன இல்லை வேள்பாரியில் ?
* பரந்துபட்ட இயற்கை அறிவு சேகரம்
* இன்றைய நவநாகரீக வாழ்வில் நாம் தொலைத்த அறம்
* திகட்டவே திகட்டாத காதல்கள்
* போர் வியூகங்கள்
* போர் ஆயுதங்கள் *நகைச்சுவை
*வாழ்க்கையின் பல அனுபவங்கள்
* தொல்குடிகளின் வரலாறு
* வாணிகம்
* அதிசயப் பறவைகள், விலங்குகள்
* பல்வேறு மரங்கள்
* பல மூலிகைகள், தாவரங்கள்,
* பல மலர்கள்,
* பெண்களை முன்னிறுத்தும் அன்பு
* வானியல் அறிவு
* ஓவிய அறிவு
* சிற்ப அறிவு
* அறத்துடனான வீரம், விவேகம்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுவைப் பெருக்கும் தமிழ் மேலும் இன்னும் பல. பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும் அறிவுச் சுரங்கம் தான் வேள்பாரி.
பாரி , பாரி என்று நான்தான் உருகிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன்; ” பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொல்வதைப்போல ” வேள்பாரி வாசகர் மன்றமுகநூல் பக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு பேஸ்புக்கில் சென்று பக்கத்தை பார்வையிட்ட பொழுதில் தான் அப்பூனையின் கண் திறந்து விட்டது.
ஆம், அங்கே மயங்கி கிறங்கி பாரி, பாரி என்று ஒரு கூட்டமே உருகி வழிந்து அன்பு ஆறாக ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அப்படி அந்த ஆற்றில் ஒரு துகளாய் நானும் அந்த பறம்பினுள் இருக்கிறேன் என்கிற நினைவே மிக மகிழ்வாக இருக்கின்றது.
ஏன் இந்த பறம்பையும், பாரியையும் நமக்கு இப்படி பிடிக்கிறது என்று சிந்தித்தால் நாம் நம் வாழ்வில் தொலைத்தவைகளைப்பற்றி நினைவிற்கு வரும் .
பயிர் விளைவித்தல் என்கிற செயலே இல்லை பறம்பில். இயற்கையிலேயே கிடைக்கிற தேன், கிழங்கு, இறைச்சி வகைகள் இவற்றை சாப்பிடுகின்றனர். உணவுக்கான உற்பத்தி என்பதே இல்லை எனில் நாளைக்கென அங்கு சேமிப்பதும் இல்லை. ” இது எனது நிலம், இது எனது சொத்து” என்று ஏகபோக உரிமையின்றி அனைவருக்கும் அனைத்துமாய் வாழ்கின்ற அந்த சிறப்பு . நாம், இன்று இப்படி ஒரு வாழ்க்கையை கனவில் கூட வாழ முடியாது.
“இயற்கை வழங்குகிறது நாம் பெறுகிறோம்”
” இதை விற்கவும், வாங்கவும் நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ? என்று வணிகம் பேச வந்த அமைச்சரிடம் பாரி சொல்லும் இடம் நமக்கு நெகிழ்வை தரும்.
கபிலரும், அதைக் கண்டு வியந்து ” மழை வந்ததும் செழிப்புற தழைத்து, வெயில் காலத்தில், வாடித் துவண்டு, மலரும் போது நறுமணம் வீசி, கனியும்போது அள்ளி வழங்கி , உதிரும்போது ஓசை இன்றி மண்ணில் மக்கி உரமாகும் அந்த அற்புத வாழ்க்கை தான் பறம்பின் வாழ்வு என்று சிலாகிப்பார்” .
நிச்சயம் இந்த வரிகள் உங்களுக்குள் ஒரு இனிய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கும் என்று நம்புகின்றேன். இது தான் பறம்பின் இயற்கை வளம்.
