விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் 20-வது லீக்: லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

70views

ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் அதிரடியாக ஆடி 36 பந்தில் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல்  29 ரன், அஸ்வின் 28 ரன்னில் அவுட்டானார்.

லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே கேப்டன் கே எல் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் டக் அவுட்டானார். ஹோல்டர் 8 ரன்னிலும், தீபக் ஹூடா 25 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 39 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 22 ரன்னிலும், சமீரா 13 ரன்னிலும் அவுட்டாகினர்.  கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் போராடினார். 4 சிக்சர் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், லக்னோ அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும். ராஜஸ்தான் சார்பில் சாஹல் 4 விக்கெட்டும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 6வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் சாஹல். இந்தப் பட்டியலில் பிராவோ (173), மலிங்கா (170), அமித் மிஸ்ரா (166), பியூஷ் சாவ்லா (157), ஹர்பஜன் சிங் (150) என முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!