காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய பேட்மிண்டன் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் டெல்லியில் இன்று தொடங்குகிறது. தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தகுதி சுற்றுபோட்டியில் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே கூறி விட்டார்.
இதன் மூலம் அவர் காமன்வெல்த், ஆசிய விளையாட்டை தவற விடுவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தகுதி போட்டியை புறக்கணித்ததற்கான காரணத்தை சாய்னா நேவால் வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் எனக்கு பட்டத்தை தக்கவைக்க விருப்பம் இல்லை என்பது போல் செய்திகள் வெளியாகி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
ஐரோப்பாவில் 3 வாரங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி விட்டு இப்போது தான் தாயகம் திரும்பியுள்ளேன். அடுத்த இரு வாரத்திற்குள் ஆசிய சாம்பியன்ஷிப் நடக்க உள்ளது. இப்படிப்பட்டநிலைமையில் ஒரு மூத்த வீராங்கனை அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்பது என்பது இயலாத காரியம்.
இதனால் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறுகிய கால அவகாசமே இருப்பதால் தகுதி போட்டியில் என்னால் பங்கேற்க இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு தகவல் தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் இருந்து என்னை வெளியேற்றுவது அவர்களுக்கு (பேட்மிண்டன் சம்மேளனம்) மகிழ்ச்சி அளிப்பதுபோல் தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.