இந்தியா

மதுராவில் இன்று கோகுலாஷ்டமி கோலாகல விழா – கிருஷ்ணர் உடைகள் ரூ.500 கோடிக்கு விற்பனை

91views
உத்தர பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக மதுரா திகழ்கிறது. இந்த நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது.
இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மதுராவில் உள்ள தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன.
இந்த உடைகளில் அதன் விலைக்கு ஏற்ற வகையில் ஜரிகை வேலைப்பாடுகளுடன் பிரகாசமான கற்களும் பதிக்கப்படுகின்றன. இதனால், இந்த உடைகள் ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, போலந்து, துபாய் உள்ளிட்ட 18 வெளிநாடுகளில் இருந்து மதுரா தையல் கலைஞர்கள் ஆர்டர் பெற்று வருகின்றனர். கிருஷ்ணரின் ஆடைகள் கடந்த 2 ஆண்டுகளாக விற்காமல் இருந்தன. தற்போது, கோகுலாஷ்டமி மிக சிறப்பாக கொண்டாடப்படுவதால், மதுரா தையல் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மீண்டும் வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வியாபாரி சோமேஷ் வர் அகர்வால் கூறும்போது, ‘இந்த ஆண்டு சுமார் ரூ.500 கோடிக்கு கிருஷ்ணர் ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி உள்ளன. உலகிலேயே கிருஷ்ணருக்கு மட்டும்தான் அதிக வகைகளிலான ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இதன் பலன் கிருஷ்ண ஜென்ம பூமி வாசிகளான எங்களுக்கு கிடைத்து வருகிறது’ என்றார்.
கிருஷ்ணர் ஆடை தயாரிப்பு மதுராவில் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகவே உள்ளது. இந்த தொழிலில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் நுட்பமான வேலைப்பாடுகளைப் புகுத்தி தனித்துவமான வகையில் கிருஷ்ணர் ஆடைகளை முஸ்லிம்கள் தயாரிக்கின்றனர். மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி, பாங்கே பிஹாரி, ஹரே கிருஷ்ணா ஆகிய கோயில்களில் உள்ள கிருஷ்ணர் சிலைகளுக்கு விலை மதிப்புள்ள ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
அந்த ஆடைகளை பூஜைக்குப் பின்னர் பூஜாரிகள் விற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன்பு பிருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலில் ஜீன்ஸ், டிஷர்ட் அணிய வைத்து கையில் ஒரு மொபைல் போனை கொடுத்து நவீன கிருஷ்ணராக மாற்றி ரகசிய பூஜையும் செய்யப்பட்டது. ஜீன்ஸ், டி ஷர்ட் அலங்காரத்தில் இருந்த கிருஷ்ணர் சிலையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, அந்த ஆடைகளையும் வெளி நாட்டவருக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்றது பெரும் சர்ச்சையானது நினைவுகூரத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!