நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா மனக்கசப்பில் இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
அத்தொடரிலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறியதற்கான காரணமும் அதுதான் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அவ்வணியின் கேப்டனான தோனியின் பிறந்த நாள் அண்மையில் வந்தது. பலரும் அவருக்கு வாழ்த்துச்சொன்ன நிலையில் ஜடேஜா மட்டும் அதில் மிஸ்ஸிங்.
வழக்கமாக முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லும் ஜடேஜா இம்முறை தோனியைக் கண்டுகொள்ளாதது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு பதிவிட்ட ஐபிஎல் தொடர்பான அனைத்துப் பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த சர்ச்சை வெடித்தது.
தோனியுடனான மோதல் மற்றும் சென்னை அணி மீதான மனக்கசப்பு உள்ளிட்டவை காரணமாக சென்னை அணியிலிருந்து ஜடேஜா விலகவுள்ளதாக வெளியான தகவலை மேற்கண்ட அடுத்தடுத்த சம்பவங்கள் ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே அமைந்தன. தன்னைப் பற்றி இவ்வளவு பேச்சுகள் அடிபட்டபோதும் ஜடேஜா இதுகுறித்து இன்னும் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜடேஜாவின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், யாருக்காகவும் உங்களது தகுதியைக் குறைத்துக்கொள்ளாதீர்கள் எனவும் சுயமரியாதைதான் முக்கியம் எனவும் குறிப்பிடும் தொனியிலான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.