அதேபோல்தான் பறம்பின் காதல்களும்
முருகன்- வள்ளி
எவ்வி- சோமா
பாரி- ஆதினி
நீலன் -மயிலா
உதிரன்- அங்கவை
கோவன் – செம்பா
சூல வேள்- தூதுவை அத்துடன் மற்றொரு அழகிய காதலும் இதில் வருகிறது. ஆனால் அது மறைபொருளாக வந்து போகிற கதாபாத்திரம். பொற்சுவையின் காதலன் தான். சூல்கடல்முதுவனின் ஒரே மகளாக, கபிலரின் தலை சிறந்த மாணவியாக, இணையற்ற அறிவும் , அழகும் ஒருங்கேயமைந்த பேரழகியான பொற்சுவை பாண்டிய நாட்டு இளவரசன் பொதியவெற்பனை மணமுடித்து பாண்டிய நாட்டின் இளவரசியாக வருகின்றாள்.
ஆனால், அவள் மனம் முழுக்க நிறைந்து இருப்பவன் அவளது காதலன் தான். அவனை நினைத்து அவள் பேசுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம் மனதை அசைத்துப் பார்க்கும். அந்த அளவிற்கு மிக அழகான ஒரு காதல் கதை. ஆனால், நமக்கு அந்த காதலன் யாரென்று எழுத்தாளர் சொல்லி இருக்கவே மாட்டார் கடைசி வரையிலும்.
இன்றும் வேள்பாரி வாசகர் மன்றத்திற்கு புதியதாக வருகிற ஒரு வாசகரின் கேள்வி பொற்சுவையின் காதலன் யார் என்பதுதான் ? உடனே, பழைய வாசகர்கள் எல்லாம் எங்களுக்கும் அது தெரியலப்பா நீ தெரிஞ்சா சொல்லுப்பா அப்படின்னு நகைச்சுவையோடு கடப்பர். அந்த மாதிரியான ஒரு அதீத ஆர்வத்தைத் தூண்டுகிற ஆனால் நாவல் முழுவதும் மறைபொருளாக வருகிற கதாபாத்திரம் இந்த காதலும் நமக்கு அத்தனை பிடித்து தான் போகின்றது.
அவனின் காதல், அந்த காதலிலும் வருகின்ற ஊடல், பிரிவு இதையெல்லாம் படிக்கப் படிக்க நாம் மெய் மறந்து தான் போவது திண்ணம்.
அத்தனை சிறப்பு வாய்ந்த பொற்சுவையின் தியாகத்திற்கு சிறப்பு செய்வதற்காக, பச்சை மண்ணில் சிலை செய்து அச்சிலையின் காதில் பொற்சுவையின் மகரக்குழைகளை அணிவித்து தெய்வமாக வணங்கும் பாரியைக் கண்ணுறும் நேரம் நம் கண்ணில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும். அந்தப் பச்சை மண் சிலை தான் இன்று சிலரின் குலதெய்வமாக இருக்கின்ற பச்சையம்மனோ என்று எண்ண வைக்கிறது நம்மை.
இப்படி ஒவ்வொரு காதலும், ஒவ்வொரு காதலரும், ஒவ்வொரு சிறப்பைப் பற்றி பேசுகிற ஒவ்வொரு இடமும் அட அட என்று சொல்லத் தோன்றும்; கணம் கணமாய் நம்மை புதுப்பிக்கும் காதலால் நிரம்பி வழிகிற பறம்பை விட்டு இறங்க எப்படி மனம் வரும்?…..
வேள்பாரியால் இணைந்த இப் பெருங் கூட்டம் இன்று நிகழ்த்தும் பல மாயங்களை நினைத்துப் பார்த்தால் பெருமைப்படுவது மிகையில்லையே என்றுதான் தோன்றும்.
விரும்பிப் படித்த அந்த கணத்தில் ஒவ்வொருவரின் உள்ளேயிருந்த அந்த படைப்பாளர் விழித்துக்கொண்டது தான் முதல் மாயம்.
வேள்பாரி நாவலில் நீலன் – மயிலா காதலர்களாகவே வருவார்கள். நீலன் அமைதியான வீரன்; மயிலாவோ வாய் ஓயாத வம்புக்காரி. இரு துருவங்களுக்குமான அந்த காதல் எப்படி அரும்பியிருக்கும் என்றும், நீலனின் காதலை மயிலா உணர்ந்தாளா ? மயிலாவின் காதலை நீலன் உணர்ந்தானா என்று ” நீலமயில்” என்கிற அழகிய கிளைக்கதையை எழுதினார். அனுராதா.
