இலங்கை எத்தனையோ பிரச்சினைகளைச் சமாளித்து வந்திருக்கிறது. ஆனால் இப்போதைய பொருளியல் நிலைமையைப்போல் படுமோசமான ஒரு பிரச்சினையை எதிர்நோக்கவேண்டிய நிலை வரும் என்று அந்த நாடு கனவில்கூட நினைத்துப் பார்த்து இருக்காது.
மக்களுக்குச் சாப்பிடக்கூடவழியில்லை; மின்சாரம் இல்லை. மக்கள் விழிபிதுங்குகிறார்கள். இவ்வளவுக்கும் காரணம் கடந்த 20 ஆண்டுகளில் நாட்டை ஆண்டு வந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினர் அரங்கேற்றிய செயல்கள்தான் என்று மக்களில் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை மங்கச் செய்தால்தான் நாடு தப்பிக்கும் என்று முடிவு செய்து, அரசியல் ரீதியில் அது சாத்தியமில்லாததால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.
ராஜபக்சேக்கள் இப்போது அதிகாரத்தில் இல்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி அசைக்க முடியாத அளவுக்கு அதிக அதிகாரங்களுடன் ஆட்சி நடத்திய கோத்தபாய ராஜபக்சே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாட்டைவிட்டே ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
அவருக்குப் பதிலாக இப்போது ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அதிபராக இருந்த கோத்தபாயவின் பதவிக் காலம் 2024ல் முடியும்.
அதுவரைதான் ரணில் அதிபராக இருப்பார். மிக அதிக அரசியல் அனுபவம் வாய்ந்த இலங்கை தலைவர்களில், 73 வயதாகும் ரணிலும் ஒருவர்.
ஆறு முறை பிரதமராக பதவி வகித்தவர்; நாடாளுமன்றத்தில் 45 ஆண்டுகளைச் செலவிட்டு இருப்பவர்; தாராள பொருளியல் சந்தை ஆதரவாளர்; லங்கை பொருளியல் முன்பு பல சவால்களைச் சந்தித்த போதெல்லாம் அவற்றை திறம்பட சமாளிக்க உதவியாக இருந்தவர்; வெளிநாட்டு உறவைப் பார்க்கையில் இலங்கைக்கு முக்கியமான இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நல்லுறவைக் கட்டிக்காத்தவர்.
ஆனால், வெளிநாடுகளில் இருக்கும் செல்வாக்கு அளவுக்கு இலங்கை மக்களிடம் அவருக்கு அரசியல் ஆதரவு இல்லை என்பதுதான் அரசியலில் அவருக்குப் பாதகமாக இருந்து வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் அவருடைய ஐக்கிய தேசிய கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சியின் ஒரே ஒரு நியமன உறுப்பினராகவே திரு ரணில் நாடாளுமன்றத்திற்குள் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமல்ல, திரு ரணில் ராஜபச்சேக் களுடன் அணுக்க உறவைக் கொண்டு இருப்பவர். அதனால் ராஜபக்சே ஆட்சியின்போது பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு அதன்மூலம் ரணில் அரசியல் ரீதியில் கெட்ட பெயரைச் சம்பாதித்துக்கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.
இதனால்தான் ரணில் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிவைக்கிறார்கள். அவரின் அலுவலகங்களையும் சொந்த வீட்டையும்கூட கொளுத்திவிட்டார்கள். ரணில் விக்ரமசிங்க நிர்வாகத்தின்கீழ் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை என்று நம்பும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்கிறார்கள். கவனிப்பாளர்கள் சிலர் புதிதாக தேர்தல் நடக்க வேண்டும் என்றுகூட கோருகிறார்கள்.
ஆனால் உணவின்றி, எரிபொருள் இன்றி, பொருளியல் சீர்கெட்டு, நாடு ஏறக்குறைய நொடித்துப் போகும் அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு பொதுமக்கள், குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவற்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டி யது அவசர அவசியமான ஒன்றாக இருப்பதால் இப்போதைக்குத் தேர்தல் ஒத்துவருமா என்பது கேள்விக்குறியாகத்தான் தெரிகிறது.
முதலில் நாட்டின் பொருளியல் நல்ல நிலைக்குத் திரும்பவேண்டும். அதன் பிறகு தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமானதாக, ஒத்துவரக்கூடியதாக இருக்கும். பழுத்த அனுபவசாலியான ரணிலுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தரவேண்டும்.
அதிபராகி இருக்கும் ரணில் ஆயிரமாயிரம் சவால்களை எதிர்நோக்குகிறார். அவர், தனது அரசியல் அனுபவங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆற்றல் மிகுந்த, நம்பத்தகுந்த அரசாங்கத்தை முதலில் அமைக்க வேண்டும்.
அத்தகைய அரசாங்கம் இலங்கைச் சமூகத்தின் வெவ்வேறான அனைத்துப் பிரிவுகளையம் பிரதிநிதிக்க வேண்டும். ராஜபக்சேக்கள் கட்சியினரை மட்டும் அதிகம் கொண்ட அரசு அமைத்து அதனால் மேலும் பிரச்சினை ஏற்படுவதை ரணில் தவிர்த்துவிட வேண்டும். புதிய அரசில் எதிர்த்தரப்புக்கும் இடம் இருக்கவேண்டும்.
அனைத்துலக பண நிதியமும் கடன் கொடுக்கும் இதர தனிப்பட்ட தரப்பினரும் இலங்கைக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டி, உடன்பாடுகளைச் செய்துகொண்டு, அதன்வழி பொருளியல் மீட்சி செயல்திட்டம் வெற்றிகரமான முறையில் செயல்பட வேண்டுமானால் அத்தகைய ஓர் அரசு அடிப்படை தேவை.
அத்தகைய உடன்பாடுகள் இடம்பெற்றால்தான் இலங்கைப் பொருளியல் சீரடையும்; தலை நிமிரும்; சமூக நிலைப்பாடும் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஆற்றல்மிகுந்த, மக்களின் நம்பிக்கைமிக்க ஓர் அரசு அமைவதே இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் இப்போதைக்கு மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. இதுவே திரு ரணிலும் இலங்கையும் எதிர்நோக்கும் சவால்களில் இமாலய சவாலாக இருக்கிறது.
இதில் பெரும் பொறுப்பு புதிய அதிபர் ரணிலுக்கு அதிகம் இருக்கிறது.
திரு ரணில், நாடாளுமன்றத்தின் ஆதரவு மட்டும்தான் இப்போதைக்குத் தனக்கு இருக்கிறது, மக்களின் அரசியல் ஆதரவு தனக்கு இல்லை என்பதை உணர்ந்து, மக்களின் அதரவையும் நம்பிக்கை யையும் மீட்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
இப்போது தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி 2024க்குள் நாடு தலை நிமிர அவர் வழிவகை செய்யவேண்டும்.
இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறைதான் ரணில் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுக்கும். அந்த வழி, 2024க்குப் பிறகும் அவரே அதிபராக இருந்து தொடர்ந்து நாட்டை வழிநடத்த வழிகோலும் என்று நம்ப இடம் உண்டு.
அதைவிட முக்கியமாக, செம்மையான ஆற்றல் மிக்க, நம்பிக்கைமிக்க அரசாங்கத்தை அமைக்க வேண்டிய மிக முக்கிய சவாலை எதிர்நோக்கும் புதிய அதிபருக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதைப் பொது மக்கள் உணரவேண்டும்.