இந்தியா

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே.. யார் இவர்? முழு விவரம்

96views
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் இருவரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் சுமார் 9000 காங்கிரஸ் நிர்வாகிகள் இத்தேர்தலில் வாக்களித்தனர். இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
யார் இந்த கார்கே?
1942ஆம் ஆண்டு பிறந்த மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். சட்டப்படிப்பு முடித்த இவர் இளம் வயதிலேயே சம்யுக்த மஸ்தூர் சங்கம் எனும் தொழிற்சங்கத்தின் செல்வாக்கு மிக்க நபராக உருவெடுத்தார். தொழிலாளர் உரிமைகளுக்காக இந்த சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார்.
1969ஆம் ஆண்டு 27ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கார்கே, குல்பர்கா நகர காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1972ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குர்மித்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 1976லஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
1978ல் குர்மித்கல் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் 2வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சராக பொறுப்பேற்றார். 1980ல் கர்நாடகாவின் முதல்வராக இருந்த குண்டு ராவ் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சரானார் கார்கே.
1983ஆம் ஆண்டு குர்மித்கல் தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான கார்கே, 1985-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வானார் கார்கே. இப்படியாக 2008 வரை ஒரே தொகுதியில் 9 முறை வெற்றி பெற்றார் கார்கே.
2009 மற்றும் 2017 ஆம் ஆண்டு குல்பர்கா நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி வெற்றி கண்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்ட கார்கே, பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வியுற்றார். இதுதான் இவர் சந்தித்த முதல் தேர்தல் தோல்வி.
இந்த சூழலில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,385 வாக்குகளில் 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகள், மூத்த நிர்வாகிகளின் விலகல் என்று சரிவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மீண்டும் வீறுகொண்டு எழுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!