சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் நேற்று (ஜூலை 17) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சிங்கப்பூரில் ‘சூப்பர் 500’ சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி இடையே கடும் போட்டி நிலவியது. துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்திருந்த சிந்து பின்னர் அதிரடி காட்டி, 11-2 என முன்னிலை வகித்தார். முதல் செட்டை 21-9 என கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 11-21 என கோட்டை விட்டார். இதனால் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் இருவரும் கவனமாக விளையாடினர். சீன வீராங்கனை வாங் ஜி யி கடும் சவால் கொடுத்தாலும், 21-15 என சிந்து தன் வசப்படுத்தினார். இதன்மூலம் 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.