ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் நாடாளுமன்ற மேலவை தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது. அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் பிரதமருமான ஷின்ஜோ அபே பல நகரங்களுக்கு சென்று ஆளும் கட்சிக்கு வாக்கு சேகரித்து வந்தார்.
அந்த வகையில் கடந்த 8-ந் தேதி ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே பங்கேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷின்ஜோ அபே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரது உயிரை காப்பாற்ற பல மணி நேரம் போராடியபோதும், சிகிச்சை பலனின்றி ஷின்ஜோ அபே பரிதாபமாக இறந்தார். ஷின்ஜோ அபேயின் படுகொலை ஜப்பான் மட்டும் இன்றி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இருந்தபோதிலும் ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் 125 இடங்களுக்கு 545 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. ஷின்ஜோ அபேயின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலை தேர்தலில் எதிரொலித்தது. இதனால் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 48.8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த தேர்தலில் 52.05 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஷின்ஜோ அபேயின் கொலையால் உருவான அனுதாப அலையால் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த தேர்தலில் 55 இடங்களில் வெற்றி பெற்ற லிபரல் ஜனநாயக கட்சி இம்முறை 60 இடங்கள் வரை வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
இந்த நிலையில் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் நடத்தப்பட்ட 125 இடங்களில் 69 இடங்களை கைப்பற்றியதன் மூலம் அக்கட்சி தனிப்பெரும்பன்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.