விளையாட்டு

வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா: டைமன்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை

91views
ஒலிம்பிக் நாயகர் நீரஜ் சோப்ரா சர்வதேச தடகள சம்மேளனத்தின் டைமன்ட் லீக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துளார்.
கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் நேற்று லசானேவில் நடந்த டைமன்ட் லீக் போட்டியில் அவர் 89.08 மீட்டர் என்ற நம்பிக்கை தரும் இலக்கில் ஈட்டியை எறிந்தார். இதனால் அவர் அடுத்த மாதம் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெறும் டைமன்ட் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அண்மையில் நடந்த காமென்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விளையாட்டை தொடர முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து நீரஜ் சோப்ரா, “89 மீட்டர் என்பது சிறப்பான ஆட்டம். காயங்களில் இருந்து மீண்டும் நான் திறம்பட செயல்படுவதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த சாதனை நான் பூரண உடல்நலத்திற்கு திரும்பியுள்ளதற்கான சான்றும்கூட. நான் காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகினேன். அதனால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன் எனக்கு சிறிது பதற்றம் இருந்தது. ஆனால் நேற்றிரவு ஆட்டம் எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. நான் ஜூரிச் டிஎல் ஃபைனலில் இன்னும் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்றார்.
டைமன்ட் லீக் இறுதிப் போட்டிகள் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் செப்டம்பர் 7 மற்றும் 8ல் நடைபெறுகிறது. நேற்றைய போட்டியில் வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளுடன் நீரஜ் சோப்ரா 4வது இடத்தில் உள்ளது.
முன்னதாக ஸ்டாக்ஹோமில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி சாதனை படைத்திருந்தார். சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் 90 மீட்டர் என்பது கோல்ட் ஸ்டாண்டர்ட் எனக் கூறப்படுகிறது. அதை கிட்டத்தட்ட நெருங்கியிருந்தார் நீரஜ் சோப்ரா.
அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா மூன்றாவது சுற்று வரையிலுமே பதக்கப் பட்டியலுக்கு வரவில்லை. ஆனால், டைமன்ட் லீச் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே நீரஜ் முன்னிலையில் இருந்து வருகிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!