கீழடியிலிருந்து உதித்த உதிரனுக்கும் பாரியின் குலக்கொடியான அங்கவைக்கும் காதல் எப்படி நிகழ்ந்திருக்கும் என்று T.K. வித்யாகண்ணன் அவர்கள் “சித்திரக் காதல்” என்று ஒரு கிளைக்கதை விவரித்து எழுதினார்.
முருகனின் நண்பனாக வருபவனும் , பறம்பின் தலைநகராம் எவ்வியூரை வடிவமைத்தவனுமான எவ்விக்கும்- சோமாவுக்குமான ஆதிக்காதல் எப்படி மொட்டவிழ்ந்தது என்பதை சோம பானம் அருந்திய களிப்பு போல நமக்கு கடத்தினார் “ஆதிக் கூத்து என்கிற கிளைக்கதை வழியே ஆனந்தி.
” பொற்சுவையின் காதலன் யார் என்கிற வினா திரும்பத்திரும்ப எழுந்தவுடன் மன்ற இளவல் விக்னேஷ் “ஆழிமதி” என்கிற கிளைக் கதையை எழுதி, அதில் பொற்சுவையின் பணிப்பெண்ணாக வருகின்ற சுகமதிக்கும் ஒரு கதையை விவரித்து எழுதினார்.
பாரிக்கும் – செம்மாஞ் சேரலுக்கும் இடையேயான போரைப் பற்றி கிளைக்கதை ஒன்றை எழுதினார் சுங்கவரித்துறையின் உயர் அதிகாரியான திரு. அசோக் குமார் அவர்கள்.
” ஒரு நல்ல படைப்பு என்பது மேன்மேலும் பல நல்ல படைப்புகளையும், படைப்பாளர்களை உருவாக்கும்” என்று ஒரு நேர்காணலில் எழுத்தாளரும் மதுரை M.P யுமான திரு. சு. வெங்கடேசன் அவர்கள் சொன்னார். அவரின் இந்த கூற்று 100% உண்மையானது இந்த படைப்பாளர்களின் கிளைக் கதைகளை எல்லாம் படித்த பிறகு.
” வேள்பாரி வாசகர் மன்றத்தின் அடுத்த நகர்வாக உதயமானது “பறம்பு தமிழ்ச்சங்கம்” . “பறம்பு தமிழ்ச்சங்கம் செய்த முதல் அரும்பணி “பறம்பின் மைந்தனுக்கு பாராட்டு விழா” என்று எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களை கொண்டாடித் தீர்த்தனர் வேள்பாரி வாசகர்கள். அன்னமழகி அரிசி சமைத்து வெற்றிலைத் தாம்பூலம் தரித்து என ஒரு நாள் முழுவதும் அந்த கொண்டாட்டம் நிகழ்ந்தது. உலகத்தின் எந்த மூலையிலும் இருந்த அனைவரும் ஒன்றிணைந்தனர். வேள்பாரிக்காக வேள்பாரி வாசகர்கள் இணைந்த அதிசயக் கொண்டாட்டமாக அமைந்தது அது. இது அடுத்த மாயம் என்றே சொல்லலாம்.
இது போல தானா சேர்ந்த கூட்டத்தின் படைப்பூக்கத்தை முழுமையாக வெளிக் கொணருவதற்காக கடந்த பொங்கலன்று இந்த படைப்பாளர்களுக்கு எல்லாம் புதிய களம் அமைத்துக் கொடுக்க தொகுக்கப்பட்டது தான் “ஏழிலைப்பாலை” என்கிற தொகுப்பு.
” முருகன் வள்ளியை அழைத்து சென்று காட்டிய முதல் பேரதிசயம் தான் ஏழிலைப்பாலை “. வள்ளியின் அணுக்கத்தினால் அம்மரம் எப்படி மலர்ந்ததோ அதுபோல வாசகர்களின் அணுக்கத்தினால் மலர்ந்தது தான் ஏழிலைப்பாலை என்கிற தொகுப்பு நூல். பல கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வார்த்தை விளையாட்டுகள், புகைப்படங்கள், காதல் அனுபவம், பயண அனுபவம் என பல்சுவை தொகுப்பாக விளங்கியது அந்த ஏழிலைப்பாலை. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதாக இருந்தது பிறகு ஊரடங்கு உத்தரவு காரணமாக இணையவழி நேரலையில் 14-01- 2021 பொங்கல் அன்று நடைபெற்றது. மதுரையிலிருந்து திரு சு வெங்கடேசன் அவர்கள் இணைய வழியில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தங்கள் எழுத்துக்களை முதன் முதலில் அச்சில் பார்த்த அந்த கணம் கண்கொள்ளாக் காட்சியாகவும், மனம் நிறைந்த அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்வுடன் கலை, இலக்கிய பண்பாட்டு நுகர்வின் உச்சமாக மலர்ந்தது ஏழிலைப்பாலை.
