519
கொஞ்சம் முயன்றால்
பாடலின் முதல் வரி எண்ணத்தில் விரியும்;
கொஞ்சம் முயன்றால், கவிதை சுரக்கும்!
முட்டையின் உள்ளே சின்னக் கீறல்;
கொஞ்சம் முயன்றால், புத்துயிர் பிறக்கும்!
தவழும் குழந்தை – நகரா பொம்மை;
கொஞ்சம் முயன்றால், எட்டிப் பிடிக்கும்!
கல்வியும் கலையும் அறிவு புகட்டும்;
கொஞ்சம் முயன்றால், என்றும் நிலைக்கும்!
உழைப்பும் தொழிலும் வாழ்வு கொடுக்கும்;
கொஞ்சம் முயன்றால், எல்லை விரியும்!
அன்பும் பண்பும் அறிமுகம் கொடுக்கும்;
கொஞ்சம் முயன்றயால், உறவு சிறக்கும்!
ஆழ்கடலும் சிகரமும் அளவையில் உச்சம்;
கொஞ்சம் முயன்றால், காலடியில் கிடக்கும்!
உலகில் யாவையும் உன்னால் முடியும்;
கொஞ்சம் முயன்றால், பாரே போற்றும்!!
நவீன அடிமைகள்
அடிமை இலக்கணம்,
இருந்தது இங்ஙனம்:
வந்தார்கள்; வென்றார்கள்!
வாழ்வுரிமை மறுத்தார்கள்,
விலங்கு இட்டார்கள்,
விலைக்கு விற்றார்கள்,
வேற்றுநாடு கடத்தினார்கள்!
நவீன அடிமைகள் நாம்,
இன்று இருப்பது இங்ஙனம்:
பொருளாதார மாய வலை,
இணையம் கொண்டு விரித்தார்கள்,
மது அடிமை ஒருசாரார்,
மாது மனை ஒருசாரார்,
புகழ் அடிமை ஒருசாரார்,
பணம் தின்னும் ஒருசாரார்,
திறனில்லா வெறும் படிப்பு,
திடக்கழிவு அதன் படைப்பு!
இன்ப விவசாயம் தானிருக்க,
இரவுப் பணி இனிக்கிறது!
மமதை கண்ணை மறைக்கிறது,
மரபு அதை மறுக்கிறது,
தற்சார்பு இல்லா யாவும்,
அடிமைத்தனம் என கொள்க!
விழிப்புடன் நாம் இருந்து,
விலங்கு அதை உடைத்திடுக!
-
சு. அனந்த பத்மநாபன்
Very nice
Superb
அருமையான கவிதை.
Excellent Anandh. Way to go…