வேள்பாரி வாசகர் மன்ற முகநூல் பக்கத்தில் அவ்வப்போது தனது மன உணர்வுகளை கவிதைகளாக வெளிப்படுத்திய பறம்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், அனைவராலும் “தேக்கன் ” என்று அன்போடு அழைக்கப்படும் திரு.பா.திருப்பதிவாசகன் அவர்கள் தனது முதல் கவிதைத் தொகுப்பான “கொஞ்சம் காதல் கொஞ்சம் கவலை” தொகுப்பை வெளியிட்டார். கவலை அனைத்தும் இந்த சமூகத்திற்கானதாகவே இருந்தன என்பது கூடுதல் சிறப்பு . தனது காத்திரமான வரிகளால் அந்த புத்தகத்தை அணி செய்திருந்தார்.
அடுத்ததாக ” இந்துமதி கணேஷ் அவர்கள் “பரணி நதிக்கரையினிலே” என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். விகடகவி டாட் காம் என்ற இணையதளத்தில் தனது கல்லூரி கால நினைவுகளை “மிடில் பெஞ்ச் ” என்கிற பெயரில் எழுதி வாசகர்களை கவர்ந்து வருகின்றார். அவருக்கு சிறுகதைகளும் இயல்பாய் நன்கு எழுத வருவதால் ” கண்ட நாள் முதல் ” என்கிற சிறுகதைக்கு பரிசும் பெற்றார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
அதேபோல துபாய் தேசத்தில் பணிபுரிகின்ற வேள்பாரி வாசகர் மன்றத்தைச் சேர்ந்த பா. நாராயணமூர்த்தி என்கிற இளவல் – நாவலில், அறம் சார்ந்த வருகின்ற கருத்துக்களையும் இயற்கை சார்ந்த கருத்துக்களையும், காதல் சார்ந்த கருத்துக்களையும், நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளுடன் ஒப்பிட்டு பல நல்ல கட்டுரைகளைப் பதிவிட்டு வருகின்றார். அதெல்லாம் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்று சொல்லவேண்டும் அந்த அளவிற்கு மிக சிறப்பான மிகப் பொருத்தமான மிக உள்ளார்ந்து செய்கின்ற பணியை மிக அழகாகவும், ஆர்வமுடன் செய்து வருகின்றார். அவரும் அதனை விரைவில் தொகுக்க இருக்கின்றார்.
“ஆதி அன்பின் ஊற்று” என்கிற சிறுகதைத் தொகுப்பை திரு. டேனியல்.வி. ராஜா வெளியிட்டுள்ளார்.
தம்பி எபிநேசர், திரு.செல்வபிரகாஷ், சேர நாட்டு சகோதரி லாஸ்யா, மருத்துவர்களாய் பணிபுரிந்தும் இலக்கியத்தின மீது தீராக் காதலுடன் வாழ்கின்ற Dr.சர்மிளா தேவி, Dr. கெளரிப் பிரியா, LIC ல் உயர் அதிகாரியாக பணிபுரியும் திரு. ஸ்ரீகாந்த், மைதிலி இவர்கள் அனைவருமே மிகச் சிறந்த கவிஞர்களாய் விளங்குபவர்கள்.
ஆர். நீலா, நந்தகுமார், அருள்குமரன், ரியாஸ், நித்யா, கோகிலா, சரண்யா, கலைச்செல்வி இவர்கள் அனைவரும் மிகச்சிறந்த கட்டுரையாளர்களும், சிறுகதை எழுத்தாளர்களுமாய் மிளிர ஆரம்பித்துள்ளர்கள்.
கடந்த ஆண்டு ஏழிலைப்பாலை மலர்ந்தது இந்த ஆண்டு காதல் நுகர்வின் உச்சமாக “சந்தன வேங்கை” மலர்ந்தது 09- 01 – 2022 அன்று. இதுவும் நேரடியாக சென்னையில் நடைபெற இருந்து, ஊரடங்கின் காரணமாக இணையவழி நேரலையில் நடைபெற்றது. சந்தன வேங்கையின் முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை நிரம்பி வழிந்தது காதல், காதல், காதல், மட்டும் தான். ஆனால் ஒரு இடத்திலும் நீங்கள் அதிக உணர்ச்சிவயப்பட்ட காதலையோ அல்லது திகட்டிப் போகின்ற காதலையோ பார்க்க இயலாது. அத்தனை கவித்துவமான காதல்களால் நிறைந்ததுதான் அத்தனை பக்கங்களும். காதலூற்றிய பேனாவினால் தான் அப்படி காதலாக எழுத முடியும்.
சித்திரையில் முத்திரை பதிக்க பறம்பு தமிழ்ச்சங்கம் ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்காக வந்த கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை மூன்று கட்டமாக தேர்வு செய்து , முதல் சிறுகதைக்கு ரூ.5000/-ம், அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளுக்கு ரூ. 1000/- எனவும் ரூ. 50 ஆயிரத்தை பரிசாக வழங்கி வாசகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வைத்தது என்றே சொல்லலாம்.
இப்படியாக தமிழ் இலக்கிய உலகிற்கு பல புதிய இளம் படைப்பாளிகளை அறிமுகம் செய்வதற்கும், செய்து வருவதற்கும் முதுகெலும்பாக வேள்பாரி வாசகர் மன்ற முகநூல் பக்கமும், பறம்பு தமிழ்ச் சங்கமும் , பறம்பு பாட்டா பிறையும் இருக்கிறது என்பது சற்றும் மிகை இல்லாத வார்த்தைகள் தான்.
இலக்கிய உலகினில் எழுச்சியாக இல்லையில்லை புதிய பாய்ச்சலையே நிகழ்த்தி இலக்கியத்தையும், இயற்கையையும், இது எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்ற அறத்தையும் நமக்கு கொடையாக வழங்கி பேரன்புடன் வலம் வருகின்றான் வேள்பாரி.
” இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாக தனது உண்மைகளை மறைத்து வைத்து விளையாடுகிறது. இவற்றையெல்லாம் கண்டறிவதும், இணைப்பதும், புரிந்து கொள்வதிலும் தான் நம் வாழ்வில் சுவையூட்டக்கூடியது.”
தேனின் சுவை சுவைப்பதில் இல்லை. சுவைத்ததில் தான் இருக்கின்றது.”
வேள்பாரியின் வரிகளை கொண்டே நிறைவு செய்கின்றேன்.
Lovel
அட்டகாசம் போங்க. அழகாக அனைத்தையும் எழுதிவிட்டீர்கள். பாரியால் இணைந்த கூட்டம் நாம் இப்போது ஒரே குடும்பமாய். தேனை சுவைத்துக்கொண்டே…..
Lovely
Extraordinary criticism by the writer Mrs Amala mam
தேனின் சுவை சுவைப்பதில் இல்லை. சுவைத்ததில் தான் இருக்கின்றது.” என்று தாங்கள் கூறியது போல், வாசிக்க வாசிக்க அவ்வளவு இனிமையான இருக்கிறது தங்கள் தமிழும், எழுத்து நடையும்… Your techniques of writing is remarkable and highly appreciatable . Keep writing mam…
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஒரு மாணவனாக சிந்து சீனு வேலூர்
அருமை அக்கா 🎉
Awesome. A history of Velpari readers னு சொல்லலாம். அழகான தமிழில் கோர்வையான நடையில் சொல்லிட்டீங்க. 💐💐
Excellent information and sharing of thoughts
வேற லெவல் அக்கா
அருமையான பதிவு…. வீரயுக நாயகன் வேள்பாரி ஓர் நாவல் மட்டும் அல்ல.. அது ஓர் விதை.. வீழும் மனங்களில் எல்லாம் வெவ்வேறாக விளையும் ஆற்றல் கொண்ட வீரியமிக்க விதை…
அமலா பேபி சிறப்பு பா❤️. என் பெயரையும் இணைத்து கண்கள் கலங்க வைத்துவிட்டீர்கள்.
ஆழ்ந்த விமர்சனம். 👍
வாழ்க வளமுடன்பா😊💐